

ராகவனுக்குள் அவரைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோயிலுக்கு வந்தபோதுதான் அவர் அவனுக்கு அறிமுகமானார்.
உள்ளே கடவுளின் முன் எல்லா கவலைகளையும் கொட்டிவிட்டு சோர்வாய் நடைதளர்ந்து வெளியே வந்தபோது அவர் எதிரே வந்தார். நீண்ட வெண்தாடி, நெஞ்சில் படர்ந்த ருத்ராட்ச மாலைகள், பார்த்தோரைக் கவர்ந்திழுக்கும் தீட்சண்ய கண்கள்.
"என்னடா கண்ணு... சோகமா இருக்கே? வா வந்து இப்படி உட்கார்..." என்று கையை பிடித்தார்.
ஒரு பாத்திரக்கடை ஓரமாய் இருவரும் அமர்ந்தார்கள். மெல்ல ராகவனின் கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு, அவர் ஆதுரமாய் பார்த்தார்.
"என்ன, என்ன உன் பிரச்னை?'' என்றார்.
ராகவன் தயங்கினான். சற்று நேரம் தலைகுனிந்து யோசித்தான். "காசு கொடு... உன் எதிர்காலம் சொல்கிறேன்" என்று அவனிடம் காசை கறந்துக்கொண்டு நழுவிய சாமியார்கள் உண்டு.
ஏதேனும் எதிர்காலம் பற்றிய சில பயமுறுத்தும் விசயங்களை கூறிவிட்டு, காசு கேட்கும் சாமியார்களிடமும் அவன் சிக்கி இருக்கிறான்.
பில்லி, சூன்யம் என்று பயமுறுத்திவிட்டு, பூஜை, பரிகாரம் என்று பேசி, ஒரு பத்தாயிரம் ஆகும் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் என்று கூறியவர்களிடம் இருந்துகூட அவன் தப்பித்து வந்திருக்கிறான்.
ஆனால், இவர் இதுவரை தான் சந்தித்த சாமியார்களிடம் இருந்து வேறுபட்டிருக்கிறார் என்று அவனுக்கு தோன்றியது. அவரிடம் இனம் புரியாத ஒரு ஈர்ப்பை அவன் உணர்ந்தான்.
தயங்கி, தயங்கி அவரிடம் தன்னை பற்றிய எல்லா விபரங்களையும் கூறிவிட்டு “கடவுள் இருக்கிறாரா சாமி?“ என்றான்.
அவர் கடகட வென்று சிரித்தார். ராகவனின் காதை பிடித்து லேசாய் திருகி, “கோயிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து முழுசா அரை மணிநேரம் ஆகலை. அதுக்குள்ளே சந்தேகம் வந்துடுச்சா? நல்லது. நல்லது. இப்படி கேள்வி வரணும். வந்தாதான் பதிலும் வரும். தேடினாத்தானே கிடைக்கும்.
ராகவா, நீ இப்போ பிரச்னையில இருக்கே. உனக்கு உடனே ஒரு வேலை வேணும். தினம் தினம் குடிச்சுட்டு எங்கேயோ விழுந்துகிடக்கிற அப்பா. நோய்பட்டு கிடக்கிற அம்மா. தம்பி, தங்கச்சிங்க எல்லாத்தையும் நீதான் கரையேத்தனும். உன்னோட பாரம் பெருசு. இந்தச் சுமையின் கனம் தாங்காமத்தான் இப்படி ஒரு கேள்வி உன்கிட்டே இருந்து வருது.
ராகவா, பொதுவாவே நாம எல்லோரும் வாழ்க்கையில நமக்குத் தேவையான, அல்லது நாம எதிர்பார்க்கிற விசயங்கள் நடக்கும்போது, 'ஆகா கடவுள் எவ்வளவு நல்லவர். எவ்வளவு அற்புதமானவர்' என்று கொண்டாடுகிறோம். விழா எடுக்கிறோம்.
ஆனால், அதுவே நாம் நினைத்ததற்கு எதிராக மாறி நடந்தால், 'கடவுளே இல்லை' என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறோம். உள்ளே சந்தேகத்தோடு கோயிலுக்கு வருகிறோம். ஒரு வேளை கடவுள் இருக்கலாம் அல்லவா. அப்படி இருந்தால் இதை நிறைவேற்றட்டும் என்று பிரார்த்தனையை இரைத்துவிட்டு வருகிறோம்.
