

நடராஜர் நடனமாடும் சிலைகளில், அவர் பாதத்திற்கு கீழ் ஒரு குட்டி உருவம் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? வினோதமான உடலுடன், பயமுறுத்தும் கண்களோடு இருக்கும் அந்த உருவம் யார்? அதைப்பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம் (Nataraja Statue Meaning).
நடராஜரின் பிரமிக்க வைக்கும் நடனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவர் பாதத்தில் மிதித்துக்கொண்டிருக்கும் உருவம் யார் என்பதில் பெரிதாகக் கவனம் செலுத்தியிருக்க மாட்டோம். அந்த உருவம் தான் 'முயலகன்' அல்லது 'அபஸ்மரா' ஆகும்.
சுருங்கிய தோலோடும், அரக்க வடிவிலும், குழந்தை முகத்தோடும் இந்த உருவம் இருக்கும். யார் இந்த முயலகன்? ஏன் சிவபெருமான் இவர் மீது நடனமாட வேண்டும்? அந்த கதையை கொஞ்சம் பார்க்கலாம்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த பெரிய முனிவர்களின் மனதில் அவர்களைப் பற்றிய ஆணவமும் அகங்காரமும் அதிகமாக வளர்ந்துக் கொண்டே போனது. அவர்களின் அறிவு, ஆணவமாக மாறியது. அப்படிப்பட்ட எண்ணத்தோடு அவர்கள் வளர்த்த யாகத்தில் ஒரு வினோதமான உருவம் தோன்றியது; அதுதான் முயலகன். அறியாமையின் மறுஉருவமாக இருக்கும் இந்த முயலகன், மாயபிம்பங்களை உருவாக்கி மனிதர்களின் அறிவையும் ஆற்றலையும் அழித்தான்.
தன் மீதான கட்டுப்பாட்டை இழந்த முனிவர்கள், சிவபெருமானை நோக்கித் தவம் இருக்கிறார்கள். சிவபெருமானும் வருகிறார்; ஆனால், அழிக்கும் ரூபத்தில் இல்லாமல் நடனமாடும் 'காஸ்மிக் டான்ஸர்' (Cosmic Dancer) ஆக வருகிறார். முகத்தில் ஒரு புன்னகையுடன் நடனமாடிக் கொண்டே, அபஸ்மராவை நகர முடியாதபடி காலால் மிதிக்கிறார்.
அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிவபெருமான் மிதிக்கவில்லை; மாறாக, அவரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காகவே!
ஏனெனில், அறியாமையை முழுமையாக யாராலும் அழித்துவிட முடியாது. அபஸ்மரா என்று சொல்லப்படும் ஆணவம், அறியாமை, ஈகோ ஆகியவற்றை முழுமையாக அழிக்க முடியாது; ஆனால், கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான், நடராஜர் அதைத் தன் காலால் மிதித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நடராஜர் சிலைகளில் முயலகனின் தலை எப்போதும் சிவபெருமானின் வலப்பக்கத்தை நோக்கியே இருக்கும். இது அறியாமை ஒடுக்கப்பட்டு, நல்வழிப்படுத்துவதைக் குறிக்கிறது. சில சிலைகளில் முயலகன் தன் கையில் ஒரு பாம்பைப் பிடித்துக்கொண்டிருப்பார்.
இது மனிதனின் மனதில் இருக்கும் நச்சுத்தன்மையான எண்ணங்களைக் குறிக்கிறது. அறியாமை என்பது கர்ம வினையோடு தொடர்புடையது. ஆன்மாக்கள் தங்களின் கர்ம வினைகளைக் கடந்து ஞானத்தைப் பெற முயலகன் ஒரு கருவியாக இருக்கிறான்.
அடுத்த முறை நடராஜர் சிலையைத் பார்க்கும்போது, இதைக் கவனித்துப் பாருங்கள்!