புராண கதைகள்: வரலக்ஷ்மி விரதம்!

வரலக்ஷ்மி விரதம் பற்றிய ஆன்மீக ரகசியங்களையும், புராண கதைங்களையும், நன்மைகளையும் முழுமையாக அறியுங்கள்.
வரலக்ஷ்மி விரதம்
வரலக்ஷ்மி விரதம்Image credit: Chatgpt
Updated on
deepam strip
deepam strip

ஒவ்வொரு வருடமும் ஆவணி அல்லது ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடப்படுகிறது. வரங்களையும் வளங்களையும் அள்ளித்தரும் வரலக்ஷ்மி விரதம் யாரெல்லாம் கடைபிடித்தார்கள், அவர்கள் பெற்ற வரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளலாமா?

ஒருமுறை சிவபெருமானும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். ஆட்டத்தின் முடிவில் இருவரும் தாங்களே வெற்றிபெற்றதாக வாதம் செய்தனர். அப்போது அங்கு வந்த சித்ரநேமி என்ற கணதேவனை நீதிபதியாக வைத்து சரியான தீர்ப்பு சொல்லும்படி கேட்டனர். சித்ரநேமி ஒருதலைப்பட்சமாக சிவபெருமான்தான் வென்றார் என்று சொன்னான்.

இதனால் கோபமடைந்த அன்னை பார்வதி,

“நீ பொய்யான தீர்ப்பு சொன்னதால், குஷ்ட ரோகியாகி அல்லல்படுவாய்,” என்று சாபம் கொடுத்தார்.

சித்ரநேமியின் நல்ல குணத்தையும் நேர்மையையும் பார்வதிக்கு எடுத்துச்சொன்னார் சிவபெருமான். அவனுக்கு சாப விமோசனம் அளிக்கும்படியும் சொன்னார். அதனால் பார்வதியும் சித்ரநேமிக்கு சாபவிமோசனம் அளித்தார்.

“எப்போது அழகிய தடாகத்தில் தேவ கன்னிகைகள் மிகவும் புண்ணியமான விரதத்தைக் கடைபிடிக்கிறார்களோ அப்போது உன் சாபம் நீங்கும்,” என்று அருளினார்.

சித்ரநேமியும் பல இடங்களில் சுற்றித் திரிந்து, ஒரு தடாகத்தின் கரையில் குஷ்ட ரோகியாக வாழ்ந்து வந்தான். ஆவணி மாதத்தில் வளர்பிறையில், பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் தேவமாதர்கள் வந்து விரதம் இருந்து பூஜை செய்தனர். அதைக் கண்டு, வணங்கி, மனமுருகி பிரார்த்தனை செய்த சித்ரநேமி சாபம் நீங்கப்பெற்று, உடல் பூரண குணமடைந்தான்.

வரலக்ஷ்மி விரதம்
வரலக்ஷ்மி விரதம்Image credit: Gemini AI

பின் தேவமாதர்களிடம் அவர்கள் செய்த பூஜையைப் பற்றிக் கேட்டறிந்தான்.

“மிகவும் சிறப்புவாய்ந்த, கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் வரலக்ஷ்மி விரதம் இது. அன்னை லக்ஷ்மியின் பூரண அருளைப் பெறவே இந்த பூஜையை செய்கிறோம்,” என்றனர்.

இதையும் படியுங்கள்:
செல்வமும் அமைதியும் அருளும் வரலட்சுமி விரதம்: வீட்டில் பூஜிக்கும் எளிய முறை!
வரலக்ஷ்மி விரதம்

சித்ரநேமியும் அந்தப் பூஜையில் கலந்துகொண்டதால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற்றான்.

வரலக்ஷ்மி விரதம் குறித்து ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவிக்கு எடுத்துச்சொன்னதாக கந்த புராணம் தெரிவிக்கிறது. அன்னை பார்வதி வரலக்ஷ்மி விரதம் இருந்து முருகப்பெருமானைப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

இன்னொரு கதையும் உண்டு.

வரலக்ஷ்மி விரதம்
வரலக்ஷ்மி விரதம்Image credit: Gemini AI

மகத நாட்டில் குண்டலபுரம் என்னும் ஊரில் சாருமதி என்ற பெண்மணி வாழ்ந்துவந்தாள். இவள் தன் குடும்பத்தை சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டாள். வயதில் முதிர்ந்த மாமனார் மாமியாரைக் கண்ணும் கருத்துமாகப் பேணினாள்.

அவளின் நல்ல மனத்தைக் கண்டு மகிழ்ந்த அன்னை மகாலக்ஷ்மி, அவள் கனவில் தோன்றி, வரலக்ஷ்மி நோன்பு பற்றியும், அதைக் கடைபிடிக்கும் முறை பற்றியும் சொன்னார்.

மறுநாள் சாருமதி தான் கண்ட கனவை குடும்பத்தினரிடம் தெரிவித்தாள். அவர்களும் மகிழ்வுடன் வரலக்ஷ்மி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சாருமதிக்கு உதவினர். அன்னை மகாலட்சுமி அருளியபடி வரலக்ஷ்மி நோன்பைக் கடைப்பிடித்து, சுபிட்சமான வாழ்வைப் பெற்றாள் சாருமதி. சாருமதியைப் பார்த்து அந்த ஊரில் மற்ற பெண்களும் வரலக்ஷ்மி நோன்பைக் கடைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இதனால் அந்த நாடே சுபிக்ஷமாக இருந்தது.

மன்னன் விக்ரமாதித்தன் தன் நாட்டை இழந்து அல்லல்பட்ட போது, வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டித்து இழந்த தன் ராஜ்ஜியத்தை மீட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வரலட்சுமி பூஜை: பூஜை நேரம், யாரெல்லாம் செய்யலாம்? எப்படிச் செய்யவேண்டும்? - முழுமையான வழிகாட்டி...
வரலக்ஷ்மி விரதம்

சிவபெருமானால் அன்னை பார்வதி தேவிக்கு சொல்லப்பட்ட வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றிச் சொல்பவர்களும், கேட்பவர்களும்கூட அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று சுபிட்சமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

வரங்களை அள்ளித்தரும் வரலக்ஷ்மி விரதத்தை நாமும் கடைப்பிடித்து, வாழ்வில் வளங்களைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம். சங்கடங்கள் விலகி, சஞ்சலங்கள் மறைந்து, கல்வியில் சிறந்து, வெற்றிகரமான பாதையில் பயணிக்க, வரலக்ஷ்மி உங்கள் அனைவருக்கும் அருள்புரியட்டும்.

logo
Kalki Online
kalkionline.com