இரட்டை நாராயண கோலத்தில் மகாவிஷ்ணு அருளும் பத்ரிகாஸ்ரம்!

Maha Vishnu's grace in the double Narayana Kolam is Bathrikasramam
Maha Vishnu's grace in the double Narayana Kolam is Bathrikasramam

மயத்தின் கார்வால் பகுதியில், அலக்நந்தா நதியின் கரையில், சுமார் 11,200  அடிகள் கடல் மட்டத்துக்கு மேல் இருக்கிறது பத்ரிநாத். நர - நாராயண மலைத் தொடர்களுக்கு இடையில், நீலகண்ட சிகரத்துக்குக் கிழக்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தோ - சைனா (திபெத்) எல்லையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தப் புனிதத் தலம்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் ஏராளமான இலந்தை மரங்கள் இருந்தனவாம். ‘பத்ரி’ என்றால் இலந்தை என்று பொருள். எனவே, இங்கிருக்கும் இறைவன் பத்ரிநாராயணன் என அழைக்கப்பட்டாராம். பதிரிநாத்தை, ‘பத்ரிகாஸ்ரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

பத்ரிநாத் ஆலயம்
பத்ரிநாத் ஆலயம்

இன்னும் ஒரு தல வரலாற்றையும் உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். இலந்தை மரங்கள் நிரம்பிய இந்த இடத்தில் மஹாவிஷ்ணு தவம் இருந்தபோது அவருக்குக் குடைபோல் இருந்து காத்த லட்சுமி தேவியே ஓர் இலந்தை மரமாக (பத்ரியாக) மாறிப்போனாராம். ‘பத்ரி விஷால்’ என அவரை பக்தர்கள் போற்றினராம். லட்சுமியின், அதாவது ‘பத்ரி’யின் நாதருக்கு (விஷ்ணுவுக்கு) பத்ரிநாத் என்று பெயரும் ஏற்பட்டதாம். பாண்டவர்கள் ஸ்வர்கத்துக்குப் போகும் வழியில் பத்ரிநாத்தைக் கடந்து சென்றதாக மஹாபாரதம் சொல்கிறது. பத்ம புராணத்தில் பத்ரிநாத் ஆன்மிகச் செல்வத்தால் நிரம்பிய பூமி என வர்ணிக்கப்படுகிறது. நாரத மஹரிஷி தவம் செய்த இடம் இது.

இப்போதிருக்கும் ஆலயம் ஆதிசங்கரரால் 9ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டிருக்கிறது. பாதை வசதிகள் அற்ற அக்காலத்தில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான மைல் தொலைவை நடந்தே கடந்து வந்து பத்ரிநாத்தை அடைந்திருக்கிறார்கள். தற்போது ஆண்டுதோறும் 6 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து செல்கின்றனர்.

அலக்நந்தா நதி
அலக்நந்தா நதி

சாளக்ராமக் கல்லினால் உருவான கருப்புநிறச் சிலை ஒன்றை அலக்நந்தா ஆற்றில் ஆதிசங்கரர் கண்டெடுத்தாராம். அதை அவர் தற்போது பத்ரிநாத் ஆலயம் அருகே இருக்கும் வெந்நீர்க் குளத்தருகில், ஒரு குகையில் பிரதிஷ்டை செய்தாராம். பதினாறாம் நூற்றாண்டில் கார்வால் மன்னர், இந்த மூர்த்தியின் திருவடிவைத் தற்போதுள்ள ஆலயத்துக்கு மாற்றினாராம்.

