சித்திரா பௌர்ணமியின் வரலாற்றை அறிவோம்!

madurai meenakshi sundareswarar
madurai meenakshi sundareswarar

மாதத்துக்கு ஒரு நாள் முழுநிலவு தினமான பௌர்ணமி வருகிறது. சில மாதங்களில் இரண்டு முறையும் வருவதுண்டு. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இந்த நன்னாளில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. இன்று கடல் மற்றும் புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

சித்திரம் என்றால் உடம்பு என்று ஒரு பொருள் உண்டு. குப்தன் என்றால் கணக்கு. சித்திரகுப்தன் முதலில் பார்வதி தேவிக்கு ஒரு சித்திர வடிவில் பிறந்தார் என்பதும் பின்னர் கோமாதா காமதேனுவின் வயிற்றில் நுழைந்து சித்திரா பௌர்ணமி நாளன்று பிறந்தார் என்பது ஐதீகம். மேலும், சித்திரா பௌர்ணமி அன்றுதான் சித்திரகுப்தனின் திருமணம் நடைபெற்றதாகவும் ஐதீகம்.

யமலோகத்தில் மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தருக்கான விழாவாக இந்நாள் கொண்டாடப்படுகின்றது. சித்திரா பௌர்ணமி நாளில் விரதமிருந்து சித்திரகுப்தரை வணங்கினால் அவர் நமது பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இன்றைய நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கினால் முற்பிறவியில் செய்த பாவங்களும், இப்பிறவியில் செய்த பாவங்களும் அகலும் என்பதும் ஒரு நம்பிக்கை.

இந்திரனின் குரு பிரகஸ்பதி ஆவார். ஒரு சமயம் இந்திரன் பிரகஸ்பதியை மதிக்கத் தவறியதன் காரணமாக அவர் இந்திரனை விட்டு விலகினார். குருவின் வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்யத் தொடங்கினான். இதை அறிந்த குரு பிரகஸ்பதி மீண்டும் இந்திரனிடம் வந்தார். இந்திரன் தனது குரு இல்லாத நேரத்தில் தான் செய்த தவறுகளுக்கு பரிகாரம் தேட விரும்பி, தனது குருவான பிரகஸ்பதியிடம் கேட்டபோது அதற்கு குரு பிரகஸ்பதி, இந்திரனை புனித யாத்திரை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:
முட்டைக்கோஸ் சாற்றில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
madurai meenakshi sundareswarar

அதன்படி புனித யாத்திரை மேற்கொண்ட இந்திரன் மதுரையில் ஒரு இடத்தை சேர்ந்தபோது, தனது தோளில் இருந்த பாவச்சுமையானது திடீரென விலகியதை உணர்ந்தார். அங்கு கடம்ப மரத்தடியில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அருகில் இருந்த குளத்தில் பூத்துக்கிடந்த தாமரை மலர்களைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். இவ்வாறு இந்திரன் ஈசனை வழிபட்ட நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரா பௌர்ணமி நாளன்று தேவேந்திர பூஜை நடைபெறுகிறது.

சித்திரா பௌர்ணமி தினத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் மிகவும் அவசியமாகும். ஏனெனில், இந்த தினத்தில் கோயில்களில் சக்தி அதிகரிப்பதாக ஐதீகம். இந்த நாளில் கோயிலுக்குச் சென்று வணங்கினால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு அதன் தாக்கத்தால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து நமக்கு நன்மை கிடைக்கும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.

சித்திரா பௌர்ணமி அன்று அவரவர் குலதெய்வம் மற்றும் மூதாதையர்களை வழிபட்டால் கர்மவினைகள் அகலும் என்பது ஐதீகம். சித்திரா பௌர்ணமி நாளில் தான தர்மங்கள் செய்தால் அது நம்மையும் நம் குழந்தைகளையும் அடுத்து வரும் ஏழு தலைமுறைகளுக்கும் காக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com