

நமக்கு சக்தியையும், ஆற்றலையும் தரக்கூடிய பூஜையறையில் (puja room mistakes) நாம் செய்யும் தவறுகள், நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுத்துவிடும். அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
நம் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது, நாம் பூஜையறையில் செய்யும் பிரார்த்தனையைப் பொறுத்தே அமைகிறது. எனவே, பூஜையறையை முறையாகப் பராமரிக்க வேண்டும். பூஜையறையில் விளக்கு, தட்டுகள் போன்றவற்றை வைத்திருப்போம். அப்படிப் பயன்படுத்தும் தட்டுகள் பிரத்யேகமானதாக தனித்துவமாக இருக்க வேண்டும். அடிக்கடி சமையலறையில் பயன்படுத்தும் தட்டுகளைப் பூஜைக்குப் பயன்படுத்தினால், அது எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும்; கடவுளின் அருள் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக ஐம்பொன்னாலான தட்டையோ அல்லது வாழை இலையையோ பயன்படுத்தலாம்.
பூஜையறையில் விளக்கேற்றும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும். அதேபோல் ஊதுபத்தி காட்டும்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும். 1, 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கேற்றினால், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை பலப்படும்; எந்தவொரு விஷயத்திலும் பிரிவு ஏற்படாது என்பது நம்பிக்கை.
பூஜையறையில் ஒரு சொம்பில் தண்ணீரை வைத்து, கடவுளின் நாமத்தையோ அல்லது மந்திரத்தையோ உச்சரிக்கும்போது, அந்தத் தண்ணீர் ஒரு சேமிப்புக்கலனாக (Storage) செயல்பட்டு ஆன்மீகச் சக்தியைத் தன்னுள் ஈர்க்கும். இந்த நீரைத் தீர்த்தமாக அருந்தலாம். அந்த நீரில் பூக்களைப் போட்டு வைப்பது இன்னும் சிறப்பு. சொம்பில் நீரை எப்போதும் நிறைவாக வைத்திருக்க வேண்டும்; குறைவாக வைக்கக்கூடாது.
சிலர் பூஜையறையில் நாணயங்களை வைத்திருப்பார்கள். இவற்றை கண்ணாடி, சில்வர் அல்லது மண் பாத்திரங்களில் வைக்கலாம். இந்த நாணயங்களுக்கு முன்பாக ஒரு சிறிய கண்ணாடி இருந்தால், அது நாணயங்களைப் பிரதிபலித்துக் காட்டும். இதன் மூலம் நாணயங்கள் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். இந்த நாணயங்களில் அழுக்கு சேரவிடாமல் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமியின் ஆசி கிடைத்து செல்வம் பெருகும். மேலும், இந்த நாணயங்களை எடுத்துச் செலவு செய்யும்போது, சுப காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பூஜையறையில் இரும்பு சம்பந்தமான பொருட்கள் இருக்கக்கூடாது. சில வீடுகளில் தேங்காய் உடைக்க அரிவாள்மனை அல்லது கத்தி பயன்படுத்துவார்கள். அந்த வேலை முடிந்தவுடன் அந்த ஆயுதங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல், உடைந்த சிலைகள் அல்லது சேதமடைந்த பொருட்களைப் பூஜையறையில் வைத்திருக்கக் கூடாது.