’மகாளய பட்ச அமாவாசை’ பற்றி அறிந்து கொள்ளுவோமா?

Mahalaya Amavasai...
Mahalaya Amavasai...Image credit - ibctamil.com
Published on

காளய பட்ச அமாவாசையானது இந்துக்களிடையே மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்நாள் நமது முன்னோர்களை வழிபடுவதற்கான ஒரு முக்கியமான நாளாகும். முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. மகாளய பட்ச அமாவாசையைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

நமது முன்னோர்கள் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வருடமும் திதி கொடுப்பது வழக்கம். இதுமட்டுமின்றி ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் தர்ப்பணம் செய்து விடுவார்கள். இவற்றை எல்லாம் தவறாமல் கடைபிடிப்பவர்கள் ஒரு சிலரே. இவற்றில் எதையுமே செய்யாமல் இருப்பவர்களும் உள்ளனர். இத்தகையவர்களுக்காக உள்ளதே மகாளயபட்ச காலமாகும்.

புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியின் அடுத்தநாள் முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்கள் மகாளயபட்ச நாட்களாகும். முன்னோருக்குத் திதி நாள், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்யாதவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.

மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. காரணம் இந்த மகாளய பட்ச காலம் பதினைந்து நாட்களில் முன்னோர்கள் பித்ருக்களாக வானலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரைக் காண பூலோகம் வருவதாக ஐதீகம். மகாளய அமாவாசை அன்று நமது முன்னோர்கள் வீட்டின் முன்வாசல்படி வழியாக வீட்டிற்குள் நுழைவார்கள் என்பது ஐதீகம். ஆகவே அன்றைய தினம் வீட்டின் முன் வாசப்படியில் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது.

மகாளய பட்ச காலமான இந்த பதினைந்து நாட்களும் பித்ருக்கள் தமது குடும்பத்தினரின் வீட்டில் வசிப்பதாக ஐதீகம். தமது வாரிசுகள் தம்மை நினைத்து வணங்கி உணவு படைக்க மாட்டார்களா என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நமது முன்னோர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமையாகும். எனவேதான் நமது முன்னோர்கள் நமது வீட்டிற்கு நம்மைத் தேடி வரும் இந்த காலத்தில் அவர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கப் பிடித்தமான உணவினைப் படைத்தல் வேண்டும். மகாளய அமாவாசை எனப்படும் பித்ருக்கள் வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிப்பது கறுப்பு எள்ளும் தர்ப்பைப் புல்லும் ஆகும். இவை இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்தவை. எள் மகாவிஷ்ணுவின் திருமேனி வியர்வையில் இருந்து தோன்றிய தாவரம். தர்ப்பைப் புல் ஆகாயத்திலிருந்து தோன்றிய தாவரமாகும். எனவேதான் இவை இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மகாலட்சுமியின் அருள் கிடைக்கச் செய்யும் 6 பொருட்கள்!
Mahalaya Amavasai...

நமது மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகவும் எளிது. கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை முதலான புனித நீர் நிலைகளுக்குச் சென்று நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிக்கின்றதாகக் கருதப்படும் திசையான தெற்கு நோக்கி பனிரெண்டு முறை விழுந்து வணங்க வேண்டும்.

மகாளய அமாவாசை அன்றைய தினம் நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கினால் உங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com