கோதா ஸ்துதி கொண்டு கோதையை துதிப்போம்!

கோதா ஸ்துதி கொண்டு கோதையை துதிப்போம்!
Published on

ன்று திருவாடிப்பூரம். வேதத்தின் வித்தான திருப்பாவையை நமக்கெல்லாம் அருளிச்செய்த பாவையான கோதை நாச்சியார் என்னும் ஆண்டாள், இவ்வையகத்தில் தோன்றிய திருநாள் இன்று. திருமாலின் பெருமையை திருப்பாவை வழி பாடித்தந்த ஆண்டாளின் பெருமையை ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன் தமது, ‘கோதா ஸ்துதி’யில் பாசுரங்களின் வழியே பாடி, தாமும் ஆனந்தப்பட்டு நம்மையும் ஆனந்தத்தில் நீராட்டுகிறார்.

‘கோதா’ என்பதற்கு, ‘வாக்கைக் கொடுப்பவள்’ என்று அர்த்தம். நல்வாக்கையும், மங்கலமான நல்வாழ்க்கையும் கொடுத்தருள்பவள்தானே கோதை? ஒரு முறை ஸ்வாமி தேசிகன், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றிருந்த சமயம். பிரதோஷ நாட்களில் மெளன விரதம் மேற்கொண்டிருக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தார் ஸ்வாமி தேசிகன். ஒரு பிரதோஷ நாள் அன்று மாலை வேளையில், ஸ்வாமி தேசிகன் முழு மெளனத்திலிருந்த சமயம், பிரதோஷ காலம் முடிந்த பின் ஆண்டாளின் சன்னிதிக்குச் சென்று தாயாரை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் ஸ்வாமி தேசிகன் நினைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அவர் இருந்த இடத்தை நோக்கி மங்கல வாத்தியங்கள் முழங்கும் சத்தம் கேட்டது. அப்போது அந்த வழியே அவர் வீட்டு வாயிலுக்கு முன் வந்தது சாட்சாத் கோதையேதான். கோயிலிலிருந்து வேறு வீதியின் வழியாகத்தான் அன்றைய தினம் கோதைக்கு புறப்பாடு ஆகி இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட அந்த வீதியில் ஏதோ ஒரு  நிகழ்வு நடந்து விட்டதால் (தீட்டு) அந்த வீதியை தவிர்க்கும்படி ஆகி விட்டது. ஆதலால், மாற்று வழியாக தேசிகன் தங்கி இருந்த வீதிக்கு வந்து தேசிகனின் வாயிலில் வந்து அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் வாயிலிருந்து ‘கோதா ஸ்துதியை’ தானே வரவழைத்துக் கொண்டு விட்டாள் ஆண்டாள்.

‘ஸ்ரீ விஷ்ணு சித்தருடைய (பெரியாழ்வாருடைய) நந்தவனத் தோட்டத்தில் தோன்றிய கற்பகக் கொடியும், ஸ்ரீ ரங்கராஜன் எனும் ஹரி சந்தன விருக்‌ஷத்தை மணம் புரிந்து அவனைத் தழுவி நிற்கும் கொடி, பூமி பிராட்டியின் அவதாரம், கருணையே உருவாகி, பெரிய பிராட்டியை போல் இருப்பவள், இப்படிப்பட்ட கோதா தேவியை எந்த புகலும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன்’ என்று தமது கோதா ஸ்துதியின் முதல் ஸ்லோகத்தில் துதிக்கிறார் தேசிகன். ‘வேதங்களால் கூட கோதையின் கல்யாண குணங்களை முழுமையாகக் கூற முடியாது’ என்று சாதிக்கும் தேசிகன், ‘வாக்குகளின் தேவதையே நீயேதான், அடியேனுக்கு சரியான வார்த்தைகளை எடுத்துத் தந்து உன் புகழ் பாட, கவிமழை பொழிய செய்ய வேண்டும். உன் காலில் ஒலிக்கும் கொலுசின்  இனிய ஓசை கேட்டு சந்தோஷப்படும் ஸ்ரீரங்கநாதர், அடியேனின் இந்த கவிதையையும் கேட்டு சந்தோஷமடையும்படி நீயே கவி தீட்டி கொள்வாய்’ என்றே வேண்டுகிறார்.

‘பலவிதமான பாவங்களைச் செய்த எங்களை, எம்பெருமான், தாயே உன்னை துதிக்கும்போது, உன் ஸ்தோத்திரங்களைப் பாடும்போது, எங்களை மன்னித்து அனுக்ரஹித்து விடுவார். பகவானையே பக்தியாலும் பாசுரங்களாலும் கட்டிப்போட்ட, பூமாலை சூடிக்கொடுத்த நாச்சியார், பாமாலை பாடிக்கொடுத்த நாச்சியார் அல்லவா ஆண்டாள்? சந்திரனின் மறு உருவம் நீயே தேவி’ என்று போற்றும் ஸ்வாமி தேசிகன், சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களால், இவ்வுலகை குளிர்விப்பதைப் போல, நீ உன் பாசுரங்களால் இவ்வுலக மக்களைக் குளிரச் செய்கிறாய். சந்திரனை ஸ்ரீ லக்ஷ்மியின் சகோதரன் என்று சொல்வதைப் போல, தாயே உன்னை லக்ஷ்மியின் சகோதரி என்றே அழைத்தல் தகும்’ என்று குளிர குளிர தம் கோதா ஸ்துதியின் வழியே ஆண்டாளை ஸ்தோத்திரம் செய்யும் ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகனையும், தன் கருணையால் அள்ள அள்ள தயை புரியும் ஆண்டாளையும் அவள் தன் திருநட்சத்திர தினமான இன்று மனதில் தியானிப்போம், அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com