ஆலயத்தின் உயரம் சுமார் 50 அடி. ஆலயத்தின் முகப்பானது, கற்சுவர்கள் மற்றும் வளைவான ஜன்னல்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. விசாலமான படிக்கட்டுகள் ஆலயத்தினுள் நுழைவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. தென்னாட்டில் இருக்கும் ஆலயங்களின் கோபுர வடிவமோ அல்லது வடநாட்டு ஆலயங்களின் கூம்பு வடிவமோ இல்லை. மாறாக, ஆலயத்தின் முகப்புத் தோற்றம் புத்த விஹாரங்களை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

பத்ரிநாத் ஆலய முன் தோற்றம்
பத்ரிநாத் ஆலய முன் தோற்றம்

கருவறை, தரிசன மண்டபம் மற்றும் சபா மண்டபம் என மூன்று பகுதிகளாக ஆலயம் அமைந்துள்ளது. மண்டபத்தினுள் நுழைந்ததும் எதிர்ப்படும் பெரிய ஹால் கருவறைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. சுவர்களிலும் தூண்களிலும்  நுணுக்கமான வேலைப்படுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. மஹாவிஷ்ணுவின் இரட்டைக் கோலங்களான நர - நாராயணர் தோற்றங்கள் இங்கே புனிதமாகப் போற்றப்படுகின்றன. அரவிந்தவல்லித் தாயார், குபேரர், கருடர், நாரதர், நர - நாராயண வடிவங்கள், குளிர்காலத்தில் ஜோஷிமட்டுக்குச் செல்லும் உத்ஸவர் ஆகியோர் உடனிருக்க, பத்ரிநாராயணர் காட்சி அளிக்கிறார். பெருமாள் மட்டும் சாளக்ராமக் கல்லால் வடிக்கப்பட்டு இருக்கிறார். மற்ற விக்கிரஹங்கள் உத்ஸவ மூர்த்திகள். பத்ரிநாராயணர் இலந்தை மரத்தின் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

சிலையின் உயரம் ஒரு மீட்டர். நான்கு கரங்கள் கொண்டவராய், மேல் வலது கரத்தில் சங்கும், மேல் இடது கரத்தில் சக்கரமும் தரித்திருக்கிறார். கீழ்க் கரங்கள் யோக முத்திரை காட்டுகின்றன. பெரும்பாலும் கிடந்த கோலத்தில் அருள்புரியும் பெருமாள் இங்கே அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். வெளிச்சுற்றில் மஹாலட்சுமிக்கு (அரவிந்தவல்லித் தாயார்) சன்னிதி இருக்கிறது. இக்கோயிலில் ஆதிசங்கரருக்கும் ஆலயம் உள்ளது. பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இக்கோயிலை மங்களாசாசனம் செய்வித்திருக்கின்றனர். இந்தத் திருத்தலம், ‘திருவதரியாஸ்ரமம்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் பத்ரிநாத் திருத்தலத்தை ‘வதரி’ என்றே குறிப்பிடுவார்.

இதையும் படியுங்கள்:
பல்லி விழுந்த தோஷம் தீர்க்கும் சுகவனேஸ்வரர் திருக்கோயில்!
Maha Vishnu's grace in the double Narayana Kolam is Bathrikasramam

கருவறைக்கு மிக அருகில் அமர்ந்து இறைவனை மனம் குளிர சேவிக்கலாம். பெருமாளை திரை போட்டு மறைப்பதே இல்லை. திருமஞ்சனம், நைவேத்தியம் போன்றவை நம் கண் எதிரிலேயே செய்யப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக ‘ராவால்’  என்று அழைக்கப்படும் கேரள நம்பூதிரிகள் தலைமை அர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். கற்கண்டு, துளசி மற்றும் உலர்ந்த பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

மிகக் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் அலக்நந்தா ஆற்றங்கரையிலேயே கோயிலை ஒட்டி வெந்நீர் ஊற்று இருப்பது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. மருத்துவ குணம் நிரம்பியதாக இந்த வெந்நீர் கருதப்படுவதால் பக்தர்கள் பலரும் இதில் நீராடுகின்றனர். இதை, ‘தப்த குண்டம்’ என்கிறார்கள். இந்தக் குளத்து நீரின் வெப்பநிலை 55 டிகிரி சென்டிகிரேட். ஆனால், சுற்றியுள்ள பகுதிகளின் வெப்பநிலையோ பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக இருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com