கணித மேதை இராமானுஜர் உலகம் போற்றும் கணிதவியலாளர். எண் கணித கோட்பாடு, எல்லையற்ற தொடர்கள், தொடர்ச்சியான பின்னங்கள் மற்றும் கணித பகுப்பாய்வு ஆகியவற்றில் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். இவரது கணிதக் குறிப்புகள் இன்றளவும் கணிதவியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது.
தீவிர பக்தியின் பரிசுகள்: ஈரோட்டில் பிறந்த இராமானுஜனுடைய குலதெய்வம் நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார். இவர் நாமகிரி தாயாரின் மேல் தீவிர பக்தி கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் அவருடைய ஆழ்ந்த பக்தி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. ‘கணிதத் திறன்கள் மற்றும் நுண்ணறிவுகள் அனைத்தும் நாமகிரி தாயார் தமக்களித்த பரிசுகளே’ என்று அவர் நம்பினார். பல கணிதக் கண்டுபிடிப்புகளை தனது கனவில் வந்து நாமகிரி தாயார் கூறியதன் அடிப்படையில் வந்ததாக அவர் சொன்னார். சிக்கலான சூத்திரங்கள் மற்றும் தீர்வுகளை கனவிலேயே நாமகிரி தாயார் அவருக்கு வழங்குவாராம். தாயார் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை எண்ணற்ற சவால்களையும் தடைகளையும் தாண்டி கணித ஆராய்ச்சியை தொடர தேவையான தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியும் அவருக்கு அளித்தது.
நாமகிரி தாயார் குடிகொண்டுள்ள கோயில்: நாமகிரி தாயார், நாமக்கல்லில் உள்ள குடைவரைக் கோயிலான நரசிம்மர் கோயிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நாமகிரி தாயாரின் சிலை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போன்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜித்தால் சகல செல்வங்களும் கிட்டும். தீவினைகள் அகலும் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்தத் தாயாரின் பெயராலேயே ‘திருமறைக்கல்’ எனப்படும் நாமக்கல் திருத்தலம், முன்பு நாமகிரி என அழைக்கப்பட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னட ஹரிதாசர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த ஆலயத்திற்கு 1500ல் வருகை தந்து, தனது புகழ்பெற்ற, ‘சிம்ம ரூபனதா ஸ்ரீ ஹரி நாமகிரிஷனே’ என்ற பாடலை இயற்றினார் என்று கூறுகிறார்கள்.
நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. கருணையின் வடிவமான நாமகிரி தாயார், செழிப்பு, செல்வாக்கு, செல்வம், ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றை வழங்கும் அற்புதமான தெய்வம். தன்னை நேர்மையுடனும் பக்தியுடன் வழிபடுபவர்களை பாதுகாத்து வழிநடத்தி, தடைகளைத் தாண்டி வெற்றி அடைய உதவுகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்: இந்தக் கோயிலின் பிராதன மூர்த்தியான நரசிம்மர், ‘லக்ஷ்மி நரசிம்மர்’ என அழைக்கப்படுகிறார். பகவான் கர்ப்பக்கிரகத்தில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தரையில் ஊன்றி வீராசனத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு நான்கு கைகள் உள்ளன. ஒரு கை ஊதா நிறம் கொண்டுள்ளது. இது இரணியகசிபுவின் ரத்தத்தின் சாயல் என்று கூறப்படுகிறது. இந்த கர்ப்பக்கிரகத்திலேயே சிவபெருமான் மற்றும் பிரம்மாவின் சிலைகளும் இருக்கின்றன. மும்மூர்த்திகள் தலமாக இது கருதப்படுகிறது. வழக்கம் போல லட்சுமி தேவி நரசிம்மர் மடியில் இல்லை. மாறாக சுவாமியின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்.
இந்தக் கோயில் கட்டடக்கலைக்கு பெயர் பெற்றது. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. நாமக்கல் கோட்டையின் சரிவுகளுக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில் மலையிலிருந்து செதுக்கப்பட்டது. நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சனேயர், தனிக் கோயிலில் வீற்றிருக்கிறார். மிக பிரம்மாண்டமான ஆஞ்சனேயர் சிலைக்கு மேற்கூரை கிடையாது. நாமக்கல் ஆஞ்சனேயர் மிகவும் சக்தி வடிவானவர் என்று பக்தர்களால் பாராட்டப்படும் தெய்வமாக விளங்குகிறார்.