
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊராகிய மோகனூர் என்ற இடத்திலுள்ள காந்தமலைக் குன்றின் மீது பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலினுள், பழனியைப் போலவே, மேற்கு திசை நோக்கி நிற்கும் முருகர், தன்னுடைய வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் தோற்றமளிக்கிறார். வேறு எந்த தலத்திலும், இத்தகைய காட்சியைக் காண இயலாது. மோகனூர், நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
சிவபெருமான்-பார்வதியின் மகன் முருகன் நின்ற தலமாதலால், முதலில் 'மகனூர்' என அழைக்கப்பட்டு பின்னர் 'மோகனூராக' மாறியதெனக் கூறப்படுகிறது.
தவிர, மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருந்த காரணம், இந்த ஊர், வரலாற்றுக் காலத்தில் 'முகவனூர்' என இருந்ததாகவும் தெரிகிறது.
கோவிலுக்கு செல்ல கார் வழிப்பாதை மற்றும் ஏறிச் செல்ல 39 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 39 படிகள், 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும் குறிப்பதாக இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
கோவிலின் தல வரலாறு :
முருகப்பெருமான், தனக்கு மாம்பழம் கிடைக்காத காரணத்தால், பெற்றோரிடம் கோபம் கொண்டு பழனி நோக்கி செல்கையில், பார்வதி தேவி "முருகா! நில்!" என்று கூறவும், ஒரு வினாடி முருகர் நின்ற இடம்தான் மோகனூர் எனும் இத்திருத்தலம்.
பிரார்த்தனை :
செவ்வாய் தோஷத்தால், திருமணத் தடை உள்ளவர்கள், ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் கொண்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், மோகனூர் முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர். செவ்வாயன்று மஞ்சள் வஸ்திரம் சாத்தி, அரளிப்பூ மாலை அணிவித்து அநேக பக்தர்கள் வேண்டுகின்றனர்.
மற்ற ஆலயங்கள் :
அசலதீபேஸ்வரர் சிவன் கோவில் :
மோகனூரிலுள்ள சிவன் கோவிலில் இருக்கும் இறைவன் அசலதீபேஸ்வரர் ஆவார்.
இறைவி மதுகரவேணியம்பிகை ஆவார். காவிரி ஆற்றுக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், சுயம்புவாகிய சிவன் மேற்கு நோக்கியும், அம்பிகை கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
நவக்கிரங்கள், ராகு பகவான், நாக கன்னி சிலைகள், 63 நாயன்மார்கள் சிலைகள் போன்றவைகள் இக்கோயிலில் இருக்கின்றன. நாயக்கர் காலத்தில், சேந்தமங்கலம் பாளையக்காரர்களால் கட்டப்பட்டதெனக் கூறப்படுகிறது. வடக்கு, கிழக்கு, மேற்கு என்று மூன்று வாசல்கள் உள்ளன.
கோவிலில் எப்போதும், அணையாத தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. பரணி தீப வழிபாட்டுடன் தொடர்பு கொண்டது.
நாவலடியான் கருப்ப சுவாமி கோவில் :
மோகனுரிலுள்ள கருப்பசாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், நாவல் மரத்தடியில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் 'கருப்ப சுவாமி'; அம்மனின் பெயர் 'செல்லாண்டியம்மன்' ஆகும். பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், தங்களுக்கு நீதி கிடைப்பதற்காக மனதார நாவலடியான் கருப்பசாமி தெய்வத்தை வேண்டிக்கொண்டு, மூன்று எலுமிச்சம் பழங்களை இங்கேயுள்ள மூன்று வேல்களில் சொருகி வழிபடுகின்றனர். சிலர் இங்கே இருக்கும் அரசமரத்தடியில், செருப்பை காணிக்கையாக வைக்கின்றனர். வேண்டுதல்களை பேப்பரில் எழுதி மரத்தில் கட்டிவைக்கின்றனர்.
மோகனூர் சென்று அற்புதமான சின்ன பழனி முருகரையும், அசலதீபேஸ்வரரையும், கருப்பசுவாமியையும் தரிசித்து மக்கள் நலனிற்காக பிரார்த்தனை செய்து வரலாம்.!