

இந்த மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பாகவே அதாவது 1666 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட கோவில் ஆகும். ஆதி காலத்தில் 'மணல் குளத்து விநாயகர்' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் மருவி 'மணக்குள விநாயகர்' என பெயர் பெற்றது.
கோவிலின் மேற்கூறையில் பல வண்ண ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. கோவிலில் சுற்றுப்புற சுவர்களிலும் வண்ண ஓவியங்கள் திறம்பட வரையப்பட்டு கண்ணே கவரும் விதத்தில் உள்ளன. புதுவை ஒரு ஆன்மீக பூமி. இது எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும்.
நம் நாட்டு மக்களை தவிர அயல்நாட்டு மக்களையும் இந்த விநாயகர் கோவில் கவர்ந்து வருகிறது. ஆதி காலத்தில் செல்வந்தர்கள் வாழ்ந்த பகுதி. இங்கு நெசவாளர்கள் அதிகம் இருந்த இந்த விநாயகர் கோவில் பகுதியில் நெசவுத்தொழில் செய்து வந்தனர். கோவிலை சுற்றி நிறைய நிழல்தரும் மரங்கள் இருந்தன.
பக்தர்களின் காணிக்கை மூலம் விநாயகருக்கு ஒரு மண்டபமும் அதன் முன்பாக ஒரு அர்த்த மண்டபமும் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி தோட்டமும், நந்தவனமும் இருந்தது.
விநாயகர் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அக்காலத்தில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் இந்த விநாயகர் சிலையை தூக்கி கடலில் மூன்று முறை போட்டார்கள். அப்படி இருந்தும் மறுநாள் காலை விநாயகர் தான் அமர்ந்த இடத்திலேயே காணப்பட்டார்.
அதன் பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் விநாயகர் பெருமையை உணர்ந்து இதனை விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து பெரிய அளவில் மண்டபமும் கட்டிக் கொடுத்தனர். விநாயகர் தனக்கு எதிராக செயல்பட்ட பிரென்ச்காரர்களை கொண்டே தனக்கு வசதியாக மண்டபம் அமைத்துக் கொண்டார். எனவே, இவரை வெள்ளைக்கார பிள்ளையார் என அக்காலத்தில் அழைத்து வந்தார்கள்.
அதன்படி பழைய விநாயகர் சிலைக்கு அடுத்தபடியாக புதிய விநாயகர் சிலையையும் இங்கே அமைத்தனர்.1930 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வலது புறம் புதிய விநாயகர் சிலையும், இடது புறம் பழைய விநாயகர் சிலையும் அமைக்குமாறு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. விநாயகருக்கு கோபுரமும், கவசமும் தங்கத்தில் செய்யப்பட்டது. விநாயகர் சித்தி, புத்தி மனைவியுடன் உற்சவரராக விளங்குகிறார். கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
விநாயகருக்கு இங்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். இந்த கோவிலில் விநாயகருக்கு தனி பள்ளி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அப்போது ஜெயின் ஸ்வீட் என்ற கடையில் இருந்து ஆண்டு தோறும் 111 கிலோ லட்டு தயார் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. வேறு எங்கும் விநாயகருக்கு திருக்கல்யாணம் பள்ளி அறை கிடையாது. இங்கு மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் பள்ளியறை தனியாக உள்ளது
இந்தக் கோவிலுக்கு பத்தடி உயரம் ஆறடி அகலத்தில் தங்க தேர் உள்ளது. இந்த தங்கத் தேர் 2006 ஆம் ஆண்டு செய்யப்பட்டு தற்போது வரை தேரோட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து நாலு கிலோ மீட்டர் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. எண்ணற்ற பக்தர்களின் கனவு தெய்வமாகவும் மற்றும் அனைத்து வெளிநாட்டவர்களையும் கவர்ந்து வருகிறது.