

தேவர்கள் இட்ட பிரம்மதண்டம்,
கோடாரியால் வெட்டுப்பட்ட தடத்துடன் சிவலிங்கம்,
ருத்ராட்சத்தைத் தாங்கியபடி சுயம்பு அம்மன்... எங்கே?
அர்ச்சுனம் - மருதமரம்
ஸ்ரீசைலம் – தலையார்ச்சுனம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் – இடையார்ச்சுனம்
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் – கடையார்ச்சுனம்
திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் (நாறும்பூ -மணம்மிக்க மலர்கள்) கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.
ஒரு சமயம், தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த இடம் தேடினார்கள். காசிக்கு நிகரான திருத்தலம் எதுவென்று சிவபெருமானிடம் கேட்டார்கள். சிவபெருமாள் பிரம்மதண்டத்தைத் தேவர்களிடம் கொடுத்து, அதைத் தரையில் போடும்படி கூறினார். தேவர்களும் பிரம்மதண்டத்தை தரையில் இட, அது கங்கை தொடங்கி பல்வேறு இடங்களில் பயணித்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் வந்து நின்றது. அந்த இடமே திருப்புடைமருதூர்.
காசிக்கு நிகரான திருத்தலம் இதுவே என சிவபெருமான் கூற, தேவர்கள் அங்கே சிவலிங்கத்தையும், பிரம்மதண்டத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து தேவலோகம் திரும்பினார்கள்.
தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், காலப்போக்கில் மரங்கள் வளர்ந்து, மண்மூடி மறைந்துவிட்டது. நாளடைவில் மருத மரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி மாறியது.
வீரமார்த்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒருமுறை வேட்டையாட இந்த வனத்திற்கு வந்தான். அவன் கண்ணில்பட்ட ஒரு மானை நோக்கி அம்பு எய்தான். மான் அங்கிருந்த ஒரு மருத மரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மன்னன் அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டான். வீரர்கள் கோடாரியால் மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த வீரர்கள் மன்னனிடம் தகவலைச் சொல்ல,
மன்னன் வந்து பார்த்து, உள்ளே வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருப்பதைக் காண்கிறான். தன் தவறுக்கு வருந்திய மன்னன், அங்கே ஆலயம் எழுப்பி, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்கிறான். அதுவே இப்போதிருக்கும் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் ஆலயம் ஆகும்.
தேவர்கள் வைத்து பூஜித்த பிரம்மதண்டத்தை இப்போதும் இக்கோவிலில் தரிசிக்கலாம். அதே போல் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தடமும், அம்பு பாய்ந்த தடமும் இப்போதும் இருக்கிறது. காயம்பட்ட சுயம்பு மூர்த்தியின் லிங்கத் திருமேனிக்கு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.
நாறும்பூநாதர் எங்ஙனம் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறாரோ, அதைப்போலவே அம்பிகையும் உளிபடா திருமேனியாக நின்றகோலத்தில் அருள்கிறார். இத்தலத்து அம்பிகையின் திருமேனி ருத்ராட்சத்தால் ஆன சுயம்பு திருமேனி. இந்த விக்ரகம் இமயமலையின் ஒரு பகுதியில் உள்ள கோமதி ஆற்றில் இயற்கையாகவே கண்டெடுக்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். இதனால்தான் அம்பிகைக்கு கோமதி என்ற பெயர் வந்தது என்கிறார்கள். அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்யும்போது ருத்ராட்சத் திருமேனியை நன்றாகத் தரிசிக்கலாம்.
கருவூர் சித்தர் இறைவனைத் தரிசிக்க வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அக்கரையில் நின்று தவித்த சித்தர், நாறும்பூநாதரைக் காண இயலாது போய்விடுமோ என்று வேதனைப்பட்டார்.
“நாறும்பூநாதா! உன்னைத் தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது. உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?” என்று இறைவனிடம் இறைஞ்சினார்.
பக்தனின் குரலுக்கு செவிசாய்க்கும் விதமாக நாறும்பூநாதர் சற்றே திரும்பி, சித்தர் சிரமப்படாமல் ஆற்றைக் கடந்து வர அருளினார். இப்போதும் இறைவன் நாறும்பூநாதர், பீடத்திலிருந்து சற்றே இடப்பக்கம் தலை சாய்ந்தபடி இருப்பதைக் காணலாம்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நவகைலாயங்களில் இத்திருத்தலமும் ஒன்று. இத்தலத்திற்கு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி போன்ற பெயர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளன.
இக்கோவிலுக்குப் பின்புறம் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில், தனி சந்நிதியில், ஆதியில் மான் ஒளிந்து லிங்கம் வெளிப்பட்ட மருத மரத்தின் அடிப்பகுதி உள்ளது. இதில் தேவேந்திரன் வணங்கியபடி காட்சியளிக்கிறார்.