மும்பை சித்திவிநாயகர் கோவில் ரகசியங்கள்: கோடீஸ்வர ஆலயம் உருவான நெகிழ்ச்சிகரமான பின்னணி!

Mumbai Ganesh Temple - சித்திவிநாயகர் கோவில்
Mumbai Ganesh Temple - சித்திவிநாயகர் கோவில்AI Image
Updated on

மும்பை நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகவும் விளங்குவது பிரபாதேவி (Prabhadevi) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம். நான் கண்டு வியந்த அந்த பிரம்மாண்டமான கோவிலின் சில வியப்பூட்டும் மற்றும் சிறப்பான தகவல்கள் இதோ:

வலம்புரி விநாயகர்:

பொதுவாக விநாயகர் சிலைகளில் தும்பிக்கை இடதுபுறமாக வளைந்திருக்கும். ஆனால், இங்குள்ள சித்தி விநாயகரின் தும்பிக்கை வலதுபுறமாக (வலம்புரி விநாயகர்) அமைந்துள்ளது.

இந்த வலம்புரி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், உக்கிரமானவராகவும் கருதப்படுகிறார். இவரைத் தூய்மையோடும், மிகுந்த பக்தியோடும் வழிபட வேண்டும். 'சித்தி' என்றால் நினைத்த காரியத்தை நிறைவேற்றுபவர் என்று பொருள்.

நெற்றிக்கண்ணும், நாகாபரணமும்:

இங்குள்ள விநாயகர் சிலையின் நெற்றியில் சிவபெருமானைப்போல ஒரு நெற்றிக்கண் செதுக்கப் பட்டுள்ளது. மேலும், அவரது வயிற்றைச் சுற்றிலும் ஒரு நாகாபரணம் (பாம்பு) காப்புப் போலக் காட்சியளிக்கிறது. அவரது இருபுறமும் 'சித்தி' மற்றும் 'புத்தி' ஆகிய இரு தேவிகளின் சிலைகளும் உள்ளன.

சிறிய கோவிலில் இருந்து பிரம்மாண்டம் வரை:

இன்று நாம் பார்க்கும் இந்த ஆறு அடுக்கு கோபுரக்கோவில் ஆரம்பத்தில் மிகச்சிறியதாக இருந்தது. 1801-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி லட்சுமண் விது மற்றும் தேவ்பாய் பாட்டீல் என்ற பெண்மணியால் இக்கோவில் கட்டப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாத தேவ்பாய், "இங்கு வந்து வேண்டும் மற்ற பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்" என்ற வேண்டுதலோடு தன் சொந்தப் பணத்தில் இக்கோவிலைக் கட்டினார் என்பது வரலாறு.

தங்கக் கூரையும் கவணிப்பும்:

கோவிலின் கர்ப்பக்கிருகத்தின் உள்வட்டக் கூரை முழுமையாகப் பங்காரத் தகடுகளால் (தங்கம்) மூடப்பட்டுள்ளது. இந்தத் தங்கக் கூரையின் கீழ் வீற்றிருக்கும் விநாயகரைத் தரிசிப்பதே ஒரு அலாதியான அனுபவம். மேலும், கோவிலின் மரக் கதவுகளில் அஷ்டவிநாயகரின் (விநாயகரின் 8 முக்கிய வடிவங்கள்) திருவுருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

வெள்ளி எலிகளிடம் வேண்டுதல்:

கோவிலின் உள்ளே பிரம்மாண்டமான இரண்டு வெள்ளி எலி சிலைகள் (விநாயகரின் வாகனம்) உள்ளன. பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளையும், ஆசைகளையும் இந்த எலியின் காதுகளில் ரகசியமாகக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிச் சொன்னால் அது நேரடியாக விநாயகரின் காதுகளுக்குச் சென்று நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

உலகப் பிரமுகர்களின் வருகை:

மும்பையின் 'பணக்காரக் கோவில்' என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு சாமானிய மக்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தினமும் வருகை தருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்தியா வந்தபோது தன் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்காரகி சதுர்த்தி:

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் நள்ளிரவு 2 மணி முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று இவரைத் தரிசிப்பார்கள்.

ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருவிழாபோல இருந்தாலும், குறிப்பிட்ட சில தினங்களும், அங்கு நடைபெறும் சிறப்புப் பூஜைகளும் மிகவும் புகழ்பெற்றவை. அவற்றின் விவரங்கள் இதோ:

விசேஷமான தினங்கள்:

செவ்வாய்க்கிழமைகள்: விநாயகருக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், மும்பையில் வாரத்தின் பிற நாட்களை விடச் செவ்வாய்க்கிழமை இங்குப் பெருங்கூட்டம் கூடும். அன்றைய தினம் விடியற்காலை 3:15 மணிக்கே நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு வரை தொடர்ந்து தரிசனம் நடைபெறும். பக்தர்கள் பலர் திங்கள் இரவே நடைப்பயணமாக வந்து வரிசையில் நிற்பது வழக்கம்.

சங்கடஹர சதுர்த்தி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் நான்காம் நாள் (சதுர்த்தி) இங்கு விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை பக்தர்கள் விரதமிருந்து விநாயகரை வழிபடுவர்.

அங்காரகி சதுர்த்தி: சங்கடஹர சதுர்த்தி எப்போதெல்லாம் செவ்வாய்க்கிழமைகளில் வருகிறதோ, அது 'அங்காரகி சதுர்த்தி' என்று அழைக்கப்படும். இது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே வரும். இந்த நாளில் சித்திவிநாயகரை வழிபட்டால், ஒரு வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் திரளுவார்கள்.

