
ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை மருதமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ் கடவுளான முருகன் என்றாலே பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் பொங்கி எழுவார்கள். முருகனின் அறுபடை வீடுகள் இருந்தாலும் ஆங்காங்கே முருகனுக்கு பல உயரமான சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
மலேசியாவில்தான் முதல் முறையாக மிகப்பெரிய முருகர் சிலை இருந்தது. இதனை காண பக்தர்கள் பலரும் அங்கே சென்று வருவார்கள். மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காகவே இந்த முருகர் சிலை இருந்தது.
தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் ஆலயத்தில் உள்ள முருகன் சிலை தான் உயரமான சிலையாக கருதப்படுகிறது. 146 அடி உயரம் கொண்ட இந்த முருகன் சிலை 2022ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
மலேசியாவில் இருக்கும் முருகன் 140 அடி உயரம் கொண்டது. தற்போது முத்துமலையில் இருக்கும் முருகன் சிலை தான், இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படுகிறது.
புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலில் இந்த சிலையை விட அதிகமானதாக 160 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது முருக பக்தர்களை பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில் தற்போது வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில்,
"சமீப காலமாக தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இதோடு பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட ஏழு முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. விரைவில் இங்கு லிஃப்ட் வசதி செய்ப்பட்டு, மே மாதம் முதல் முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். மருதமலை முருகன் கோவிலில் ஆசியாவிலேயே மிக உயரமான 160 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முழுவதும் கல்லால் ஆன இந்த சிலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. மேலும், கோவை வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்கப்பட உள்ளனர். இங்கு மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும்,"
என தெரிவித்துள்ளார்.