மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: பெற்றோரின் திருமணத்தை காண வரும் மகன்!

Meenakshi Tirukalyanam
Meenakshi Tirukalyanam
Published on

முன்னொரு காலத்தில் மதுரையை ஆண்ட மலையத்துவ ராஜன் காஞ்சனமாலை தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினர். அந்த யாக குண்டத்தில் இருந்து பார்வதி தேவி மூன்று தனங்களுடன் குழந்தையாக அவதரித்தாள். தெய்வீக குழந்தையை கண்டு ஆனந்தம் அடைந்த மலையத்துவ ராஜன் காஞ்சனமாலை தம்பதியினர் குழந்தைக்கு மூன்று தனங்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். அப்போது இந்த குழந்தை தெய்வக் குழந்தை அவள் தனக்கு உரிய மணவாளனை என்று சந்திக்கிறாளோ அப்போது அவளது மூன்றாவது தனம் தானாக மறைந்துவிடும் என்று அசரீரி கூறியது. இதை கேட்டு மகிழ்ந்த மலையத்துவ ராஜனும் காஞ்சனமாலையும் பேரானந்தத்தோடு குழந்தையை வாரி எடுத்து மகிழ்ந்தனர்.

அக்குழந்தைக்கு தடாதகை என்று பெயர்ச்சூட்டி வளர்த்து வந்தனர். அவளது கண்கள் மீன் போன்று இருந்ததால் மீனாட்சி என்றும் அழைத்தனர். சகலகலையையும் பயின்ற மீனாட்சி தந்தைக்குப் பிறகு அரசுரிமையை ஏற்றாள். மதுரையை நீதி தவறாமல் ஆண்டு வந்தாள். எட்டுத்திக்கும் படை எடுத்துச் சென்று வென்றாள். இருப்பினும் அவளது வெற்றி தாகம் தணியவில்லை.

நால்வகை சேனைகளுடன் திருக்கயிலாயத்தை நோக்கி படையெடுத்தாள் அங்கு நந்தி முதலான சிவகணங்களுடன் போர் செய்து அவர்களை வென்றாள். அதனால் சிவபெருமானே போருக்கு புறப்பட்டு வந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மீனாட்சியின் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. அப்போது அவரே தன் கணவர் என்பதை உணர்ந்து, நாணம் கொண்டு தலை குனிந்தாள் தடாதகை. 'நானே மதுரைக்கு வந்து முறைப்படி பெண் கேட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று சிவபெருமான் கூறியதையடுத்து மதுரைக்கு திரும்பினாள் மீனாட்சி.

மதுரையில் இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணத்திற்கு விஷ்ணு, பிரம்மன் உள்ளிட்ட தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது பெற்றோர்களின் திருமணத்தை நேரடியாக காணும் பாக்கியம் யாருக்குமே கிடைக்காது. ஆனால் இந்த முருகனுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கிறது.

இந்த முருகன் வேறு யாரும் அல்ல திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்தான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கு பக்தர்கள் மட்டுமின்றி அங்கே திருப்பரங்குன்றத்தில் எழுந்துருளியுள்ள முருகப்பெருமானும் தெய்வானை உடன் வருவார். இவரது முன்னிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதே போல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணத்தை காணவும் அவர்களுக்கு ஆசிவழங்கவும் மதுரையிலிருந்து மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் அங்கே எழுந்தருவாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்: டிக்கெட் முன்பதிவு மற்றும் இணையதள முகவரி...
Meenakshi Tirukalyanam

மீனாட்சியின் திருமணத்தை தங்கள் இல்லத் திருவிழா திருமண விழா போல் மக்கள் கொண்டாடுகிறார்கள். திருமணம் நடைபெற்ற இடத்தில் சிவபெருமானுக்கு பக்கத்தில் மீனாட்சி வீற்றிருக்கும் காட்சி கற்பகத்தருவின் பக்கத்தே மலர்ந்த பூங்கொடி போல் இருக்கும் திருமண சடங்குகள் எல்லாம் நிறைவேறும் பிரம்ம தேவரை அவற்றை குறைவின்றி செய்து முடிப்பார். சிவபெருமான் திருமங்கல நாணை மீனாட்சிக்கு சூட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். விருந்தும் தடபுடலாக நடைபெறும். திருமணம் வீட்டில் மொய் எழுதுவது அல்லது கொடுப்பது வழக்கம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் தான் மொய் எழுதுவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் திருக்கழுத்தில் மங்கள நாண் பூட்டும்போது அதை காணும் திருமணமான சுமங்கலி பெண்களும் தங்களுக்கு தாங்களே புதிய மஞ்சள் சரடை அணிந்து கொள்வார்கள் சிலருக்கு அவர்களது கணவன்மார்கள் கட்டி விடுவார்கள்.

மீனாட்சி திருக்கல்யாணம் மே 8, 2025, வியாழக்கிழமை காலை 8.35 மணி முதல் 8.50 மணிக்குள் நடைபெறுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் தரிசிப்பவர்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் என எல்லாம் கிடைக்கும்.

மதுரைக்கு சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தரிசித்து பேரருள் பெறுவோமாக!

(மதுரையம்பதி வரலாறு என்ற நூலில் இருந்து தொகுப்பு.)

இதையும் படியுங்கள்:
பக்தனுக்காக சமையல் செய்த மதுரை மீனாட்சி அம்மனின் திருவிளையாடல்!
Meenakshi Tirukalyanam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com