சித்திரை முதல் நாள்: தமிழகத் திருக்கோவில்களின் அதிசய நிகழ்வுகள்!

tamil-temples-during-chithirai
tamil-temples-during-chithirai
Published on

தொண்டைமான் என்ற அரசனின் யானை முல்லைக் கொடிகள் நிறைந்த காட்டில் சிக்கி, தவித்தது. கொடிகளை அகற்ற வாளினை வீசினான் அரசன். அப்போது இறைவன் தோன்றி அருள்பாலித்தார். அரசன் வீசிய வாளால் ஏற்பட்ட தழும்பினை அம்பத்தூர் அருகிலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணி ஈஸ்வரர் மீது காணலாம். அந்த இடத்தில் சந்தனக் காப்பிடப்பட்டு இருக்கும். இந்த சந்தனக்காப்பு ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை முதல் நாள் களையப்பெற்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குமரன் குன்றம் ஸ்ரீபாலசுப்ரமண்யர் கோயில் சென்னை குரோம்பேட்டைக்கு அருகில் திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு இடையே ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் இத்தலம், "குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை முதல் நாள் இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அதேபோல் தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி கோவிலில் சித்திரை முதல் தேதியன்று சிறப்பு படி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை ரெட் ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில், சுமார் 1500 ஆண்டுகள் பழமையான சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது சூரியபகவான் வழிபட்ட நவகிரக பரிகார ஸ்தலமாகவும், கண் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும் தலமாகவும் விளங்குகிறது. சித்திரை மாதம் முதல் ஏழு நாட்கள் அம்பாள், ஈஸ்வரன் மேல் சூரிய ஒளி விழுகிறது. இதனை சூரியன் ஈஸ்வரனுக்கு பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த தினங்களில் சிவனுக்கு உச்சிக்கால பூஜைகள் செய்வதில்லை.

கும்பகோணத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் காருண்ய தீர்த்தம் உள்ளது. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தலத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட அம்பிகை ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அது ஒரு குளமாக உருவானது. கருணைமிக்க அம்பாளின் கண்ணிலிருந்து தோன்றியதால் இது, காருண்ய தீர்த்தம்! சித்திரை முதல் நாள் இதில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஏன் இங்கு ஏர் பூட்டி உழுவதில்லை? - ராமேஸ்வரம் மணல் லிங்கம் சொல்லும் ரகசியம்!
tamil-temples-during-chithirai

முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், முத்தனம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான அம்மன் கோயிலாகும். இது திருப்பூர் - காங்கேயம் சாலையில் 6 கிமீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ம் தேதி அன்று மட்டும் சூரிய உதயத்தின் போது அம்மனின் முகத்தில் சூரிய ஒளிபடுகிறது. இது வேறு எங்குமில்லாத தனிச்சிறப்பாகும். சூரியபகவனே அம்மனை வணங்கிச் செல்வதாகக் கருதப்படுகிறது.

தேனி நகராட்சிப் பகுதியில் அல்லிநகரத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் மலையிலிருந்து வரும் வாய்க்கால் எனும் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது. வீரப்ப அய்யனார் கோயில். இந்த அய்யனார் இடது புறம் ஒரு தழும்புடனே காட்சி தருகிறார். இவர் கல்லாக அந்த பகுதியில் கிடந்தபோது யாரோ ஒரு பக்தர் தெரியாமல் கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்பு. இங்கு சித்திரை முதல் நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இன்றும் சுவாமியை கோடாரியால் வெட்டியவர்களின் பரம்பரையில் இருந்து ஒருவர் வந்து அந்த தழும்பிற்கு மருந்திடுகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயில். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சித்திரை 3 முதல் 10 வரை சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது விழுவது சிறப்பு. பொதுவாக சில கோயில்களில் அங்குள்ள சுவாமி மீதோ, அம்பாள் மீதோ சூரிய ஒளிபட்டு பிரதிபலித்து சூரியன் வழிபாடு செய்வதைக் காணலாம். ஆனால், இங்கு சித்திரையில் அதிகாலை சூரிய உதயத்தின்போது கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும், அம்பாள் சன்னதியில் உள்ள அம்பாள் விக்ரகத்தின் மீதும் ஒரே நேரத்தில் சூரிய ஒளிவிழும். அதுவும் சரியாக இரண்டு நிமிடம் மட்டுமே. இது வேறு எங்கும் இல்லாதது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பாளையம் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் 6000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் சித்திரை முதல் நாள் மட்டும் சிவபெருமானுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. சித்திரை முதல் நாள் இக்கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள், குழந்தை பேரின்மை, பிரம்மஹத்தி தோஷங்கள், பித்ரு சாபங்கள் இவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். எனவே அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
துளசி தீர்த்தம் கங்கைக்கு நிகரானதா? - ஆன்மீகம் காட்டும் அற்புதத் தகவல்கள்!
tamil-temples-during-chithirai

திருநெல்வேலியிலிருந்து 30 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது கயத்தாறு. இங்குள்ள கோதண்ட ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாள் கோதண்ட ராமேஸ்வரர் மீது சூரியன் தன் கதிர்களை தழுவி வழிபடுவது சிறப்பு. ராமர் சிவனிடம் கோதண்டம் பெற்ற திருத்தலம். இங்கு லிங்கத்தை வழிபடும் ராமர் சிற்பத்தை காணலாம்.

விழுப்புரம் பனையாபுரம் திருப்புறவார் பனங்காட்டீசன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை முதல் நாளிலிருந்து தொடர்ந்து 7 நாட்கள் சூரிய உதயத்தின்போது சூரியன் தன் பொற்கதிர்களை பனங்காட்டீசன் தலை மீது பாய்ச்சுகிறார். அதன் பிறகு அது மெல்ல கீழே இறங்கி சிவனின் பாதத்தை அடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com