

பொதுவாக கோவில்கள் சதுரம் அல்லது செவ்வக வடிவில் தான் அமைக்கப்படுவது வழக்கம். சில கோவில்கள் வட்ட வடிவிலும் அமைக்கப்படுவது உண்டு. உலகில் சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கோவில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தான். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் அவரது பெயரான திருக்குற்றால நாதர் என்ற நாமத்தினால் அறியப்படுகிறது.
சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் பல்வேறு கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலானது ஆறுகள் மலைகள் மற்றும் பிரபலமான நீர் வீழ்ச்சியின் மத்தியில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள அம்பாள் குழல்வாய்மொழி என்ற நாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்த போது அங்கு தேவர்கள் முனிவர்கள் குவிந்தனர். வட பகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதை சரி செய்ய சிவபெருமான் வேண்டுதலுக்கு இணங்க அகத்திய முனிவரும் உலகம் சமநிலை அடைய தென்பகுதிக்கு நடந்து வந்தார். இங்கு வந்த அகஸ்தியர் குற்றாலம் பகுதியில் இருந்த விஷ்ணு கோவிலை பார்த்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாறுவேடத்தில் கோவிலுக்குள் நுழைந்த அகஸ்தியர் விஷ்ணுவை சிவனாக மாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
தன் கையில் வைத்திருந்த தண்டத்தினால் விஷ்ணுவின் தலையை அழுத்தி சிவபெருமானாக மாற்றினார். இதனால் சிவபெருமானுக்கு தீராத தலைவலி ஏற்பட்டது. தலைவலியை போக்க அகஸ்தியரிடம் சிவபெருமான் வேண்டினார். இதற்காக அகத்தியர் தைலம் காய்ச்சினார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளினால் அந்த தைலம் காய்ச்சப்பட்டது.
இன்றும் சிவபெருமானுக்கு அபிஷேகத்தின் போது தலையில் சந்தனாதி தைலம் தடவப்படுவது வழக்கமாக உள்ளது. கோவிலில் காய்ச்சப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தைலத்தை நெற்றியில் தடவிக் கொண்டால் தீராத தலைவலி தீரும் என்பது ஐதீகம்.
குற்றாலம் ஐந்தாயிரம் அடி உயரமுள்ள மலையாகும். இந்த மலை மூன்று சிகரங்களை உடையது. எனவே திரி கூடமலை என்று சிறப்பு பெற்றது. பஞ்சம் தாங்கி என்ற சிகரம் ஐயாயிரம் அடிக்கு மேல் சிறிது உயர்ந்துள்ளது. மலையில் உள்ள காடுகள் செண்பக காடு என்று அழைக்கப்படுகின்றன. காட்டில் மூலிகைகளும் அரிய வகை மரங்களும் காணப்படுகின்றன.
செண்பகாதேவி அருவி, வட அருவி, ஐந்தருவி இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட அருவிகள் இந்த கோவிலுக்கு அருகில் உள்ளன. குற்றாலநாதர் ஆலயம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ளது. குற்றாலநாதர் கோவில் தென்தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற பதினான்கு சிவத்தலங்களில் ஒன்று.
குற்றாலத்தின் மெயின் அருவி செல்லும் பொழுது ஆர்ச்சை தாண்டி ஐந்தருவி செல்லும் வழியில் தேர் நிலைக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் சித்திர சபை உள்ளது.
சிவாலயங்கள் ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
சிதம்பரம் நடராஜர் ஆலயம் கனக சபை என்றும், திருவாலங்காடு சிவாலயம் ரத்தின சபை என்றும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி சபை என்றும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தாமிர சபை என்றும், குற்றாலம் குற்றாலநாதர் கோவில் சித்திர சபை என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக கோவில்களில் விக்கிர வழிபாடு தான் பிரதானமாக இருக்கும். சித்ர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். இங்கு இறைவன் ஓவியமாக அருள்பாலிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுர தாண்டவம் இந்த சபையில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. சித்ர சபையின் நடராஜ பெருமான் தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார் .
மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடக்கும். சபையில் இறைவன் திருநடனம் பெறும் காட்சியை கண்டு பிரம்மதேவன் ஆதிசிவனின் சொரூபங்களை சுவரில் எழுதி வைத்தார். இதனால் வியாசர் இதனை சித்திர சபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. சித்திர சபை குற்றாலநாதர் கோவிலுக்கு அருகில் தனி கோவிலாக உள்ளது.
சபையின் உட்சுவற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர் கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபனின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம் பைரவரின் பல்வேறு உருவங்கள், சனி பகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அழியாத மூலிகை வண்ணத்தில் வரையப்பட்ட இந்த சித்ர சபையை குற்றாலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான இடம் ஆகும். இந்த சபையில் ஓரத்தில் பெரியதொரு மரத்துளை உள்ளது அதில் வெளியே யாரும் எடுக்க முடியாதபடி மெலிதான மரக் குச்சி ஒன்று ஆணி போல உள்ளது.
குற்றாலநாதருக்கு வலப்பக்கம் தனியாக கோவில் கொண்டுள்ளார். அம்மை குழல்வாய்மொழி என்ற திருநாமத்தில். குழல்வாய்மொழி அம்பாள் உயரமான கர்ப்பக்கிருகத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.
முன் மண்டபம் மத்தியில் இறைவன் இறைவி பள்ளிகொள்ளும் மாடம் இருக்கிறது. குழல்வாய்மொழி என்றால் வேய் குழலின் ஒலி போன்ற இனிமையான சொல் உடையவள் என்பது பொருள். ஒலி தத்துவத்தை உள்ளடக்கிய பரம்பொருள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவிக்கு இங்கே தனியே பெருவிழாக்கள் கிடையாது. அவள் கோவில் முன் கொடி மரம் பலிபீடம் கிடையாது.
இந்த தலத்தின் விருட்சம் குறும்பலா. ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களில் தவப்பயனே பலாமரமாக குறும்பலாவாக திகழ்கிறது. இந்த பலா மரத்தின் அடியில் லிங்கம் ஒன்று உள்ளது. இந்த பலாமரத்தின் பலாப்பழத்தை அதன் தெய்வீக தன்மை கருதி மனிதர் யாரும் பறிப்பதும் இல்லை, புசிப்பதும் இல்லை.
கோவிலின் வடபுறம் பராசக்தி சன்னதி ஒன்று உள்ளது. யோக நிலையில் பராசக்தி இருப்பதால் யோக பீடம் என்று குறிப்பிடப்படுகிறது. குற்றாலம் அன்னை பராசக்தி மும்மூர்த்திகளையும் ஈன்ற தலமாதலால் இது பராசக்தி பீடமாக விளங்குகிறது.
தென்காசியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அழகிய பாதையில் அமைந்துள்ளது. குற்றாலம் குற்றாலநாதர் கோவில் சங்கு வடிவிலான இந்த கோவிலை நீங்களும் ஒருமுறை தரிசித்து குற்றாலநாதரையும், குழல்வாய் மொழி அம்மையையும் காணும் பேரும் பெற்று சகல நலங்களையும் பெறலாம்.