இப்படி உன்னைப்போல் கடவுள் பற்றிய சந்தேகத்தோடு ஒரு சாரார் கோயிலுக்கு வர, இன்னொரு சாரார் கடவுளே இல்லை என்று வெளியே கூறிக்கொண்டு 'உள்ளே கடவுள் இருக்கக்கூடும் என்று பயந்து பிரார்த்தனைகளை உள்ளத்தில் ஒளித்துக்கொண்டு திரிகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், ஆத்திகமும் நாத்திகமும் கடவுள் பற்றிய தேடலை மேற்கொள்ளாமலேயே வெறும் ஊசலாட்டத்தில் தங்களை வைத்திருக்கின்றன. இந்த ஊசலாட்டம் எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?
எவரொருவர் கடவுள் தன்மையில் தன்னை நனைத்தவராக இருக்கிறாரோ, எவரொருவர் தன்னை, தன் உயிர்ப்பை முழுமையாய் உணர்ந்தவராக இருக்கிறாரோ அவரை சந்திக்கும்போது முடிவுக்கு வரும். எல்லா குழப்பங்களும் முடிவுக்கு வரும் இடம் குருவின் அண்மை.
எப்போது நாம் நமக்கான குருவைச் சந்திக்கிறோமோ... அப்போதே அந்தக் கணத்திலேயே பல்வேறு மாற்றங்கள் நம்மை நெருங்கி வருவதை உணர்ந்துக்கொள்ள முடியும். சலனங்கள் எல்லாம் கரைந்து, சபலங்கள் எல்லாம் மாறி குருவின் எதிரே நாம் நாமாக இருப்போம். அது கேள்விகளற்ற இடம். எல்லா கேள்விகளும் பதில் காணும் இடம்.
குருவின் ஒரே பார்வையில் தெளிவு பிறக்கும். நாம் பல்வேறு பிறவிகளில் சுமந்து வந்த வினைகளின் பிரதிபலிப்பே விதியெனும் வடிவில் விளையாடுகின்றது என்பது புரிய வரும். கடவுள் என்பதின் சூட்சுமம். கடவுள் என்பதின் பிரம்மாண்டம். கடவுளின் பணி, என அனைத்தும் புரியவரும். இதை நானாக சொல்லவில்லை.
திருமூலர் சொல்கிறார். எப்போது தெளிவு வரும். குருவை காணும்போது வரும். 'தெளிவு குருவின் திருமேனி காணல்' ராகவா, குருவை தேடுதல் ஒரு தனித்த சுகம். குருவை அடையாளம் கண்டுகொண்டு அவரை திரும்ப திரும்ப சந்தித்தல் சுகம். வாழ்வு பற்றிய எல்லா கேள்விகளுக்கும் அவரை அண்டி விடை பெறுதல் சுகம். அவரின் சந்திப்பால் வாழ்வின் அச்சங்களில் இருந்து விடுபட்டு வாழ்தல் சுகம்.
ஆனால் ஒரு உண்மை குருவை சந்தித்தபிறகும் அவரிடம் கடவுள் பற்றி பேசாமல், பிரபஞ்ச ரகசியம் கேட்காமல் எனக்கு அது வேண்டும், எனக்கு இது வேண்டும் என்று லோகாயத தேவைகளுக்காக, வாழ்வின் பிரச்னைகளை கொட்டி அதை தீர்ப்பதற்குரிய ஒருவராக மட்டுமே குருவை பயன்படுத்திக் கொள்பவர்களே இங்கு அதிகம்.
அதனால் தெளிவு என்பது குருவை சந்திப்பதால் மட்டும் வருவதில்லை. குருவை சந்தித்துவிட்டு திரும்பிய சில மணித்துளிகளிலேயேகூட அந்தத; தெளிவு காணாமல் போகும். வாழ்வு பற்றிய அச்சம் மேலோங்கிவிடக்கூடும். கலக்கமும், பதட்டமும், சந்தேகமும் வந்து அவஸ்தைப்படுத்தும். இந்த நேரத்தில் எது துணையாக வரும்?
திருமூலர் சொல்கிறார், குருவின் வார்த்தைகள் எப்போதும் துணை வரும். குழப்பங்களைத் துரத்தி அடித்துவிட்டு தெளிவின் பாதை காட்டும். குருவின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டு அதன் வழி பயணப்படுதல் தேடலுள்ள ஒரு உண்மை சாதகனின் அடுத்த கட்டம். குரு மொழிந்தவை, மொழிபவை எல்லாமும் வேதங்கள். உள்ளொரு தனித்த உண்மையைத் தேக்கி வைத்திருக்கும் வாசகங்கள் அவை.
