கோலாரம்மனை பக்தர்களால் நேரிலே பார்த்துக் கண்குளிர தரிசிக்க முடியாது என்பது தெரியுமா? கோவிலில் அம்மன் சிலைக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாகவே அம்மனின் திருவுருவத்தை பக்தர்கள் பார்த்து தரிசித்துவிட்டு போகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கர்நாடக மாநிலத்தில் கோலார் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்தான் கோலாரம்மன் கோவிலாகும். இந்த கோவில் திராவிட கட்டிடக் கலையைக் கொண்டு சோழர்களால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள மக்களால் பார்வதிதேவி கோலாரம்மனாக வணங்கப்படுகிறார். மைசூரை ஆண்ட மகாராஜாக்கள் அடிக்கடி கோலாரம்மனின் ஆசிர்வாதத்தை பெற இக்கோவிலுக்கு வருகை தந்ததாக சொல்லப்படுகிறது. இக்கோவிலில் அழகிய கலைநயத்துடன் உள்ள கோவில் சிற்பங்கள் அனைத்தும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டவையாகும்.
இந்த கோவிலில் கோலாரம்மனை தவிர மற்றொரு பெண் தெய்வமும் உள்ளது. 'செல்லம்மா' என்று சொல்லப்படும் தேள் தெய்வமாகும். செல்லம்மாவை வணங்கினால், தேள்கள் கொட்டாது என்றும் தேள்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.
இக்கோவிலில் உள்ள இன்னொரு அதிசயம் இங்கிருக்கும் உண்டியலாகும். சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருக்கும் உண்டியல் போல இல்லாமல் பூமியில் பெரிய குழித்தோண்டப்பட்டு பெரிய உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாணயத்தை இந்த உண்டியலில் போடும்போது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக குமிக்கப்பட்ட நாணயங்களின் ‘கிளிக்’ சத்தம் கேட்கும்.
இக்கோவிலில் உள்ள மஹிஷாசுரமர்த்தினியை இங்குள்ள மக்கள் கோலாரம்மனாக வழிபடுகிறார்கள். இந்த அம்மன் எட்டு கைகளைக் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை நேரடியாக தரிசிக்காமல், அம்மனுக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டி அதில் தெரியும் அம்மனுடைய பிரதிபலிப்பை பக்தர்கள் பார்த்து தரிசித்துவிட்டு செல்கின்றனர். ஏனெனில், கோலரம்மனின் சக்தியை நேரடியாக மக்களால் எதிர்க்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகிறது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையன்றே பக்தக்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இக்கோவிலின் நடுவிலே 'சப்த மாத்ரிக்கள்' என்று சொல்லப்படும் ஏழு பெண் தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
கோலரம்மன், செல்லம்மா, சப்த மாத்ரிக்கள் மிகவும் உக்கிரமான தோற்றத்தில் தரிசனம் தருகிறார்கள். அதனால், பக்தர்கள் உன்னிப்பாக கவனிக்கும்போது பயம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் தனித்துவத்தை உணர ஒருமுறை இங்கு சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.