மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்!
ஸ்ரீ கிருஷ்ணனின் ஜனனம் ஆவணியாவட்டம் கழிந்த எட்டாம் நாளன்று வரும் கிருஷ்ண பட்ச அஷ்டமியன்று ஏற்பட்டது. இது ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதுவே ஸ்ரீகிருஷ்ணாவதாரமெனக் கூறப்படுகிறது.
"எப்போதெல்லாம் அறம் அழிந்து மறம் பெருகுகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன். தவிர, நல்லவர்களை பாதுகாக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்ம நெறிகளை நிலை நாட்டவும், ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன் என்று
ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவதார நோக்கத்தை, பகவத் கீதையில், அர்ஜுனனிடம் கூறுவதுபோல, உலகிற்கும் பின்வரும் ஸ்லோகம் மூலம் உணர்த்துகிறார்."
"யதா யதாஹி தர்மஸ்ய க்ளாநிர் பவதி பாரத!
அப்யுத்தாந மதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யகம்!
பரித்ராணாய ஸாதூ நாம் விநாஸாய சதுஷ்க்ரதாம் !
தர்ம ஸம்ஸ்தாப நார்த்யாய ஸம்பவாமி யுகே யுகே! "
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று குஞ்சு கண்ணனை வரவேற்கும் பொருட்டு, மாக்கோலத்தினால் அவனது காலை வீட்டு வாசலில் ஆரம்பித்து, பூஜையறை வரை போடப்படுவது வழக்கம்.
இதன் பின்னணி :
ஆயர்பாடியில், கோபியர் இல்லங்களில் உறியிலிருந்த தயிர் சட்டிகளை உடைத்து குடிக்கையில், தயிர் கீழே சிந்தியது. தயிரில் மிதித்த சிறிய கால்களுடன் ஓடிய கண்ணனின் ஞாபகார்த்த சின்னம்தான் குஞ்சுக்கால் மாக்கோலம்.
தவிர, கம்சனைக் கொல்ல செல்கையில், கண்ணன் நற - நறவென பற்களைக் கடித்த காரணம், முறுக்கு --சீடை மற்றும் தயிர், பால், வெண்ணெய் ஆகியவைகள் நிவேதனப் பொருட்களாக வைக்கப்படுகிறது.
எண்ணெய் பிரித்தல்:
கிராமங்களில் சிறுவர்-சிறுமியர்கள் சேர்ந்து வீடு- வீடாக சென்று "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்! எண்ணெய் பிரியல் கண்ணனுக்கு கொடுங்க!" என்று கேட்டு பாத்திரத்தில் வாங்கி வருவார்கள். அதைக் கடையில் கொடுத்து பணம் பெற்று தின்பண்டங்கள் வாங்குவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நேரமாகிய இரவு மணி 12 வரை விழித்திருந்து விளையாடுவதும், கண்ணன் கதைகளைப் பேசுவதும், தின்பண்டங்களைச் சாப்பிடுவதுமாக இருப்பார்கள்.
பூஜையும், பலன்களும்:
காலையில் எழுந்து குளித்தபிறகு தூய்மையான ஆடைகளை அணிந்து ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி உபவாசம் இருக்க வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும் சமயம் ஸ்ரீகிருஷ்ணரின் போட்டோ அல்லது சிலையை வைத்து, துளசியால் பூஜிக்க வேண்டும். பால், வெண்ணெய், தயிர், அவல், பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
கிருஷ்ண அஷ்டோத்திர நாமாவளி கூறி, அர்ச்சனை செய்து, கற்பூரதீபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். நாராயணீயத்தில் உள்ள சில பாடல்கள் மற்றும் பாரதியாரின் கண்ணன் பாடல்களையும் பாடலாம்.
கண்ணனின் லீலைகளைப்பாடியும், கேட்டும், பேசியும் நினைத்தும் மகிழ்பவர்கள், அவனது பாதக் கமலங்களைக் காண்பார்களென பாகவதம் கூறுகிறது.
கண்ணன் நாமத்தை சொல்லி வணங்கினால், வழிகாட்டியாக செயல்பட்டு உதவுவான். இப்படி பல நன்மைகள் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.