பிரச்சனைகள் எதிரே வந்து மிரட்டும் போதெல்லாம் குருவின் வார்த்தைகளை நினைந்து நினைந்து நெஞ்சை ஆற்றுப்படுத்திக்கொண்டு மீள வேண்டும். 'தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்' ஆனால் , ராகவா குருவை தேடித் தேடிச் செல்வதும் அவரின் வார்த்தைகளைக் கேட்பதிலும் விட நமது நாட்டம் ஆசைகளை வளர்ப்பதிலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதிலும் அல்லவா அதிகம் இருக்கிறது.
ராகவா, 'குருவை அடிக்கடி சந்திக்க முடியவில்லை; அவரின் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. ஆனாலும் வாழ்வின் தகிப்பைத் தாங்கிக்கொள்ளும் வலிமை வேண்டும் அதற்கான வழி என்ன என்று ஒருவர் கேட்டால் திருமூலரின் பதில் என்ன தெரியுமா?'
'தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்' குருவின் நாமம் சொல்ல சொல்ல தெளிவு பிறக்கிறது. அமைதியற்ற நெஞ்சம் அமைதியடைகிறது. துன்பச்சிறைகளின் பூட்டு உடைகிறது. ஏதேதோ எண்ணி எண்ணி கலங்கிய மனம் நாம சங்கீர்த்தனத்தில் நர்த்தனமிடுகிறது. நோய்களும் நோய்தரும் எண்ணங்களும் ஓடி மறைகின்றன. நாம ஜபம் கடவுள்தன்மையை கை நெல்லியென காட்டும் பாதை.
உண்மையாய் நிதம் நாமம் சொன்னவர் வாழ்வுதானே மாறும். நாளும் ஜெயிக்கும். பார்க்க நேரமில்லை. கேட்க நேரமில்லை. நாமம் சொல்லவும் இயலவில்லை என ஒருவர் கேட்க, திருமந்திரம் திரும்புகிறது நீ எதுவும் செய்யாதே; உன்னிடம் மனம் இருக்கிறதல்லவா; அதில் அவனை நினைத்துக்கொண்டிரு. எப்போதும் இறைநினைப்பு; எப்போதும் குரு நினைப்பு; முடியுமா உன்னால்?
'தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே' ஒரு காதலன் காதலி நினைப்பாகவே இருப்பானே அதுபோல குரு நினைப்பை மனம் முழுதும் படரவிட வேண்டும். அவரின் உருவை நினைத்து நினைத்து மகிழ வேண்டும். நெஞ்சம் முழுதும் அவர் நினைப்பு நிறைய நிறைய மற்ற கவலைகள் மறந்துபோகும். மெல்ல மெல்ல அவை மறைந்தும் போகும்.
ராகவா, இங்கே ஒரு சூட்சுமத்தை கவனி. குருவின் உருவை சிந்தித்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படையான விசயம். நம்மில் தெளிவு பிறப்பதற்கான, நம்மில் இறைத்தன்மையை நிறையச்செய்வதற்கான காரியம் இது. ஆனால் இதை உடனே செய்துவிட முடியாது. சட்டென்று இது கைவந்துவிடாது.
குரு உருவை சிந்திக்க வேண்டுமென்றால் குருவை பார்க்க வேண்டும். பார்த்து பார்த்து மையல்கொள்ள வேண்டும். வெறுமனே பார்த்துவிட்டு வந்தால் போதாது. வெறும் சந்திப்பு மட்டும் நிகழுமானால் அது மனதில் வெகுநாள் நிலைப்பதில்லை. பேச வேண்டும். பேசுவதைக் கேட்க வேண்டும். கேட்டு கேட்டு தெளிய வேண்டும். இப்போது அவர் பெயரை சொன்னாலே உருவம் உள்ளே தோன்றும் நிலை வரவேண்டும்.
யாரோ எங்கோ குரு பெயரை சொன்னாலும் நம்முள் குரு முகம் தோன்றும். குரு முகம் உள்ளே பிரகாசமாய் தோன்ற அவரது நாமம் நாவினில் ஆனந்தமாய் வெளிப்படும். ராகவா, இது உனக்கு புரிகிறதா? ஒன்று தொட்டு ஒன்று என தொடரும் விசயம் இதுவென உனக்குப் புரிகிறதா? ஆக, கடவுள் பற்றிய கேள்விகள் எங்கே முடிகின்றன தெரிகிறதா?
(தொடரும்...)