

சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் (Vekkaliyamman Temple history) சித்தர் ராமமூர்த்தி சுவாமிகளால் கட்டப்பட்டது. இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என நம்பப்படுகிறது. வெக்காளியம்மன் சிலை உடன் மகாவிஷ்ணு வெங்கடாஜலபதி சிலைகளும் பெரிய அளவில் கண்ணை கவரும் விதத்தில் உள்ளன.
வெக்காளியம்மன் கோவில் சிலை 42 அடி உயரம் உள்ளது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ள நீரூற்று சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. வற்றாத நீரூற்றாக உள்ளது. சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் சிந்தலக்கரை கிராமத்தில் வேலப்ப நாயக்கர் - சிலுக்கு அம்மாள் ஆகியோருக்கு பத்தாவது குழந்தையாக பிறந்தார். தனது சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது சக மாணவர்களுடன் சேர்ந்து களிமண்ணால் அம்மன் சிலையை உருவாக்கி அதனை வழிபட்டு வந்தார். பிறகு வயதாகும் போது அந்த களிமண் சிலையை ஒரு ஓலை குடிசையில் வைத்து வழிபட்டு வந்தார்
வெக்காளியம்மன் இவரது கனவில் தோன்றி தனக்கு சிந்தலக்கரையில் ஒரு பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்று சித்தர் சுவாமிகள் பல்வேறு இடங்களில் நிதியை திரட்டி சுமார் 42 அடி உயரத்தில் வெக்காளியம்மன் சிலையை நிறுவினார். காந்த சக்தி சூரிய சக்தி இரண்டும் சேரும் இடத்தில் இந்த சிலை உள்ளது சிறப்பு அம்சமாகும்.
இந்த சிலையை ஒட்டி சித்தர் பீடமும் அமைந்துள்ளது. ஆனி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் உள்ளூர் மக்கள் போக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். உள்ளூர் பக்தர்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி விரதம் இருந்து இருமுடி கட்டி ஊர்வலமாக வந்து சித்தர் பீடத்தில் இந்த இருமுடி கட்டை இறக்கி வைப்பார்கள்.
நிறைய பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வருவார்கள். அன்றைய தினம் ராமமூர்த்தி சுவாமிகள் பூக்குழி இறங்குவார். காலையில் இருந்து நடு இரவு வரை அன்னதானம் சிறப்பாக நடைபெறும். ஆனித் திருவிழாவின் போது இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். அதுதான் இந்த ஊரின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
அதாவது எம்மதமும் சம்மதமே என்று கொள்கை இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து செவ்வாடை தரித்து இருமுடி கட்டி வழிபடுவது வழக்கம்.
இந்த இடத்தில் சூரியஒளி கதிர்கள் 24 மணி நேரமும் பதிவு செய்யும். தேசிய பௌதீக ஆராய்ச்சி நிலையம் இந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த பூமியில் காந்த சக்திகள் எவ்வாறு வெளிப்படுகிறது, எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அளக்கும் இடமாகும். வெக்காளியம்மன் தன் சக்தி மூலம் ராமமூர்த்தி சுவாமிகளை தேர்வு செய்து தனக்கு ஆலயம் அமைத்துக் கொண்டார்.
பக்தியை மட்டும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு அம்மனை நேருக்கு நேர் பார்த்து வழிபடும் தெய்வமாக அன்னை வெக்காளியம்மன் காட்சி தருகிறார். இந்த வெக்காளியம்மன் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்குகிறார். எனவே இங்கு செவ்வாய் வெள்ளி ஆகிய கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
வார இறுதி நாட்களிலும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். வேண்டிய வரங்களை தரும் வெக்காளி அம்மனை நாமும் தரிசிப்போம்.