
பாரதப் போர் முடிந்த மறுநாள் போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை - மரியாதை செய்யும் விழா நடத்தப்பட்டது.
போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நின்றார்கள்.
மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.
பதிலுக்கு தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.
குருக்ஷேத்திரப் போரில் வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.
தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஒவ்வொருவரின் ரதங்களிலும் மரியாதை விழாச் சடங்குகள் முடிந்த பின் அர்ஜுனன் ரதத்தின் முறை வந்தது.
சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன். 'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது' என இறுமாந்து அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் அர்ஜுனன்.
ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான்.
ஶ்ரீ கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார். "அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.
கண்ணனின் வார்த்தையை மீறாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான். அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என்ற கனமான ஏக்கமும் அவனுள் இருந்தது.
அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன்.
அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.
கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிந்தது.
எல்லோரும் திகிலோடு பார்த்தனர்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை.
"அர்ஜுனா! இந்த யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.
அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.
நான் சாரதியாக அமர்ந்திருந்ததால், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.
படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.
இந்தத் தேருக்கு முடிவு ஏற்படப்போவதை உணர்ந்துதான் உன்னை முன்னால் இறங்கச் சொன்னேன். நான் இறங்கி இருந்தால் தேர் எரிந்திருக்கும் நீயும் எரிந்திருப்பாய்.
இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!
தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய். இப்பொழுது உன்னை வாழ்த்தி வணங்க நான் தயார்."
அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் கண்ணனின் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்து கிடந்தான்.
வாழ்க்கை எனும் ரதத்தினில், கடவுளை சரணடைந்தால், இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, சாரதி போல் நம்மை நடத்தி செல்வார்.