தீராத விளையாட்டுக் கலைஞன் ஈசன் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் இரண்டாவது திருவிளையால் நிகழ்ந்த இடம்தான் மதுரை தெப்பக் குளத்தின் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயில். ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, முத்து வீரப்ப நாயக்கர் என்பவரால் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டு, முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
மேலும், இவரை இந்திரேஸ்வரர் என்றும், ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்து வந்தனர். காலப்போக்கில், இங்கு வாழும் மக்கள், சிவபதம் அடைந்தவர்களுக்காக இந்த சிவ சன்னிதியில் ‘முக்தி விளக்கு’ ஏற்றி வழிபடலாயினர். இந்தக் காரணத்தினால் தற்பொழுது இந்த ஆலயம், ‘முக்தீஸ்வரர்’ என்ற பெயரால் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
தாயார் மகாலட்சுமியின் பிரசாதத்தை அவமதித்து துர்வாசரிடம் சாபம் பெற்ற இந்திரனின் வாகனமான ஐராவதம், ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. மீண்டும் தேவலோகம் செல்லும் முன்பு சிவ பூஜை செய்ய வேண்டும் என்று ஐராவதம் விரும்பியது. எனவே, தனது பெயரிலேயே மதுரையின் கிழக்கே ஒரு பகுதியை உருவாக்கி முக்தீஸ்வரரை பூஜித்து பின் இந்திர லோகம் சென்றது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.
சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் உறையும் ஈஸ்வரன் முக்தீஸ்வரர் என்றும் அம்பாள் மரகதவல்லி எனும் திருநாமங்களுடன் அருள்புரிகின்றனர். இந்த ஆலயத்தின் ஒரே இடத்தில் நின்று அம்பிகை, ஈசன் ஆகிய இருவரின் சன்னிதியையும் தரிசனம் செய்து வழிபடுவது சிறப்பு. இக்கோயில் நந்தி பகவான் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார்.
இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தமது பொன் நிறக் கதிர்களால் கருவறை சிவலிங்க திருமேனியைத் தொட்டு தரிசிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். இக்கோயில் கருவறைக்கு நேர் எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவி முக்தீஸ்வரப் பெருமானை தழுவிச் செல்லும். இந்த அரிய நிகழ்வு வருடத்தில் 2 மாதங்கள் நடைபெறுகிறது. முதலாவதாக மார்ச் மாதத்தில் 11ந் தேதி முதல் 23ந் தேதி வரை தினமும் காலையில் 6.35 மணி முதல் 6.45 மணி வரை ஒரு முறையும் 7 மணி முதல் 7.10 மணி வரை ஒரு முறையும் என ஒரு நாளைக்கு இரு முறை என 23ந் தேதி வரை சூரிய பூஜை நடைபெறும்.
இரண்டாவதாக, செப்டம்பர் மாதம் 19ந் தேதி முதல் 30ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை ஒரு முறையும், மீண்டும் 6.40 மணி முதல் 6.50 மணி வரை என சூரியக் கதிர்கள் ஆலய துவாரங்கள் வழியே நந்தி பகவானைக் கடந்து கருவறை சிவலிங்கத்தின் மீது படரும். தற்போது நிகழ்ந்து வரும் இந்த சூரிய வழிபாட்டினைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று துவாரங்களில் இருந்தும் வரிசையாக ஒவ்வொரு ஒளி கதிர்களாக மூலவர் மீது பட்டுச்செல்லும் நிகழ்வு 10 நாட்கள் வரை நடைபெறும். சந்தர்ப்பம் வாய்ப்பவர்கள் இக்கோயிலுக்குச் சென்று இந்த அதிசய நிகழ்வை தரிசிப்பதோடு, சிவபெருமானின் அருளோடு சூரிய பகவானின் கருணையையும் பெறலாம்.