சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை பூஜிக்கும் 18 சிவத்தலங்கள்!

சிவத்தலங்கள்...
சிவத்தலங்கள்...

தமிழ்நாட்டில் அமைந்த பல சிவத்தலங்களில் வருடத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை வழிபடுகிறார். சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். அப்படிப்பட்ட சில தலங்கள் பற்றிப் பார்ப்போம்:

1. பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர் கோயிலில் மாசி மாதம் 21 முதல் 25 முடிய ஐந்து தினங்களில் நடைபெறும் சூரிய பூஜையின் போது கதிரவன் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறார்.

2. புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் நகரின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில். கோயில்பத்து எனவும் அழைக்கப்படும் இத்தலம். பங்குனி 13 முதல் 22 முடிய பத்துநாட்கள் மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.

3. சென்னையில் வேளச்சேரி விஜய நகரில் அருள்மிகு தண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் தை மாதம் முதல் தேதி சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது.

4. வட சென்னையில் வியாசர்பாடியில் ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருளுகிறார். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். தினமும் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்க வடிவ துளையின் வழியாக சுவாமியின் மீது விழுகிறது. இத்தலத்தில் தினமும் சூரியபகவானே தன் ஒளிக்கதிர்களை வீசி சிவனுக்கு முதல் பூஜை செய்கிறார்.

5. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த சின்னவெண்மணி என்ற ஊரில் அமைந்துள்ளது பீமேசுவரர் கோயில். இத்தலத்தில் மூலவர் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் இரண்டு நாளும் பின் இரண்டு நாளும், பங்குனி உத்திரத்திற்கு முன் இரண்டு நாளும் பின் இரண்டு நாளும் காலை 6.20 மணியில் இருந்து 6.40 மணி வரையில் சூரியன் ஒளி நேராக மூலவரின் மீது படும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

6. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த பனையபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சத்யாம்பிகை சமேத ஸ்ரீபனங்காட்டீஸ்வரர் திருக்கோயில். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும் பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

7. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்த பரிதியப்பர்கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில். இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறார்.

8. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கண்டியூரில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் கோயிலில் மாசியில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை 05.45 மணிமுதல் 06.10 மணிவரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.

9. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறைக்கு வடமேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னூர் என்ற இடத்தில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சூரியபகவான் ஆண்டுதோறும், பங்குனி மாதம் 26 முதல் 30 வரை ஐந்து நாட்களும் தனது ஒளிக்கதிர்களால் ஈசனை ஆராதித்திக்கிறார்.

10. கும்பகோணத்ததிற்கு அருகில் அமைந்த திருநாகேஸ்வரம் என்ற தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபெரியநாயகி சமேத நாகேசுவரசுவாமி கோயில். இத்தலத்தில் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின்மீது நேராக விழுவதைக் காணமுடியும்.

11. நாமக்கல் மாவட்டத்தில் ஏ.மேட்டுப்பட்டியில் சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், மாசி மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களில், சூரிய வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

12. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலத்தில் அருள்மிகு கயிலாச நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பங்குனி 9,10,11 மூன்று தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்திதேவரின் இரு கொம்புகளின் வழியாகச் சென்று சிவலிங்கத்தை வழிபாடு நடைபெறுகிறது அதிசயம்.

இதையும் படியுங்கள்:
லேடீஸ் விரும்பும் லேட்டஸ்ட் ஃபாஷன் – லெக்கிங்ஸ் இந்த 10 வகைகள் மிகப் பிரபலம்!
சிவத்தலங்கள்...

13. சேலத்தில் மேச்சேரியில் அமைந்த பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது மாசி 21,22,23 தேதிகளில் சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிக்கிறார்.

14. சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் எனும் ஊரில் சாம்பமூர்த்திஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஐப்பசி 9 முதல் 15 ஆம் தேதி வரை சூரிய உதய நேரத்தில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது விழுகிறது.

15. திருவாரூர் மாவட்டத்தில் திருநெல்லிக்கா என்ற ஊரில் அருள்மிகு ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீநெல்லிவனநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேற்கு திசை நோக்கிய இத்தலத்தில் மாசி 18 முதல் 24 வரை ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது.

ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

16. திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15,16,17 ஆகிய நாட்களில் சூரியபகவான் சூரிய பூஜையினை நிகழ்த்துகிறார்.

17. மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ளது முத்தீஸ்வரர் கோயில். இக்கோயிலில் சூரிய கதிர்கள் சிவனை தரிசிக்கும் அதிசயம் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். இத்தலத்தில் ஆண்டுதோறும் மார்ச் 10 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலும் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது.

18. வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில். இத்தலத்தில் சிவலிங்கத்தின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 முதல் 24ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 21 முதல் 24ஆம் தேதி வரையிலும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுகிறது. இந்த நிகழ்வு காலை 6.30 மணி முதல் 6.50 வரை நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com