மூவுலகுக்கும் அருளிய திரிவிக்ரம அவதாரம்!

Moovulakukkum Aruliya thirivikrama Avatharam
Moovulakukkum Aruliya thirivikrama Avatharamhttps://en.rattibha.com

பெருமாளின் அவதாரங்களில் வாமன அவதாரம் பல்வேறு வகைகளில் சிறப்புக்குரியது. எம்பெருமாள் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபொழுது பூமியை அளந்த பெருமாளின் திருவடியை வழிபட்டு பூமாதேவி பெருமையுற்றாள். பிரம்மன் விண்ணுலகம் அளந்த பெருமாளின் திருவடியை பூஜித்து நற்பேறு பெற்றான். பிரம்மாவின் கமண்டல நீரால் பூஜிக்கப்பட்டு பெருமாளின் திருவடியில் இருந்து சிதறிய நீர் துளிகளே கங்கை, துங்கபத்ரா, சிலம்பாறு என புராணங்கள் போற்றுகின்றன. பெருமாள் மூன்றாவது அடியால் மாவலியை பாதாளத்தில் அழுத்தி அங்கு காட்சி தந்து பாதாள லோகத்திற்கும் அருள்புரிந்தார்.

இத்தனை சிறப்புமிக்க பெருமாளின் வாமன அவதாரத்தைக் காண வேண்டும் என்று தவம் இருந்த மிருகண்டு முனிவருக்காக மீண்டும் ஒருமுறை பெருமாள் வாமன அவதாரக் காட்சி கொடுத்த திருத்தலம்தான் திருக்கோவிலூர். பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. கோபாலன் என்னும் சொல்லே கோவாலனாக மாறி கோபாலன் வீற்றிருக்கும் திருக்கோவிலூராக உள்ளது.

‘தட்சிணபினாகினி’ எனப்படும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மூவுலகங்களிலும் நடைபெற்ற அவதாரச் சிறப்பு இங்கும் நடந்ததால் இத்தலம் மூன்று உலகங்களுக்கும் நிகராகிறது. இத்தலம் நடுநாட்டின் முதலாவது தலமான விண்ணுலகத்திற்கும் பாதாள லோகத்திற்கும் நடுப்பட்டு நின்றமையால் நடுநாட்டுத் தலம் எனவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. மேலும், இடைகழியில் பெருமான் ஆழ்வார்களுக்கு காட்சி கொடுத்ததால், ‘இடைக்கழி ஆயன்’ என்ற பெயரும் பெருமாளுக்கு உண்டு.

இங்கு உறையும் பெருமாளுக்கு திரிவிக்ரமன், விராட் புருஷன் எனும் நாமங்களும் தாயார் பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார் என்ற நாமங்களுடனும் அழைக்கப்படுகிறார்கள்.

இத்தல பெருமான் ஒரு காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை விண்ணை நோக்கித் தூக்கி கிழக்கு திசை பார்த்து நின்ற திருக்கோலத்தில் சங்கு சக்கரதாரியாக அருள்பாலிக்கிறார். உடன் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சாரியார், தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள் புடைசூழ ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளதை காணக் கண்கோடி வேண்டும்.

உத்ஸவ மூர்த்தி ஆயன், ஆயனார், கோவலன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி உள்ளார். தவிர, ஆழ்வார்கள், துர்கைக்கு தனி சன்னிதிகள் கொண்டு அழகிய கோபுரங்களுடன் நேர்த்தியான பிராகாரங்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் கர விமானம் அமைந்துள்ளது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணர் புகழ் பாடும் நவ துவாரகைகள்!
Moovulakukkum Aruliya thirivikrama Avatharam

பெண்ணையாறு, கிருஷ்ணன் தீர்த்தம், சுக்ர தீர்த்தம் என்ற தீர்த்த சிறப்புகளைக் கொண்டு அமைந்துள்ள இத்தலத்தில் மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், காசிபர், முதல் மூன்று ஆழ்வார்கள் ஆகியோர் இத்தல பெருமானை வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூன்று ஆழ்வார்கள் இயற்றிய தமிழ்ப் பாக்களால் போற்றப்பட்டுள்ள இந்தத் தலத்தைப் பற்றி பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் போன்றவற்றில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குனி மாதம் பிரம்மோத்ஸவம் 15 நாட்கள், பஞ்சபர்வ உத்ஸவம், ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உத்ஸவ விழாக்களுடன் அனைத்து மாதங்களின் பெருமாள் உத்ஸவங்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஸ்ரீராமநவமி, ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி, திருவாடிப்பூரம், ஆண்டாள் ஜயந்தி, திருக்கார்த்திகை தீபவிழா, வைகுண்ட ஏகாதசி என அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்தல பெருமானை வழிபடுபவர்கள் புத்திர பாக்கியம் மற்றும் அனைத்து செல்வங்களுடன் மன அமைதி பெறுகிறார்கள். தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள இக்கோயிலுக்குச் செல்ல திருச்சி, கடலூர், வேலூர் போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com