முக்தி அருளும் கீழ்படப்பை வீரட்டேஸ்வரர்!

வீரட்டேஸ்வரர்...
வீரட்டேஸ்வரர்...
Published on

ந்திரன், இங்கு வழிபட்டதை உணர்த்தும் விதமாக, கோயில் முன் மண்டபத்தில் இரு கைகளில் மலர் வைத்தபடி, சந்திரன் காட்சி தருகிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் தாமரை பீடத்தில் நவக்கிரக மண்டபம் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு.

அகோர வீரபத்திரர், தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியிருக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு வெற்றிலைக் காப்பிட்டு, விசேஷ பூஜை செய்கின்றனர். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு நான்கு கால பூஜையும் நடக்கிறது. காளத்தீஸ்வரர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோரும் உள்ளனர். சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், திருநாவுக்கரசர் குருபூஜை, ஆடி மாத சுவாமி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா நடக்கிறது. இந்த விழாக்களின் போது நாவுக்கரசர், சுந்தரருக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் புறப்பாடாவர். சுந்தரர், வெள்ளை யானையில் கைலாயம் சென்றதால், இவ்விழாவின்போது யானை வாகனத்தில் எழுந்தருளுவார். இந்த தரிசனம் கண்டால், முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் சாந்தநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை முழுமையாக தரிசிக்க முடியும். பணிவை உணர்த்தும் விதமாக இவளது சன்னதி இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பணிவு குணம் உண்டாகவும், எதற்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை உண்டாகவும் இவளுக்கு அபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆவுடையாருடன்...
ஆவுடையாருடன்...

தேவார வைப்பு தலம்: வீரட்டேஸ்வரர், மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு புலித்தோல் நிறத்திலான ஆடையையை பிரதானமாக அணிவித்தும், நெற்றியில் வெள்ளியிலான வில்வத்தையும் அணிவித்து அலங்கரிக்கிறார்கள். "படப்பை' என்றால், "பூஞ்சோலை' என்று பொருள். பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு மத்தியில் சிவன் காட்சி தரும் தலமென்பதால் இவ்வூர், "படப்பை' என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் வழியாக விருத்தாச்சலம் சென்ற திருஞானசம்பந்தர், விருத்தகிரீஸ்வரரை வணங்கி பதிகம் பாடியபோது, இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். எனவே, இத்தலத்தை தேவார வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை, "பொழில்சூழ் புனல் படப்பைதடத் தருகே' என குறிப்பிட்டுள்ளார்.

தாயின் பெயருடன் பிள்ளை: பொதுவாக பிள்ளைகளின் பெயருடன், தந்தையின் முதல் எழுத்தையோ அல்லது அவரது பெயரையோ பெயருடன் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால், இத்தலத்தில் உள்ள விநாயகர், தன் தாயின் பெயருடன் சேர்த்து அழைக்கப்படுகிறார். பார்வதியால், உருவாக்கப்பட்டவர் என்பதால் விநாயகர், அம்பிகையின் செல்லப்பிள்ளை ஆகிறார். எனவே, இவர் இத்தலத்து அம்பிகை சாந்தநாயகியின் பெயரால், "சாந்த விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையின் மீது காட்சி தரும் இவர், தன்னை வணங்கும் பக்தர்களின் கோபங்களைக் குறைத்து, சாந்த குணத்தை தருபவராக அருளுவதாலும் இப்பெயரில் அழைக்கப் படுவதாகச் சொல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தயக்கமும் பயமும்தான் நம் முதல் எதிரி!
வீரட்டேஸ்வரர்...

தட்சனின் பிள்ளைகளான கிருத்திகை, ரோகிணி முதலான 27 பெண்களை சந்திரன் மணந்து கொண்டான். ஆனால், அவன் ரோகிணியின் மீது மட்டும் அன்பு காட்டினான். இதனால் வருந்திய மற்ற மனைவியர், தங்களது தந்தை தட்சனிடம் கணவர் தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினர். எனவே கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் தேயும்படியாக சபித்து விட்டான். இந்த சாப விமோசனத்திற்காக சந்திரன், பூலோகத்தில் பல தலங்களில் சிவனை வழிபட்டான். இத்தலத்திலும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிவன் அசுரர்களை அழித்த எட்டு தலங்கள், "அட்டவீரட்ட தலங்கள்' எனப்படுகிறது. இதில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூர், அந்தகாசுரனை அழித்த தலமாகும். இத்தலத்து சிவனின் அம்சமாக, இங்கு சிவன் காட்சி தருவதாக ஐதீகம். எனவே, இங்கு சிவன் "வீரட்டேஸ்வரர்' என்றே அழைக்கப்படுகிறார். தலமும், "உப வீரட்ட தலம்' என்றழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் என்ற மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்று. இந்த அற்புதமான தலத்தை வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் சென்று வணங்கி வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com