மஹாபெரியவாளும் கொலு பொம்மையும்!
- சௌமியா சுப்ரமணியன்
ஒரு நவராத்திரி தொடக்க நாளில், மஹாபெரியவரின் பக்தை ஒருத்தி, தன் புகுந்த வீட்டில் கொலு வைத்துக் கொண்டிருந்தாள். சில மாதங்களுக்கு முன்புதான் அவளுக்குத் திருமணமானது என்பதால், புகுந்த வீட்டில் அவள் கொண்டாடும் முதல் நவராத்திரி இது. அதனால் கூடுதல் சந்தோஷத்தோடு கொலுப் படிகளை அழகாக அமைத்து, அலங்காரங்கள் செய்து பொம்மைகளை அடுக்கத் தொடங்கினாள்.
கொலு வைப்பதை பாரம்பரியமாகச் செய்யும்போது அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கடைப்பிடிப்பார்கள். அது, கொலுப்படியில் முதல் படியில் அதாவது கீழிருந்து மேலாக ஒன்றாவது படியில் ஓரறிவு உயிர்கள், இரண்டாவது படியில் இரண்டு அறிவு உடையவை இப்படி ஆறாவது படியில் மனிதர்கள். ஏழாவது படியில் மகான்கள், எட்டாவது-ஒன்பதாவது படியில் தெய்வங்கள் என்று வைப்பார்கள். இந்தப் பெண்ணுக்கும் அந்தப் பாரம்பரியம் தெரியும் என்றாலும், மஹாபெரியவரின் பரம பக்தை என்பதால், மகான்களின் பதுமைகளை வைக்க வேண்டிய ஏழாவது படியில் அவரது பொம்மையை வைக்காமல், தெய்வங்களை வைக்கவேண்டிய எட்டாவது படியில் மகானின் பொம்மையை வைத்தாள்.
அப்போதுதான் நடந்தது அந்த சம்பவம். அதுவரை மருமகள் கொலு வைக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவளது மாமியார், சட்டென்று மகான் பொம்மையை எடுத்து ஏழாவது படியில் வைத்தாள். அதிர்ந்துபோன அந்தப் பெண், பெரியவா பொம்மையை எடுத்து மீண்டும் எட்டாவது படியில் வைக்க, மாமியாருக்கு படக்கென்று கோபம் பற்றிக் கொண்டது.
“என்ன, நீ எதை எந்தப் படியில் வைக்கணும்ங்கற சம்பிரதாயம்கூட தெரியாதா உனக்கு? உங்க அகத்துல எல்லாம் கொலு வைக்கற பழக்கமே இல்லையோ?" கொஞ்சம் அதட்டலாகவே ஒலித்தது குரல்.
"இல்லை மாமி, பெரியவா எங்களுக்குத் தெய்வம் மாதிரி. அதனால், எங்க வீட்டுல இப்படித்தான்!" வார்த்தைகளை முடிக்காமல் தழுதழுத்தாள் மருமகள்.
“எங்களுக்கும் பெரியவா தெய்வம்தான். ஆனா, கொலுப் படியில பதுமையை எங்கே வைக்கணுமோ அங்கேதான் வைக்கணும் புரிஞ்சுதா?" அதட்டிய மாமியார், மகான் பதுமையை எடுத்து ஏழாவது படியில் அழுத்தமாகவே வைத்தார்.
மாமியாரை எதிர்க்க முடியாமல் மனசுக்குள் மறுகிக்கொண்டு கொலு வைத்து முடித்தாள் மருமகள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் மருமகளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விடியலில் எழுந்து, குளித்துவிட்டு காபி டம்ளருடன் மாமியாரை எழுப்பச் சென்றவளின் பார்வை கொலுப்படியில் பதிந்தது. அங்கே முதல் நாள் ஏழாவது படியில் வைத்திருந்த மகான் பொம்மை, எட்டாவது படியில், அவள் எங்கே வைக்க நினைத்தாளோ அதே இடத்தில் இருந்தது.
மனசுக்கு சந்தோஷமாக இருந்தாலும், கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் அவள். 'மகான் பொம்மை இங்கே எப்படி வந்தது? யார் மாற்றியிருப்பார்கள்? மாமியார் எழுந்து வந்து பார்த்தால், நாம்தான் அவரை மதிக்காமல் இப்படி மாற்றி வைத்து விட்டதாக நினைத்துத் திட்டுவாரோ!’ என்று நினைத்தபடியே கொலுப்படிக்கு அருகே அவள் செல்ல, அதேசமயம் சரியாக அவளது மாமியார் தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.
மனதுக்குள் மருகியபடியே செய்வது அறியாமல் அந்த மகானிடம் மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண், மாமியாரையும் கொலுப் படியையும் மாறி மாறி பார்க்க, மெதுவாக அவளருகே வந்தார் மாமியார்.
"என்ன பெரியவா பொம்மை இடம்மாறி இருக்கேன்னு பார்க்கறியா? நான்தான் மாத்தி வைச்சேன். விடியக்கார்த்தால ஒரு சொப்பனம். அதுல காமாட்சி அம்மன் ஒரு பீடத்துல உட்கார்ந்துண்டு இருக்கா. அவளை தரிசிக்கறதுக்காக பெரியவா அங்கே வரார். வந்ததும் அம்பாள், ‘இங்கே வா... என் பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கோ’ன்னு அவர்கிட்டே சொல்றா... எனக்கு அப்படியே முழிப்பு வந்துடுத்து. அம்பாளே தன் பக்கத்துல வந்து உட்காரச் சொல்றான்னா, அவரைக் கீழே வைக்கச் சொன்னது என் தப்புதானே? அப்பவே எழுந்து வந்து மகானை நீ சொன்ன மாதிரியே அம்பாளுக்குப் பக்கத்துல வைச்சுட்டேன்!" மருமகளின் தலையைத் தடவி ஆதூரமாகச் சொன்னார் மாமியார்.
மனதார தான் வேண்டியதற்குப் பலன் கிடைக்க, மாமியாரின் கனவில் வந்து காஞ்சி மகான் நடத்திய திருவிளையாடலை நினைத்து சிலிர்த்துப் போன மருமகள், அவர் எப்போதும் கொலுவீற்றிருக்கும் ஸ்ரீமடம் திசையை நோக்கி நமஸ்கரித்தாள். கொலுவில் இருந்த மகான் பொம்மை மௌனமாய் அவளை ஆசிர்வதிப்பது போல் இருந்தது.