

பொறுமைபோல் சிறந்த குணம் வேறல்ல.
பொறுத்தார் பூமி ஆள்வார்!
பொறுமைக்கு பூமாதேவி என்று நாம் கேள்விபட்டு இருக்கிறோம். தர்மாவில் மிகச் சிறந்த நெறி பொறுமையே…!
ராமாயணம் என்ற இதிகாசத்தை எடுத்துக் கொள்வோம். இதி+ ஹ + ஆஸதான் இதிகாசம். இது ஒரு சமஸ்கிருத சொல். அதற்கு அர்த்தம் ‘இவ்வாறுதான் உண்மையாக நடந்தது'. 'பழங்காலத்து உண்மையான சரித்திரம்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்
ராமாயணம் கற்பனை அல்ல.
இப்போது, நமக்கு ராமாயண கதை வேண்டாம். ஆனால், வால்மீகி, ராமாயண படைப்பில் ‘பொறுமை’க்கு ஒரு பெரிய இடத்தை அளித்து உள்ளார்.
முதலில் ராமன். தசரதன், ராமரை 14 வருடங்கள் வனவாசம் செய்ய சொன்னப்போது ராமன் ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று ஒரு கேள்வியும் கேட்காமல் புறப்பட்டு விட்டார். ஒரு வருடம் அல்ல; இரண்டு வருடம் அல்ல; மொத்தம் 14 வருடங்கள்.
பொறுமைக்கு எடுத்துக்காட்டாக சீதையும், பாசம் மிக்க லட்சுமணனும் புறப்பட்டு விட்டார்கள்.
மூவரும் ராஜ பரம்பரையில் இருந்து வந்தவர்கள். வனவாசம் என்பது கொலையைவிடக் கொடியது. ஆனால், வனவாசத்தில் மூவரும் மிகவும் பொறுமையுடன் வாழ்ந்தார்கள்.
இடையே அனுமன் நட்பு கிடைத்தது. அனுமன் ராமனைத் தெய்வமாக பார்த்தார். சீதையைத் தேடி அலைந்து திரிந்து தேடினார். கடைசியில் அவரது பொறுமைக்கு கிஷ்கிந்தாவில் சீதையைக் கண்டார். எத்தனை துன்பம் வந்தபோதும் சீதையைக் கண்டுபிடிப்பதே அவரது ஒரே லட்சியமாக இருந்தது.
ஆம். அவர் பொறுமைக்குப் பலன் கிடைத்தது.
சீதா... கற்புக்கு அரசி. அவள் கணவன்மீது முழு நம்பிக்கை வைத்து இலங்கையில் பொறுமையுடன் வாழ்ந்தார். அவர் நினைத்து இருந்தால் உயிரை விட்டு இருக்கலாம். ஆனால், அவரது பதிபக்தி அவரைப் பொறுமையாக… மிக மிகப் பொறுமையாக ஆக்கியது.
அயோத்தியில் பரதன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு மனசே கேட்கவில்லை. ஸ்ரீ ராமர் உட்கார வேண்டிய சிம்மாசனத்தில், தான் உட்கார்ந்து இருப்பது அவருக்குத் துளியும் பிடிக்கவில்லை. அரியணை சிம்மாசனத்தில் ராமரின் பாதுகையை வைத்து, மிகவும் பக்தியுடன் ராமர் திரும்பி வருகைக்காக மிக மிகப் பொறுமையாக இருந்தார்.
ராமர் பொறுமையாக இருந்தார்; சீதா பொறுமையாக இருந்தார்; அனுமன் பொறுமையாக இருந்தார்; பரதன் பொறுமையாக இருந்தார்.
இப்படி ராமயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் மிக பொறுமையுடன் வாழ்ந்தார்கள்.
பொறுமைக்கு வேறு ஒரு கோணத்தையும வால்மீகி எடுத்துக்காட்டினார்.
ராவணன்! பெண்ணாசை பிடித்தவன். சீதையைப் பலாத்காரம் செய்து அடைய நினைக்கவில்லை. சீதையை சம்மதிக்க வைக்கவே விரும்பினான். அவனும் பொறுமையுடன்தான் இருந்தான். அவன் நல்லவன். ஆனால், பெண்ணாசை பிடித்தவன். சீதா மீது வெறிப்பிடித்து காத்து இருந்தான்.
அவன் தம்பி வீபிஷணன் நல்லவன். ராவணனுக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டே இருந்தான். பொறுமையுடன் இருந்தான்.
ஆனால், எல்லை மீறி ராவணன் சென்றப்போது இலங்கையைவிட்டு தனது பதவியைத் துறந்து ராமனிடம் சரண் புகுந்தான். ‘பொறுமைக்கு எல்லை உண்டு’ என்பதை வீபிஷணன் கதை சொல்லும்.
இப்படி ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களில் எல்லோரும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். இதன் உச்சியில் போரில் ராவணன் ஆயுதமின்றி இருக்கும்போதுகூட ராமன் பொறுமையாக…
“இன்று போய் நாளை வா..!” என்றார்.
ராமாயணம் பொறுமையைத் தூக்கி பிடிக்கிறது.
பூமாதேவியின் மகளான சீதா பொறுமையுடன் வாழ்ந்தது சிறப்பே…!
‘எல்லோருக்கும் வேண்டியது பொறுமை…!’