

30/05/26 அன்று நம்மாழ்வார் அவருடைய திருநட்சத்திரம். அதாவது வைகாசி விசாகம்.
நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவரும், வைணவ சமயத்தின் மூலப் பிரமுகராகவும் போற்றப்படுகிறார். நான்கு வேதங்களின் சாரத்தைத் 'திருவாய்மொழி' உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களாக உலகிற்கு அருளியவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்) அவதரித்தார்.
பிறப்பு: வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில், விஷ்வக்சேனரின் அம்சமாகத் திருக்குருகூரில் காரி - உடையநங்கை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் பிறந்தவுடன் உலக மாயை (சடம்) இவரைத் தீண்டாதவாறு தடுத்ததால், 'சடகோபன்' என அழைக்கப்பட்டார்.
திருப்புளிமரம்: நம்மாழ்வார் பிறந்த நாள் முதல் பால் அருந்தாமலும், அழாமலும் இருந்தார். பெற்றோர்கள் அவரை ஊரின் அருகிலுள்ள திருப்புளிமரத்தின் அடியில் விட்டுச் சென்றனர். ஆழ்வார் அந்த மரத்தின் பொந்தில் அமர்ந்து, 16 ஆண்டுகள் கண்விழிக்காமல் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்தார்.
மதுரகவியாழ்வார் தொடர்பு: அயோத்தியில் வாழ்ந்த மதுரகவியாழ்வார், தெற்கே ஓர் ஒளிக்கற்றைத் தெரிவதைக் கண்டு அதைத் தேடி திருக்குருகூர் வந்து நம்மாழ்வாரைச் சந்தித்தார். நம்மாழ்வார் இறை அனுபவத்தால் பாடல்களைச் சொல்ல, அவற்றை மதுரகவியாழ்வார் எழுதினார். நம்மாழ்வார் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள 1352 பாடல்கள் மிக முக்கியமானவை.
சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வகுளபரணன், குருகைபிரான் குரூகூர்நம்பி, பெருநல் துறைவன், குமரி துறைவன் என 38 பெயர்கள் இவருக்கு உண்டாம்.
நான்கு வேதங்களைச் செந்தமிழில் பாடியதால் 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று புகழப்படுகிறார்.
கம்பர் இயற்றிய சடகோபர் அந்தாதி என்னும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.
நம்மாழ்வார் இயற்றிய பிரபந்தங்கள் நான்கு.
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய் மொழி.
மேற்கொண்ட நூல்கள் யாவும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதத்தின் சாரம்சாமாக அமைந்து உள்ளதாகப் பெரியோர்கள் சொல்வதுண்டு.
திருவாய்மொழி 1102 பாசுரம்
திருவிருத்தம் 100 பாசுரம்
திருவாசி ரியம் 08 பாசுரம்
பெரிய திருவாந்ததி 87 பாசுரம்
மொத்தம் 1297 பாசுரங்கள்
இவர் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் பத்து நாள் உற்சவம் மிகப் பிரமாண்டமாக இருக்கும்.
இன்று திருவாய்மொழிப் பிள்ளை அவதார தினமும் கொண்டாடப்படுகிறது.
இவர் மணவாள மாமுனிகளின் குரு.
பிள்ளை லோகச்சாரியின் சீடர்.
இவருக்குத் திருமலை ஆழ்வார் என்கிற பெயரும் உண்டு.
இவருக்கு நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி மீது இருந்த பற்றினால் அவர் திருவாய்மொழியைப் பரப்பிய விதத்தில் இவருக்குத் திருவாய்மொழி பிள்ளை என்கிற நாமமே இன்றளவும் மிகப் பிரசித்திமாக உள்ளது.
இவர் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக நம்மாழ்வாருக்காகவும், திருவாய்மொழிகாகவும் அர்ப்பணித்தவர்.
பிள்ளை லோகசாரியார் ஆணைக்கு இணங்க பல இடங்களுக்குச் சென்று பல ஆச்சார்யாகளைப் பற்றி விஷயங்களைச் சேகரித்து அழகிய பெருமாள் நாயனாரிடம் கொடுத்தார்.
இவருடைய முழுமையான முயற்சியால் மட்டுமே மிக முக்கியப் பொக்கிஷமான ஈடு 36000 படி வியாக்கியானம் கிடைத்தது.
மணவாள மாமுனிகள் பிற்காலத்தில் மிகவும் இதைப் பிரதித்தமாகப் பரப்பினார்.
இன்று 30/05/2026 ஆழ்வார்களின் முதன்மை ஆன நம்மாழ்வார் மற்றும் ஆவர் மேல் தீரா பக்திக் கொண்டு திருவாய் மொழி, ஈடு பரப்பிய திருவாய்மொழிப் பிள்ளை அவதார தினம்.
இருவரது அவதார தினமும் ஒரே நாளில் அமைந்து இருப்பது மிகவும் சிறப்பு.
வாழ்க நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழிப் பிள்ளை நாமம்.