

காசி நகரில் சூரியபகவான் 12 திருநாமங்களில் வழிபாடு செய்யப்படுகிறார்.
1. கங்காதித்யர் சூரியக் கோவில்
கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன். இவர் தன் முன்னோர்களின் நற்கதிக்காக ஆகாயத்தில் இருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன் இங்கு வந்து கங்கையை வழிபட்டார். அவர் வழிபட்ட லலிதாகாட் படித்துறை அருகில் கங்காதித்யர் சூரியக் கோவில் உள்ளது.
2. அருணாதித்யர்
காச்யப முனிவரின் மனைவி விநதை. இவளுக்கு இரண்டு பிள்ளைகள். முதல்வன் அருணன். இரண்டாவது மகன் கருடன். சூரிய பகவானின் சாரதி அருணன். காசி திரிலோசனர் கோவிலில் அருணன் வழிபாடு செய்து அருணாதித்யன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
3. லோலார்க்கர்
மனசஞ்சலத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை லோலார்க்கர் என்று அழைப்பர். காசியில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள 'லோலார்க்க குண்டா' எனும் குளம் புகழ் மிக்கது.
4. விமலாதித்யர்
தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன் முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்குக் காட்சியளித்த சூரியபகவான், 'இனி அவன் வம்சத்தில் யாருக்குமே தொழு நோய் வராது' என்று அருள் புரிந்தார். காசியில் கதோலியா எனும் இடமருகே ஜங்கம்பாடியில் விமலாதித்யர் சூரிய கோவில் உள்ளது.
5. எமாதித்யர்
சூரியனின் மகன் தன் சக்தியை அதிகரிக்க சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. காசி சங்கடா காட்டில் எமாதித்யர் கோவில் உள்ளது.
6. சஷோல்கா ஆதித்யன்
கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணு வாகனமாகவும் பேறு கிட்டியது. தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவானை 'சுஷோல்கா ஆதித்யர்' என்று அழைக்கின்றனர்.
7. திரௌபதி ஆதித்யன்
காசியிலுள்ள காமேஸ்வரர் கோவில் பிராகாரத்தில் சூரியனுக்கு சன்னதி உள்ளது. சூரியன் கொடுத்த அட்சரம் பாத்திரத்தின் மூலம் அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக் கோவில் அட்சய பீடத்தில் உள்ளது. இதுவே திரௌபதி ஆதித்யன் கோவில்.
8. உத்திர அர்க்கர்
காசிக்கு வடக்கில் உள்ள அலேம்புரா எனும் இடத்தில் 'உத்திர அர்க்க குண்டம்' எனும் சூரியதீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம் என்று இதைக் கூறுவர். இங்கு ஒரு ஆணும், பெண்ணும் தவமிருந்து சூரியன் அருளைப் பெற்றனர். இந்த சுவாமிக்கு உத்திர அர்க்கர் என்று பெயர்.
9. கேசவாதித்யர்
காசியில் வருண் சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை சேர்த்து வழிபட்டதாக காசி கண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது இதை கேசவாதித்யர் என்பர்.
10. சாம்பாதித்யர்
கிருஷ்ணனின் மகன் சாம்பன். இவன் தொழுநோயால் பாதிக்கப் பட்டான். கிருஷ்ணர் சூரியனை வழிபடும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன் சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் இதை காணலாம்.
11. விருத்தாதித்யர்
விருத்தியர் எனும் வேதியன் சூரியனை வழிபட்டு முதுமை நீங்கி இளமை பெற்றார். காசியில் மீர் காட்டில் விருத்தாதித்யர் கோவில் உள்ளது.
12. மயூகாதித்யா
கங்கைக் கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் எனும் சூரியக் கோவில் உள்ளது. புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்ழரர், மங்களகௌரி எனும் பேரில் சிவபார்வதியை பிரதிஷ்டை செய்து பல லட்சங்கள் ஆண்டு தவம் இருந்தார். மனம் இறங்கிய சிவன், சூரியனுக்கு மயூகன் (அறியாதவன்) என்று பெயர் சூட்டினார்.
காசிக்குச் சென்றால் இந்த சூரிய கோவில்களையும் வழிபட்டு சகல நன்மைகளையும் பெறலாம்.