3 நரசிம்மர் ஆலயங்கள் - ஒரே நாளில் தரிசித்தால் இவ்வளவு நன்மைகளா?

ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய, ஒரே நேர்க் கோட்டில் அமைந்த... 3 நரசிம்மர் ஆலயங்கள்!
Lakshmi Narasimha temples
Lakshmi Narasimha temples
Deepam strip
Deepam strip

நரசிம்ம அவதாரம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை உலகத்தோருக்கு உணர்த்திய வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறது. பக்தி மட்டுமே பிரதானமாக கருதி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஸ்ரீ நரசிம்மருக்கு தமிழ் நாட்டில் அஷ்ட நரசிம்மர் ஆலயங்கள் என்று சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள் கோவில், அந்திலி மற்றும் சிந்தலவாடி ஆகிய இடங்களில் கோவில்கள் உள்ளன. ஆனால் ஒரே நேர்க் கோட்டில் அமைந்துள்ள மூன்று நரசிம்மர் ஆலயங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த கோவில்கள் சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

1. சிங்கிரிக்குடி

Singirikudi Lakshmi Narasimha temple
Singirikudi Lakshmi Narasimha templeImage credit: vikatakavi.in

புதுச்சேரியிலிருந்து சிங்கிரிக்குடி ஆலயம் மிக அருகில் உள்ளது. எனவே, ஒரே நாளில் இந்த மூன்று ஆலயங்களை வழிபட விரும்புவோர்கள் புதுச்சேரியிலிருந்து இந்த நரசிம்மர் வழிபாட்டை துவங்கலாம். சிங்கிரிக்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் திருநாமம் ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்பதாகும். இவர் உக்கிர நரசிம்மராக காட்சியளிக்கிறார். இவர் 16 கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரண்டு கரங்கள் இரணியகசிபுவின் உடலை கிழித்தபடியும், மற்ற கரங்களில் பிரயோக சக்கிரம், ஷீரிகா என்னும் குத்துக்கத்தியால் ராட்சசனின் தலையை அறுத்தல், மற்றொரு கையில் கத்தியால் அசுரன் ஒருவனை கொல்லுதல், ஒரு கையால் இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலை கிழிப்பது, மற்ற கரங்களில் சங்கம், கதை, வில், கேடயம், வெட்டப்பட்ட தலை என்று காட்சி தருகிறார். இங்கேயிருக்கும் தாயாரின் திருநாமம் கனக வல்லி தாயாராகும். இங்கு வந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத்தடை, எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது சிங்கிரிக்குடி.

2. பூவரசங்குப்பம்

Poovarasan Kuppam Narasimha temple
Poovarasan Kuppam Narasimha temple

நேர்க்கோட்டில் உள்ள நரசிம்மர் வரிசையில் இரண்டாவதாக செல்ல வேண்டியது பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயம். இது சிங்கிரிக்குடியிலிருந்து 26 கி. மீ தொலைவில் உள்ளது. இந்த தலத்திலும் ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ‘ என்னும் திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். மூலவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் அமிர்தவல்லி தாயாரை அணைத்து கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். இந்த நரசிம்மரை வழிபட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிணிகள், மற்றும் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

இதையும் படியுங்கள்:
சித்திரை முதல் நாள்: தமிழகத் திருக்கோவில்களின் அதிசய நிகழ்வுகள்!
Lakshmi Narasimha temples

3. பரிக்கல்

Parikkal Lakshmi Narasimha temple
Parikkal Lakshmi Narasimha templeImage credit: hrce.tn.gov.in

பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கி. மீ தொலைவில் உள்ளது மூன்றாவதாக வழிபட வேண்டிய பரிக்கல் நரசிம்மர் ஆலயம். இங்கேயும் இறைவன் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், தாயார் திருநாமம் கனகவல்லி தான். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், இழந்த பதவியை மீண்டும் அடைய முயற்சிப்பவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்து பயன் பெறலாம். விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 21 கி. மீ தொலைவில் பரிக்கல் இருக்கிறது.

இந்த மூன்று லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த மூன்று நரசிம்மர் ஆலயங்களுக்கும் சென்று இறைவனை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வரிசைப்படி காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசங்குப்பம், இறுதியில் பரிக்கல் என்று தரிசிக்க வேண்டும். இந்த முறையில் தரிசித்தால் கடன், குடும்பப்பகை, மற்ற குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com