

பக்தன் ஒருவன், “ஓ! கடவுளே! நீ என்னை மறந்து விட்டாயே!” என்று புலம்பினான். இது என்றுமே நடக்க முடியாத காரியம். பக்தன், கடவுள் எப்போதுமே தன்னைக் கைவிடாத நண்பன் மற்றும் வழிகாட்டி என்பதையும் கடவுளின் புதல்வன் தான் என்பதை மறக்கிறான். கடவுள் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லமை வாய்ந்தவர். நிறைந்த கருணை உடையவர். விதி அல்லது அதிர்ஷ்டத்தின் ஒவ்வொரு சவாலுக்கும் எதிராக கடவுளின் மீதான நம்பிக்கை நிலையாக இருக்க வேண்டும்.
ஒரு சமயம் காட்டில் உள்ள எல்லா மான்களும் தங்கள் துன்பத்தைத் தீர்ப்பதற்காக ஒரு பெரிய மாநாட்டை நடத்தின. மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய தலைவர் துணிவையும் ஒற்றுமையையும் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்று அங்கு கூடியிருந்த பிரம்மாண்டமான மான்களின் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினார். அல்பமான நாய்களிடத்தில் அதுவும் கூட்டமாக வரத்தெரியாத, கொம்பே இல்லாத நாய் போன்ற மிருகத்திற்கு பயப்படுவது ஒரு பெரிய அவமானம் என்றது அந்தத் தலைமை மான்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இதையொட்டி அந்த மாநாட்டில் ஒரு மனதாக அனைத்து மான்களும் பெருத்த கோஷத்தோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. இனிமேல் நாய் துரத்தினால் எந்த மானும் ஓடக்கூடாது என்றும், எதிர்த்து நின்று இறுதி வரை சண்டையிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கோஷம் இன்னும் குறையாமல் ஒலித்துக் கொண்டிருக்கையில் தூரத்தில் ஒரே ஒரு நாயின் குலைக்கும் சப்தம் கேட்டது. அவ்வளவு தான், அடுத்த கணத்தில் பெரிய தீர்மானத்தை நிறைவேற்றிய அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு மான் கூடத் தென்படவில்லை. காற்றில் மாயமாக அவை மறைந்து போயின. தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தையே அவைகள் மதிக்கவில்லை. இது வெறும் வாய்ஜாலம் தான்.
இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பெரும் தடை. எந்த துறையாக இருந்தாலும் இது ஒரு பெரும் தடை தான்.
மனிதனின் முயற்சிக்கும் திட்டத்திற்கும், அறிவிற்கும், அக்கறைக்கும் தக்கபடி விளைவு இருந்து அனைத்து செயல்களும் நடக்கும் என்ற கருத்து தவறானது. தெய்வீக கருணை இல்லாமல் ஒருவரும் எந்த காரியத்திலும் வெற்றி பெற முடியாது. கடவுளின் திட்டமே மனிதனின் மூலமாக செயல்படுகிறது. ஆனால் மனிதனோ தானே அதை நடத்தியதாகக் கர்வப்படுகிறான்.
இது எனக்கு ஒரு கதையை ஞாபகப்படுத்துகிறது.
சாமானிய கிராமத்தான் ஒருவன் முதன்முறையாக தனது ரயில் பயணத்தைத் துவங்கினான். ஒரு டிக்கட்டை வாங்கி ரயில் பெட்டிக்குள் ஏறினான். அங்கு ஏற்கனவே இருந்த சில பயணிகளையும் அவர்கள் தங்கள் பெட்டி படுக்கைகளை மேலே இருந்த ராக்குகளிலும் இருக்கைக்கு அடியில் இருந்த காலி இடங்களில் வைத்திருப்பதையும் பார்த்தான். ரயில் எஞ்ஜின் தங்களது கூடுதல் சுமையாக உள்ள பெட்டி படுக்கை உள்ளிட்ட பொருள்களையும் இழுத்துச் செல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
‘இது என்ன கொடுமை’ என்று நினைத்த கிராமத்தான் எஞ்ஜின் தங்களை இழுப்பதோடு கூடுதலாக உள்ள சுமைகளையும் அவர்கள் இழுக்க வைக்கிறார்களே என்று எண்ணினான். பாவம், எஞ்ஜின் மீது இப்படிப்பட்ட அதிக தொந்தரவை தான் ஒருபோதும் கொடுக்கக் கூடாது என்று எண்ணிய அவன் தனது பெட்டியை தோளிலும் கூடையைத் தலையிலும் வைத்துக் கொண்டான். அவன் தானே தனது பொருள்களைச் சுமந்து செல்வதாகவும் எஞ்ஜின் அவற்றை இழுத்துச் செல்லவில்லை என்றும் நம்பினான்.
ஏராளமானோர் அந்த கிராமத்தானைப் போலத் தான் இருக்கிறார்கள். கடவுளே எல்லாம் என்றும் தனது திட்டத்தை நிறைவேற்ற மனிதன் இறைவனின் கரங்களில் ஒரு கருவி மாத்திரம் தான் என்பதையும் அவர்கள் மறக்கிறார்கள்.
இந்த உண்மையில் உள்ள நம்பிக்கையே சாந்திக்கும் சந்தோஷத்திற்குமான முக்கிய வழியாகும்.
ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் 25-10-1974 அன்று ஆற்றிய உரை.