நீலமாக மாறும் பால் அதிசயம்! 2000 ஆண்டுகள் பழமையான 'தென் பத்ரி' மலை மண்டல பெருமாள் கோவில்!

Sadras Vishnu Temple - மலை மண்டல பெருமாள்
Sadras Vishnu Temple - மலை மண்டல பெருமாள்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள மலை மண்டலப் பெருமாள் கோவில் மிகவும் பழமையான விஷ்ணு ஆலயமாகும். மூலவர் கிரி வரதராஜ பெருமாள் சுமார் 6 அடி உயரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூமி தேவியுடன் கஜேந்திர மோட்சத்திற்குச் செல்லும் கோலத்தில் காட்சியருளும் தலம்.

கல்பாக்கத்திற்கு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளதால் இத்தல இறைவன் 'மலைமண்டல பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். 'தென் பத்ரி' என்று போற்றப்படும் இக்கோவில் கி.பி.850 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கடலில் குளித்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் இங்குள்ள 'அர்த்த சேது' எனப்படும் சதுரங்கப்பட்டின கடற்கரையில் குளித்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில் முன் மண்டபத்தில் மூலவர் சந்நிதி நுழைவாயிலின் இருபுறமும் யோக நரசிம்மரும், லக்ஷ்மி நாராயணரும் உள்ளனர். ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிரபையுடன் கூடிய லக்ஷ்மி நாராயணர் மிக அழகாக காட்சி தருகிறார்.

மூலவராகக் காட்சி தரும் கிரிவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சுமார் 6 அடி உயரத்தில் ஒரு காலை முன்வைத்தபடி கஜேந்திர மோட்சத்திற்கு செல்லும் நிலையில் காணப்படுகிறார்.மூலவர் சந்நிதியை அடைய 7 படிகள் ஏற வேண்டும். திருமலையின் புனிதமான 7 மலைகளைக் குறிக்கும் வகையில் இந்த 7 படிகள் ஏற வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பெருமாள் பக்தருக்கு சிவன் காட்டிய அற்புதம்: ஒரே இரவில் மாறிய ராகவாச்சாரியின் கதை!
Sadras Vishnu Temple - மலை மண்டல பெருமாள்

2000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. கருவறையில் உள்ள ஆஞ்சநேயர் விஜயநகர காலத்தைச் சேர்ந்த பஞ்சலோக திருவுருவச் சிலையாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் அபயஹத்தத்துடனோ அல்லது கை கூப்பிய படியோ நிற்காமல் கையில் பூங்கொத்துடன் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலில் ஆழ்வார்கள், ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ கோதண்ட ராமர் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதகள் உள்ளன.

ஸ்ரீ ராகவேந்திரர் இக்கோவிலில் இறைவனுக்கு தமது கைங்கரிய சேவையை ஆற்றியுள்ளார். அவரது மிருத்திகா பிருந்தாவனம் கோயிலுக்கு அருகில் உள்ளது. மேலும் அவரது சிலையும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிருந்தாவனத்திற்கு எதிரே ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின் சன்னதியும் அமைந்துள்ளது.

மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் தாயார்:

இத்தலத்தில் பெருந்தேவித் தாயார் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் அமர்ந்து சிம்மவாகினியாக காட்சி தருகிறாள். பொதுவாக அம்பிகை அல்லது துர்கை தான் சிம்மவாகினியாக காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் தாயார் சிம்ம பீடத்தில் எழுந்தருளி இருப்பது கோவிலின் தனிச்சிறப்பாகும்.

தனிக்கோவிலில் பெருந்தேவித் தாயார் காட்சியளிப்பது மேலும் சிறப்பாகும்.

Sadras Vishnu Temple - மலை மண்டல பெருமாள்
Sadras Vishnu Temple - மலை மண்டல பெருமாள்

அஷ்ட நாக கருடன்:

இங்குள்ள கருடனின் தலையும் பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தனிச்சிறப்பு. இங்குள்ள கருட பகவான் மிகவும் விசேஷமானவர். உடலில் 8 நாகங்களை ஆபரணமாக அணிந்து 'அஷ்ட நாக கருடனாக' காட்சி தருகிறார். கருடனின் தலையில் ஒரு பாம்பு, காதில் 2 பாம்பு, தோளில் 2 பாம்பு, மார்பில் 2 பாம்பு, இடுப்பில் 1 பாம்பு என அஷ்ட நாக கருடனாக காட்சியளிக்கிறார். ஆகவே நாக தோஷம் உள்ள பக்தர்கள் இவரை தரிசிக்க சர்பதோஷ நிவர்த்தி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இவர் வழக்கமான அஞ்சலி முத்திரை இன்றி கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார்.

சிறப்புகள்:

18 சித்தர்கள் வழிபட்ட தலம் என்று போற்றப்படும் இங்கு போக சித்தருக்கு பறக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொடுத்த கருட ஸ்தலமாக விளங்கி வருகிறது.

மலையப்பரை வழிபடுவது குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள பகைமையையும் தகராறுகளையும் பிரச்சனைகளையும் நீக்கி, வீட்டில் அமைதியைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அழகர்மலை உச்சியில் அரோகரா முழக்கம்: ஜூலை 5-ல் சோலைமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்!
Sadras Vishnu Temple - மலை மண்டல பெருமாள்

பிரார்த்தனைகள்:

நாக தோஷங்கள் மற்றும் ராகு கேது தோஷங்கள் நீங்குவதற்கு பக்தர்கள் இங்குள்ள இறைவனை வழிபடுகின்றனர். இங்குள்ள கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பாலானது நீல நிறமாக மாறுவது தனி சிறப்பாகும். பக்தர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேற்றுவதற்காக இவருக்கு நெய் தீபங்களை ஏற்றி, அமிர்த கலச கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையவும் பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு பூஜைகள்:

பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திர நாட்களில் இங்குள்ள யோக நரசிம்மருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகவும் பிரசித்தமாகும்.

கோவில் காலை 6:00 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

எப்படி செல்வது?

மாமல்லபுரம்-பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்து, வெங்காம்பாக்கம் சந்திப்பில் திரும்பி அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். அல்லது மாமல்லபுரம்- திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் சதுரங்கப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், ராகு-கேது மற்றும் நாக தோஷங்களால் ஏற்படும் திருமணத் தடைகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த ஆன்மீகப் பரிகாரத் தலத்தைப் பற்றிய முழுமையான வழிகாட்டுதலைப் பெறலாம். வீட்டில் அமைதியும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையவும் எந்த நாளில், எப்படி வழிபட வேண்டும் என்ற தெளிவான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com