திருமால் அவதாரத்தை அதற்குக் காரணமான அசுரனின் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? இதோ ஒரு வித்தியாசமான கற்பனை...
அரக்கன் ஹிரண்யகசிபுதான் எவ்வளவு கொடுத்து வைத்தவன்! நிந்திப்பதாகச் சொல்லிக் கொண்டு நாராயணனையே நாள்பூராவும் நினைத்துக் கொண்டிருந்தானே! அந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! 'நாராயணனை வணங்காதே, நாராயணன் பெயரைச் சொல்லாதே' என்று பிறரைத் தடுத்துக் கட்டுப்படுத்தினாலும், தான் மட்டும் மூச்சிழையாக நாராயண ஸ்மரணையாகக் கிடந்தானே!
அதுமட்டுமல்ல, தன் இறப்பும் அவனாலேயே நிகழ வேண்டுமென்றும் தீர்மானித்து விட்டவன் அவன்! அதற்காகவே, நாராயணனால் மட்டுமே எந்தவகை சட்ட திட்டங்களையும் அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, தன்னை வதம் செய்ய முடியும் என்றும் நம்பினான். அதனால்தான், அப்படி ஒரு வரம் கேட்டுப் பெற்றான்.
அதாவது பகலிலோ, இரவிலோ தன் உயிர் பிரியக் கூடாது, மனிதராலோ, மிருகத்தாலோ அது நடக்கக் கூடாது; வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, பூமியின் மீதோ அந்த சம்பவம் நிகழ்ந்துவிடக் கூடாது. எந்த ஆயுதத்துக்கும் என் உயிரைப் பறிக்கும் ஆற்றல் கூடாது....இது அவன் வேண்டி பெற்ற வரம்!
மனசுக்குள் சிரித்தபடி காத்திருந்தான் ஹிரண்யகசிபு. நாராயணன் எப்படியும் இந்த சவாலை வென்று விடுவான். என்னை வதம் செய்வான். எப்படிச் செய்வான்? என்னுடைய இத்தனை நிபந்தனைகளை எப்படி மீறி வருவான்? பார்க்கலாமா? ஒரு சுவாரஸ்யத்துடன் காத்திருந்தான்.
மேலோட்டமாக, தன் மகன் பிரகலாதன் உட்பட அனைவரையும் கடிந்து கொண்டான். ஏன் தண்டனையும் கொடுத்தான்! குறிப்பாக, பிரகலாதனுக்கு, உயிர் பிரிக்கும் கடுந்தண்டனையை அடுத்தடுத்துக் கொடுத்தான். மனசுக்குள்ளும் சொல்லிக் கொண்டான்: 'நாராயணன், பிரகலாதனைக் கை விட்டுவிடுவானா என்ன?'
அந்த நாளும் வந்தது. பிரகலாதன் தன் நாயகன் எந்தத் தூணிலும் இருப்பான், எந்தத் துரும்பிலும் இருப்பான் என்று சூளுரைத்தபோது, அப்போதும் நாராயணனோடு விளையாட நினைத்தான் ஹிரண்யகசிபு. உயர்ந்து நிமிர்ந்திருந்த அரண்மனைத் தூண்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த அவன், உள்ளூர சிரித்துக் கொண்டான். தன் பார்வை படும் தூண்களிலெல்லாம் நாராயணன் மாறி மாறி ஒளிந்து கொள்வதை அவன் அருவமாகக் கண்டான். பிரகலாதனும் தன் தந்தை எந்தத் தூணைக் காட்டப் போகிறானோ, அந்தத் தூணில் நாராயணன் இருக்கிறான் என்பதை உறுதிபடச் சொல்ல வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டிருந்தான். சங்கடப்பட்டவன் நாராயணனே!
'இதோ, இந்தத் தூணில் இருப்பானா?' என்று விஷமச் சிரிப்புடன் ஹிரண்யகசிபு கேட்டபோது, 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நாராயணன், அந்தத் தூணிலிருந்தே வெளிப்படத் தன்னைத் தயார் செய்து கொண்டார்.
தான் மூர்க்கன் என்பதைத் தன் கடைசி கட்டத்திலும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹிரண்யகசிபு, அந்தத் தூணைக் காலால் எட்டி உதைத்தான். தூண் பிளந்தது. நரசிம்மம் வெளிப்பட்டது. 'இதற்குத் தானே இத்தனை நாள் காத்திருந்தேன்!' என்று பொங்கி வந்த உணர்வை பனிக்கும் கண்களால் வெளிப்படுத்திய ஹிரண்யகசிபு, அந்த நேரத்துக்காகக் காத்திருந்தான். நரசிம்மம் அவனை அப்படியே தூக்கியது. உள்ளேயும் அல்லாத, வெளியேயும் அல்லாத வாசல் நிலைப்படிக்குக் கொண்டு சென்றது. சூரியன் மறைந்து பகலை விடைபெற்றுக் கொள்ளச் சொல்ல, நிலவு வரட்டுமா என்று இரவைக் கேட்ட அந்திப் பொழுது. பூமியில் அல்லாமல், நிலைவாசல் படியில் தானமர்ந்து, தன் மடியில் ஹிரண்யகசிபுவைக் கிடத்தினார் நரசிம்மர்!
'ம், ஆரம்பி,' என்று ஆவலாய் காத்திருந்தான் அரக்கன். சிங்க முகம் அவனை அச்சுறுத்தவில்லை, ஆனந்தப்படுத்தியது. அணு அணுவாய் உயிர் பிரியும் ஆனந்தத்தை அனுபவிக்கத் தயாரானான் அரக்கன். கூரிய நகமுடைய சிங்க விரல்கள் அவனது வயிற்றைக் குத்திக் கிழித்தன. அடடா, அது வலியா, சுகமா? கிழிபடும் தசை நார்கள், பிடுங்கி எடுக்கப்படும் குடல், ரணப்படுத்தப்படும் அங்கங்கள், ஹிரண்யகசிபு துடிக்கவில்லை, மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை, ஏகாந்தமாக நாராயணன் மடியிலேயே கிடந்தான். இந்த வேதனையும் ஒரு சுகமே! இதை அங்கீகரிப்பது போல தன் குடலையே மாலையாக நாராயணன் அணிந்து கொண்டிருக்கிறானே, இதைவிடப் பேறு வேறு என்ன வேண்டும்....
நாராயணா, நாராயணா, நாராயணா...