Mumbai Ganesh Temple - சித்திவிநாயகர் கோவில்
Mumbai Ganesh Temple - சித்திவிநாயகர் கோவில்AI Image

கணேஷ் சதுர்த்தி: ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா இக்கோயிலில் 10 நாட்கள் பிரம்மாண்டமாக நடக்கும். மகாராஷ்டிராவின் மிகப்பெரிய பண்டிகையான இதில், விநாயகருக்கு மிக விலையுயர்ந்த நகைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படும்.

மாகி கணேஷ் ஜெயந்தி: ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் வரும் விநாயகரின் பிறப்பு தினமாகக் கருதப்படும் இந்த நாளில், கோவிலில் 'ரதசோபயாத்ரா' (தேரோட்டம்) மற்றும் சிறப்புப் பூஜைகள் மிக விமரிசையாக நடைபெறும்.

தினசரி சிறப்பு ஆரத்திகள்:

கோவிலில் தினமும் சுவாமிக்கு 6 முறை ஆரத்திகள் செய்யப்படுகின்றன. இதில் கலந்துகொள்வது மனதிற்கு மிகுந்த அமைதியைத்தரும்.

காகட் ஆரத்தி (Kakad Aarti): காலை 5:30 மணிக்கு (செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 5:00 மணிக்கு) நடை திறந்தவுடன் செய்யப்படும் திருப்பள்ளி எழுச்சி போன்ற காலை வழிபாட்டு ஆரத்தி.

நைவேத்திய ஆரத்தி: மதியம் 12:05 முதல் 12:30 மணிக்குள் விநாயகருக்குப் பிரசாதம் படைத்துச் செய்யப்படும் ஆரத்தி.

இதையும் படியுங்கள்:
நீலமாக மாறும் பால் அதிசயம்! 2000 ஆண்டுகள் பழமையான 'தென் பத்ரி' மலை மண்டல பெருமாள் கோவில்!
Mumbai Ganesh Temple - சித்திவிநாயகர் கோவில்

தூப் ஆரத்தி (Dhup Aarti): மாலை 7:00 மணிக்குச் சாம்பிராணி மற்றும் நறுமணப் புகையிட்டுச் செய்யப்படும் பூஜை.

சந்தியா ஆரத்தி (Sandhya Aarti): மாலை 7:30 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறும் முதன்மையான மாலை நேர கூட்டுப் பிரார்த்தனை ஆரத்தி.

ஷேஜ் ஆரத்தி (Shejaarti): இரவு 9:50 மணிக்கு (செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 10:00 அல்லது 11:30 மணிக்கு மேல்) விநாயகரைத் தூங்க வைப்பதற்காகச் செய்யப்படும் அன்றைய தினத்தின் இறுதி ஆரத்தி. இதன்பின் கர்ப்பக்கிருகக் கதவுகள் அடைக்கப்படும்.

3. கட்டண மற்றும் சிறப்புப் பூஜைகள்:

பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தப் பல்வேறு பூஜைகளை இங்கு முன்பதிவு செய்து செய்கிறார்கள்.

ஆவர்தன் பஞ்சாமிர்த பூஜை (Aavartan Panchamrut Pooja): விடியற்காலையில் விநாயகருக்குப் பால், தயிர், நெய், தேன் கொண்டு செய்யப்படும் பிரதான அபிஷேகம்.

ஸ்ரீ சத்யவிநாயக மகாபூஜே (Shree Satya Vinayak Mahapooja): வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதியம் 1:00 மணியளவில் லட்டு மற்றும் பிரசாதங்கள் படைத்துச் செய்யப்படும் பிரம்மாண்ட பூஜை.

இதையும் படியுங்கள்:
யமுனை கரையில் வீற்றிருக்கும் படேஷ்வர்நாதர் ஆலயம் ரகசியங்கள்!
Mumbai Ganesh Temple - சித்திவிநாயகர் கோவில்

அதர்வசீர்ஷ ஹவன் (Atharvashirsha Havan): கணபதி அதர்வசீர்ஷ மந்திரங்கள் ஓதி, தடைகள் நீங்க யாகசாலையில் நடத்தப்படும் கணபதி ஹோமம்.

வாகனப் பூஜை (Vehicle Pooja): புதியதாக வாங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தினமும் காலை முதல் இரவு வரை சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இதை நாங்களும் செய்திருக்கிறோம்.

ஆதலால், இது போன்ற வழிகாட்டியுடன் நீங்களும் சித்தி விநாயகரை தரிசித்து பெருமை அடையுங்கள்.

முதன் முதலில் இக்கோவிலுக்குள் நுழையும்போது அங்கிருக்கும் நேர்மறை ஆற்றலும் (Positive Energy), அந்தப் பிரம்மாண்டமும் யாரையும் வியக்க வைக்கும். நான் வாரந்தோறும் இக்கோவிலுக்குச் சென்றபோது என்னை மிகவும் கவர்ந்த விஷயம், விசேஷ தினங்களில் நீண்ட வரிசையில் நின்றாலும் அருகம்புல் செம்பருத்தி பூவுடன் நின்றிருக்கும் அன்பர்கள் முந்திக்கொண்டு யாரும் தள்ளுமுள்ளு செய்யாமல் பொறுமையோடு அவர்கள் நேரம் வரும் வரை நின்று தரிசிப்பதுதான்.

மும்பை மாநகரத்திற்கே அடையாளமாகத் திகழும் இந்த ஆன்மீகத் தலத்தின் முழுமையான பின்னணியையும், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளையும் அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் அடுத்த மும்பை பயணத்தை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு, அந்தப் பிரம்மாண்ட கணபதியின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com