திருக்கோவிலூர்
பெங்களூரிலிருந்து கும்பகோணம் செல்லுகையில் பாதி வழியில் திருக்கோவிலூர் வரும். கடந்து செல்லாமல் சற்றே ஊருக்குள் சென்றால் சைவம் மற்றும் வைணவத்தைப் சார்ந்த இரு பெரும் சிறப்பு மிகுந்த கோவில்களைக் கண்டு அனுக்ரஹம் பெறலாம்.
உலகளந்த பெருமாள் கோயில்
பெருமாள் சந்நிதி நுழையுமுன் இரண்டு பெரிய கம்பீரமான துவாரபாலகர்களைத் தாண்டிச் சென்றால் கர்ப்பக் கிரத்திற்கு வெளியேயும் இருபுறமும் மிக அழகிய துவாரபாலகர்கள். உள்ளே வலது திருவடி தூக்கி நிற்கும் பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள். குமிண் சிரிப்புடனும் கருணைக் கண்களோடும் அருள் பாலிக்கிறார். அவரது சுந்தர வதனத்தை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே நிற்கலாம் போல இருக்கிறது. ஆனால் முடியாது. வரிசையில் நகர வேண்டும். பெரிய க்யூ. ஆனாலும் நிதானமாக தரிசனம் செய்ய முடிகிறது. பெருமாள் இங்கு அபூர்வமாக இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்குமாக மாற்றி வைத்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு விசேஷம் என்னவென்றால்இவர் முழுவதும் தேவதாரு மரத்திலான பெருமாள்.
கர்ப்பக்கிரகத்துக்கு வெளியேயே பெரிய விஷ்ணுதுர்கை சன்னிதி. சிவன் கோவில்களில் மட்டுமே காணக் கூடிய துர்கை இங்கே அருள் பாலிப்பது அபூர்வமானது. சன்னிதியின் நேர் எதிரே நின்றால் ஒரே சமயத்தில் காணலாம்.நேரே வலது கால் தூக்கி நிற்கும் தமயனையும், இடது புறம் கடாக்ஷிக்கும் தங்கையையும் . துர்கை சன்னிதியில் தேர்த்தம் வாங்கிக்கொண்டு பிரகாரத்தை வலம் வருகையில் ஒரு பெரிய அனுமார். சந்நிதியாக இல்லாமல் வழியில் குறுக்கு வாட்டில் புடைப்புச் சிற்பமாக பக்கவாட்டில் பார்க்கும் முகத்துடன் வித்தியாசமான ஆனால் அழகான ஆஞ்சனேயர். பிரகாரம் சுற்றி முடித்து தாயார் சன்னிதி நோக்கி கொஞ்சம் நடக்க வேண்டும். அங்கே அழகிய பூங்கோவல் நாச்சியார் நமக்கு அருள் பாலிக்கிறார். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மூன்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
வீரட்டேஸ்வரர் ஆலயம்
சிவபெருமான் 8 இடத்தில் வீரப்போர் செய்ததால் அவை அஷ்ட வீரட்ட தலங்கள் எனப் போற்றப்படுகிறது. அவற்றுள் ஒன்று இது. அந்தகாசுரனை அழித்த இடம். 64 பைரவர்களை இங்கே தோற்றுவித்ததால், சிவபெருமானே இங்கு மஹா பைரவர் என்று குருக்கள் தெரிவித்தார். சிவபெருமானை தரசித்து வலம் வந்தால் பிரகாரத்தில் எல்லா சிவன் கோவிலிலும் இருப்பது போன்றே மற்ற தெய்வ சந்நிதிகள். வித்தியாசமாக எனக்குப் பட்டது சப்த கன்னியர்கள் தோற்றம். சாதாரணமாக ஏழு பேரும் ஒரே கல்லில் அருகருகே வடிவமைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இங்கே ஒவ்வொருவரும் பக்கத்தில் ஆனால் தனித்தனி கல்சட்டத்திற்குள் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார்கள்.
சிவன் கோவிலை விட்டு வெளியே வந்தால் அருகிலேயே ஆனால் தனி கோபுரத்துடன் பெரியநாயகி அம்பாள் தரிசனம் தருகிறாள். இது அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஆக ஒரே ஊரில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலையும் பெருமாள் கோவிலையும் கண்டு மனநிறைவு கொள்ளலாம்.