மாசி அமாவாசை மயானக் கொள்ளை!

மாசி அமாவாசை மயானக் கொள்ளை!
Published on

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். அதனால் அவருக்கு ஆணவம் வந்து விட, அதை அடக்க சிவபெருமான் அவருடைய ஐந்தாவது தலையைக் கிள்ளினாராம். இதனால் ஈசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனின் கையில் பிரம்ம கபாலமாக ஒட்டிக் கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிட்சாடனர் உருவம் கொண்டு அலைந்து கொண்டிருந்தாராம். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு அலைந்து திரிந்து கடைசியில் மயான பூமியில் ஒரு புற்றினுள்ளே பாம்பு வடிவில் வாழ்ந்து வந்தாள். சிவன் பிச்சையெடுக்கும் அத்தனை உணவையும் பிரம்ம கபாலமே விழுங்கி விட, சிவன் பசியோடு திரிந்து கொண்டிருந்தாராம். கடைசியில் பார்வதி தேவி வாழ்ந்து கொண்டிருந்த மயான பூமிக்கு வந்தாராம்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதி தேவி புற்றிலிருந்து வெளியே வந்து பெண்ணுரு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாளாம். சிவன் பிச்சை எடுக்க வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்களாக்கி அவருடைய பிரம்ம கபாலத்தில் இடத் தொடங்கினாள். முதல் இரண்டு கவளங்களையும் உண்ட கபாலம், உணவின் ருசியில் மயங்கியது.  மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக கீழே வீசினாள். அதை உண்ண கபாலம் சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. உடனே ஆவேசத்துடன் அன்னை கீழே இறங்கிய கபாலத்தை தனது காலில் மிதித்து சுக்கு நூறாக்கினாள்.

கபால வதம் முடிந்தவுடன் அன்னை அங்காளியாக மயான பூமியில் ஆவேசமாக நடனமாடினாள். அவள் ஆடிய ஆட்டத்தில் இந்த உலகமே தடம் புரள்வது போலிருந்தது. அவள் போர்க்கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அன்னையை சாந்தப்படுத்த ஸ்ரீ விஷ்ணு தேரின் அச்சாணியை முறியச் செய்தார். கீழே மல்லாந்து விழுந்த அம்பாள் சினம் தணிந்து நான்கு திருக்கரங்களுடன் சூலம், கத்தி, உடுக்கை, கபலத்துடன் எழுந்து உட்கார்ந்து அங்கேயே அங்காள பரமேஸ்வரி எனும் திருநாமம் கொண்டு எல்லோருக்கும் தரிசனம் கொடுத்தாள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இது செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  இத்தலத்தில் அன்னை மல்லாந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இது நடந்தது சிவராத்திரியை அடுத்த அமாவாசையன்று. அதனால் அன்று மயானக் கொள்ளை உத்ஸவம் கொண்டாடும் வழக்கம் ஆரம்பித்தது. அன்னை மயானத்தில் அன்னத்தை சூரையிட்டது போல அங்கு வரும் பக்தர்களும் தங்களால் இயன்ற காய், கனி, முட்டை, தானியங்கள், கொழுக்கட்டைகள், சில்லறைக் காசுகள், கீரை வகைகள் போன்ற பொருட்களை சூரையிடுகின்றனர். சூரையிட்ட அந்த பொருட்களை விழா முடிந்ததும் தங்கள் நிலங்களில் கொண்டு போய் போட்டால் அந்த வருட வேளாண்மை சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

சூரையிடும் பக்தர்கள் தாங்களும் அங்காள பரமேஸ்வரி, காட்டேரி, பாவாடைராயன் போன்ற வேடங்களில் ஆவேசமாக ஆடிக்கொண்டே வந்து மயானத்தில் சூரையிடுவது இந்த விழாவின் சிறப்பு. அன்று தீய சக்திகளை அன்னை அடித்து விரட்டுவதாக ஐதீகம். சிவராத்திரி இரவிலிருந்தே மயானக் கொள்ளை திருவிழா தொடங்குகிறது. பின் அம்மன் கண் திறப்பு, ரத்த பலி வீசுதல், அமாவாசை நடுப்பகல் மயான கொள்ளை, பின்பு ஊஞ்சல் சேவை, கடைசியாக விடையாற்றி உத்ஸவம் என்று கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழகமெங்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆலயங்கள் உள்ளன. எல்லா ஆலயங்களிலும் மாசி மாத அமாவாசையன்று மயானக் கொள்ளை உத்ஸவம் சிறப்பாக நடைபெறும்.

அங்காள பரமேஸ்வரி மேல் உள்ள பக்தியால் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ஆயிரகணக்கில் இந்தத் திருவிழாவைக் காண மேல்மலையனூர் வருவது வழக்கம்.  மாசி அமாவசையன்று அம்பிகை தன் முழு சக்தியோடு வீற்றிருப்பாள். அன்று மேல்மலையனூர் சென்று அவளை தரிசிப்பவர்கள் எல்லா நலன்களையும் பெறுவது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com