திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவாசி எனும் ஊர். இங்கு உள்ள மாற்றுரைவதீஸ்வரர் திருக்கோவில் பல்வேறு அற்புதங்களை கொண்டது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றதில் 62 ஆவது பாடல் பாடப் பெற்ற திருத்தலம் இதுவாகும். சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் அமைந்துள்ள திருத்தலம். நோயை நாகமாக மாற்றி அதன் மீது சிவபெருமான் ஏறி நின்று நடனம் ஆடிய திருத்தலம்... என பல்வேறு சிறப்புகளை பெற்ற திருவாசி சிவன் திருத்தலத்தை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திருவாசி மாற்றுரைவதீஸ்வரர் திருத்தலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிவன் திருத்தலங்களில் சிவபெருமானே தனக்கு விருப்பத்திற்குரிய தலமாக இந்த தலத்தை கூறியதாக சொல்லப்படுகிறது. ஒருமுறை அம்பிகையின் கேள்விகளுக்கு சிவபெருமான் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது 'வேதங்களும் வேத பண்டிதர்களும் தவம் இயற்றும் இந்த திருப்பாச்சில்லாராமமே என் விருப்பத்திற்குரிய தலம்' என்று கூறியதாக புராணக்கதை ஒன்று உள்ளது.
ஒருமுறை இந்தப் பகுதியில் ஆட்சி செய்து வந்த கொல்லிமழவன் என்பவரின் மகள் தீராத நோயால் அவதிப்பட்டுவர, பல்வேறு வைத்தியம் பார்த்த மன்னன், நோய் தீராததால் நோயை தீர்க்கும் பொறுப்பை ஈசனிடமே விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அப்பொழுது அங்கு வந்த திருஞானசம்பந்தர்,
"துணிவளர் திங்கள் துளங்கி விளங்க"
எனும் பதிகம் பாடி நோயை தீர்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இத்திருத்தலத்தில் சிவபெருமானே நோயை பாம்பாக மாற்றி அதன் மீது ஏறி நின்று நடனம் ஆடினார் என்றும், அதனால்தான் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவமில்லாமல் நாகத்தின் மீது நடனம் ஆடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
திருத்தல யாத்திரையின் போது அடியாருக்கு உணவு வழங்குவதற்காக ஒவ்வொரு முறையும் சுந்தரர் ஈசனிடம் பொன் பெறுவது வழக்கம். அவ்வாறு ஒரு முறை பொன் பெறும் போது, ஈசனே மாற்று உருவம் எடுத்து வந்து சுந்தரர் பெற்ற தங்கத்தின் தரத்தை மதிப்பிட்டு கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இத்திருத்தலத்திற்கு மாற்றுரைவதீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் புராணக்கதை உள்ளது.
இத்திருத்தலம் அன்றைய காலம் தொட்டு தீராத நோய்களை தீர்க்கும் திருத்தலமாக மக்களால் நம்பப்படுகிறது. வலிப்பு, வாதம், தண்டுவட பிரச்சனைகள், வயிற்று வலி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சர்ப்ப பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவை இங்குள்ள ஈசனை வழிபட்டால் தீருவதாக மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. அதன்படி திங்கள்கிழமைகளில் 7 விளக்குகளில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தீராத நோய்கள் தீருவதோடு, பொருளாதார சுபிட்சமும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
பராசக்தி, பிரம்மன், திருமகள், அகத்தியர் போன்றோர் வழிபட்ட இத்திருத்தலத்தில் தேவி அன்னப்பறவையாக உருவெடுத்து அன்னமாம் பொய்கை என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதன்படி திருமணம் ஆகாதோர் 5 வெள்ளிக்கிழமைகளில் அன்னமாம் பொய்கையில் நீராடி வழிபட்டு வந்தால் கூடிய விரைவில் திருமணம் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இத்திருத்தலத்தில் பாலாரிஷ்டம் எனும் பிரசித்தி பெற்ற பரிகாரம் ஒன்றும் பச்சிளம் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. அதன்படி பச்சிளம் குழந்தைகள் பால் குடிக்காமல் அடிக்கடி அழுது கொண்டே இருந்தால் இத்திருத்தலத்தில் பாலாரிஷ்டம் எனும் பரிகாரத்தை செய்யும் போது அந்த தோஷம் நீங்கி குழந்தை நலம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தலத்தில் தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது. கருவறையில் சிவபெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் வைகாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் 11 நாட்களும் இங்கு நடைபெறும் முத்து பல்லக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
இத்தகைய புராண சிறப்பம்சங்கள் நிறைந்த திருத்தலத்தை நீங்களும் ஒரு முறை தரிசித்து சிவபெருமானின் அருள் பெற்று வாருங்கள்!