

தமிழ்க் கடவுள் முருகருக்குத்
தரணி எங்கும் ஆலயங்கள்!
அத்தனையிலும் அவர் அமர்ந்து
அருள் வழங்கி வந்தாலும்
அறுபடை வீடுகள் என்றும்
அலாதியான சிறப்புக் குரியவை!
அப்பப்பா அவை ஒவ்வொன்றும்
அகில உலக மக்களுக்கு
உணர்த்தும் பல பாடங்கள்
உயர்வான பெரும் தத்துவங்கள்!
தெய்வானைதனைக் கரம் பிடித்த
திருப்பரங்குன்ற பதி தன்னில்
கனிவுடனே கந்தனை வழிபட்டால்
காதலும் கைகூடிக் களிப்பாக்கும்
கடினமின்றிக் குடும்பமும் தழைத்தோங்கும்!
அலை மோதி ஆர்ப்பரிக்கும்
அழகுமிகு திருச்செந்தூர் மண்ணில்
அசுரன் சூரபத்மனை அனாயாசமாய்
கொன்று வென்றிட்ட குமரனையே
கரங்குவித்துத் தொழுது வணங்கினால்
எதிரிகளால் இல்லாது போகுந்தீமை!
பரந்த கடலும் பாதுகாப்பளித்து
வணிகம் வளர வழிவகுத்திடுமே!
பழனி மலையினிலே பரிசுத்தமாகி
ஆண்டிக் கோலத்தில் ஆண்டவனாகி
நிற்கும் இளமுருகை நெஞ்சாரத்தொழுதிட்டால்
அறிவோங்கும்! விரதத்தின் பெரும்பலன்கள்
விருப்பங்கள் அனைத்துமே நிறைவேறும்!
தண்டாயுதபாணியைத் தம்மனதில் சுமப்பவர்கள்
நிராயுதபாணியாய் நின்றே வென்றிடுவர்!
அப்பா சிவன் தனக்கே
அறிவுசால் ‘ஓம்’எனும் மந்திரத்தை
ஓதிப் புகழ் படைத்த
ஒய்யார தலம் சுவாமிமலை!
இங்குள்ள முருகன் தன்னை
இதயத்தில் வைத்துப் போற்றினால்
கல்வியும் அறிவும் கடவுள்பக்தியும்
ஆறாய்ப் பெருகி ஓடும்
அத்தனையும் பக்தர்கள் வசமாகும்!
தணிகை மலை மீதினிலே
சாந்தம் மிகக் கொண்டே
அசுரர்களை அழித்த பின்னே
அமைதியுடன் அமர்ந்திருக்கும் அழகுப்பெருமானை
வாழ்த்தி வணங்கி வழிபட்டால்
ஆழ்ந்த அமைதியும் அளவற்றநிம்மதியும்
இல்லற வாழ்விற்கான இனியயோகமும்
வந்தே வளம் சேர்க்கும்
வாழ்வை என்றும் இனிதாக்கும்!
திருத்தணி என்று சொன்னாலே
எப்பணியும் இலகுவாய் எளிதாய்முடிந்திடுமே!
பழம் உதிரும் சோலையிலே
பாவை வள்ளி அருகினிலே
வீற்றிருந்து நீள் உலகில்
வியத்தகு இயற்கை பெருகிடவும்
மண வாழ்வில் இணைந்திருப்போர்
மகிழ்வாய்க் கர்ப்பம் தரித்திடவும்
அன்பு தழைத்தோங்கி அகிலத்தில் பெருகிடவும்
வழி செய்யும் வடிவேல்நீ
வையகம் முழுவதுமே உன்வழியில்!
சூது வாது அறியாதோர்க்கு
சுகம் சேர்க்கும் சண்முகம்நீ!
சூரனை வதம் செய்ததுபோல்
சூழ்ச்சிகளைக் களைபவன் நீ!
நல்லவரை வாழ வைக்கும்
நவ உலக நாயகன்நீ!
சஷ்டி விரதம் இருந்துன்னை
சதா நேரமும் நினைப்பவர்க்கு
சங்கடங்கள் தமைப் போக்கி
சாந்தம் தரும் தலைவன்நீ!
உந்தன் புகழ் பாடுவோர்க்கு
உயர்வினையே தருபவன் நீ!
(சஷ்டி விரதமிருந்து சண்முகனைத் தொழும் அன்பர்கள் அனைவருக்கும் இது காணிக்கை)