

திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள நசரத்பேட்டைக்கு (Nazarethpettai) அருகில், அகரமேல் கிராமத்தில் பச்சை வாரணப் பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலை ஹரித வாரண பெருமாள் கோவில் (சமஸ்கிருதத்தில்) என்றும் அழைக்கிறார்கள். இக்கோவில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. இங்கு யுதிஷ்டிரர் தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக கிருஷ்ணர் பச்சை யானையாக தோன்றியதாக கூறப்படுகிறது. மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
மூலவர்: பச்சை வாரணப் பெருமாள்
தாயார்: அமிர்தவல்லி தாயார்
முதலியாண்டான் அவதார ஸ்தலமாகும்
தல சிறப்பு
பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டியும் அமர்ந்த கோலத்தில் மிக அழகாக காட்சி தருகிறார். அம்பாள் அமிர்தவல்லித் தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனி சன்னதி உள்ளது. கொடிக்கம்பமும், அதற்கு முன்பு விளக்கு கம்பமும் காணப்படுகிறது. அந்த விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சிறிய யானை சிலை ஒன்றுள்ளது.
எல்லா தூண்களிலும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கிருஷ்ணர், நரசிம்மர், ராமானுஜர் போன்றவர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
முதலியாண்டான் சன்னதி
பெருமாள் சன்னதியின் வலப்புறத்தில் முதலியாண்டான் சன்னதி உள்ளது. இது இவருடைய அவதார ஸ்தலமாகும். ராமானுஜருக்கு இரண்டு முக்கிய சீடர்கள் இருந்தனர். ஒருவர் கூரத்தாழ்வார், மற்றொருவர் முதலியாண்டான். இவர் கிபி 1027ல் பிறந்து கி.பி 1132 இல் 105 வருடங்கள் வரை வாழ்ந்து மறைந்தார்.
தல வரலாறு
மகாபாரதப் போரின் பொழுது அஸ்வத்தாமா என்ற யானை இறந்ததை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துரோணாச்சாரியாரிடம், அவர் மகன் அஸ்வத்தாமா இறந்து விட்டதாகக் கூற, அதை நம்ப மறுத்த துரோணாச்சாரியார், தன் சிஷ்யரான யுதிஷ்டிரரிடம் கேட்க, அவரும் தன் குருவிடம் அஸ்வத்தாமா என்பதை உரத்த குரலிலும், யானை என்பதை தீனமான குரலிலும் சொல்லி இறந்து விட்டதாகக் கூறினார். இதைக் கேட்ட துரோணாச்சாரியார் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
கிருஷ்ணரின் ஆணைப்படி அர்ஜுனனால் துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறக்க, அஸ்வத்தாமா என்ற யானை மற்றும் தன்னுடைய குரு இறந்ததற்கு யுதிஷ்டிரர் மிகவும் வேதனைப்பட்டு அந்தப் பாவத்திலிருந்து விடுபட வழி தேடினார். நாரதரின் அறிவுரைப்படி இங்கு வந்து யாகம் ஒன்றை நடத்த, அந்த யாகத்தில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணர் பச்சை வண்ண யானையாக காட்சி தந்தார். இந்த அவதாரத்தை நினைவுபடுத்தவே இத்தலத்தில் பச்சை வாரணப் பெருமாளாக (Pachai vaarana perumal temple) காட்சி தருகிறார்.
திருவிழாக்கள்
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் தொடங்கும் பிரம்மோற்சவமும், சித்திரை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் முதலியாண்டான் திரு அவதார உற்சவமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் இக்கோவிலில் பவித்ரோத்சவம் நடைபெறும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் நசரத்பேட்டை சிக்னல் வரும். அங்கிருந்து உள்ளே செல்ல இக்கோவிலை அடையலாம். கோவில் காலை ஏழு மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.