புராணக் கதை - அதிகார அழகன்!

ஆண்டார்குப்பம்
ஆண்டார்குப்பம்

சிவபெருமானைக் காண கைலாயம் சென்றார் பிரம்மன். அங்கே விளையாடிக் கொண்டிருந்தார் பாலமுருகன். என்னதான் பிரம்மனாகவே இருந்தாலும் சிறுவனைக் கடந்து சென்றபோது, கவனியாமல் அலட்சியப் படுத்தலாமோ? கர்வத்தோடு கடந்து சென்ற அவரைத் தடுத்த முருகன், “நீர் யார்?” எனக் கேட்டான். அவரோ, “நான் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருக்கும் பிரம்மதேவன்” என்றார்.

அவரது தோரணையையும், அகந்தையுடன் பதிலளித்த முறையையும் கண்டு முகம் சுளித்த முருகன், பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணினார். “ஓஹோ! நீர் எதை வைத்து படைப்புத் தொழிலை மேற்கொள்வீர்? எது உமக்கு அடிப்படை?” என்று கேட்டார். அதற்கு பிரம்மன், “ஓம் எனும் பிரணவம்தான் அடிப்படை” என்றார்.

“அப்படியெனில் அதன் பொருளை விளக்கிச் சொல்லும்” என்று வினவ, பொருள் தெரியாமல் பிரம்மன் விழித்தார். எனவே, முருகன் அவரைச் சிறை வைத்தான். மேலான பொறுப்புள்ளவன்தானே பிறரிடம் கேள்வி கேட்க முடியும்? எனவே, பிரம்மாவின் முன் அதிகார தோரணையில் தமது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி, கேள்வி கேட்கிறார் முருகன். பெருமானின் அபூர்வமான இக்கோலத்தை தரிசிக்க, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் உள்ள ஆண்டார்குப்பம் செல்ல வேண்டும்.

அது என்ன ஆண்டார்குப்பம்? இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமானை பிற்காலத்தில் ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். ஒருமுறை தலயாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர் ஒருவர், இந்தத் தலத்தில் தங்கினார். மாலை நேரம், புனித தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட எண்ணினார். அங்கேயிருந்த ஆண்டிகளிடம், “நீராடும் துறை ஏதேனும் இங்கு உண்டோ?” எனக்கேட்டார்.

அதற்கு அவர்கள், “இங்கே தீர்த்தம் ஏதுமில்லை” என்றனர். அப்போது, ஆண்டிக் கோலத்தில் அங்கே வந்த சிறுவன் ஒருவன், அந்த பக்தரிடம், ‘தாம் ஒரு தெப்பத்தைக் காட்டுவதாக’க் கூறி அழைத்துச் சென்றான். ஓரிடத்தில்தான் கையில் வைத்திருந்த வேலால் நிலத்தைக் கீற, அங்கே தீர்த்தம் பொங்கிப் பிரவகித்தது. பக்தருக்கோ ஆச்சரியம். அதில் நீராடி நிமிர்ந்து பார்த்தால், கையில் வேலோடு முருகப்பெருமான் காட்சி அளித்தார். மனம் மகிழ்ந்த பக்தர், தாம் கண்ட அழகுக் கோலத்தை தினமும் காண ஆசைப்பட்டார். அதன்படியே முருகப்பெருமான் இங்கே பாலசுப்ரமணியராக எழுந்தருளினார். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகப்பெருமான் அருள்புரிந்த தலம் என்பதால் ஆண்டியர்குப்பம் என்றும், பின்னாளில் ஆண்டார்குப்பம் எனவும் மருவியது. இங்கே பெருமான் பிரம்மனை ஆண்ட கோலத்தில் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.

ஆண்டியர்குப்பம்...
ஆண்டியர்குப்பம்...

ஆண்டார்குப்பம் தலத்தின் சிறப்பே, அதிகாரக் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்தான். அழகான ராஜ கோபுரத்துடன் திகழும் சிறிய ஆலயம். ஆலயத்தை வலம் வருகையில், வரசித்தி விநாயகரை தரிசிக்கிறோம். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பால சுப்பிரமணியர் ஆயுதம் ஏதும் தாங்கியிராமல், இரு கைகளையும் இடுப்பிலே வைத்தபடி அதிகார தோரணையில் காட்சி தருகிறார்.அருகில் வெள்ளி வேலாயுதம் மற்றும் சேவற் கொடியை வைத்திருக்கிறார்கள். பெருமான் கவசம் சாத்தப்பட்டு அழகுறக் காட்சி தருகிறார். நெடிய வேலவனாக மூலவர் நின்ற கோலத்தில் காட்சிதர, அவர் காலடிக்குக் கீழ் இருபுறமும் இரண்டு யானைகள் வாகனம் போல் அமைந்துள்ளன. பெரு-மானை ‘அதிகார முருகன்’ என்கிறார்கள். அருணகிரிநாதர் இப்பெருமானைப் பாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பதின் பருவ இளைஞிகளே! இது உங்களுத்தான்! சரும ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்!
ஆண்டார்குப்பம்

இந்த முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு அதிகாரமுள்ள பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் பணிசிறக்க, பொறுப்-பான பதவி கிடைக்க, புத்திசாலிகளான குழந்தைகள் பிறக்க என்று வேண்டுதல்களை முன்வைத்து பெருமானுக்கு அபிஷேகம், சந்தனக் காப்பு செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

இத்தலத்தில் முருகப்பெருமான், காலையில் குழந்தை போன்றும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிக்கிறார். இங்கே முருகனுக்கு மயிலுடன், சிம்ம வாகனமும் உள்ளது. அம்பிகைக்குரிய வாகனம் சிம்மம். தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன், இங்கே முருகன் அருள்-புரிகிறார். அந்த சிம்ம வாகனமும், மயிலைத் தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணம், ஒன்பதாம் நாளில் வள்ளி திருமணம் ஆகியவை நடக்கின்றன.

கார்த்திகை மாத குமார சஷ்டியின்போது லட்சார்ச்சனை நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை விசேஷ நாட்கள்.

செல்லும் வழி: சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com