ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி அன்று அவசியம் தரிசிக்க வேண்டிய நவநீத கிருஷ்ணர் கோயில்!

ஸ்ரீ நவநீத கிருஷ்ணர்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணர்
Published on

காவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் அவதரித்த நாளைத்தான் கிருஷ்ண ஜயந்தி என்று கொண்டாடுகிறோம். தமிழர்களால் கண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் கிருஷ்ணரை அவரது ஜன்ம தினமான கிருஷ்ண ஜயந்தி அன்று அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

முக்கியமாக, மதுரையில் தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். கிருஷ்ணரை தங்கத் தொட்டிலில் வைத்து வீதி உலாவும், உறியடி உத்ஸவமும் சிறப்பாக நடைபெறும். இந்த நவநீத கிருஷ்ணர் சுயம்பு மூர்த்தமாகும். விநாயகர் இக்கோயிலில் நின்ற கோலத்தில் கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் தாங்கி நிற்பது வித்தியாசமான அமைப்பாகும். இவரது சன்னிதியில் கருடாழ்வார் மண்டியிட்டு அமர்ந்து வணங்கியபடி காட்சி தருகிறார்.

இக்கோயில் கிருஷ்ணருக்கு அவல், பாயசம் படைத்து வேண்டிக் கொள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தவிர, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கருவறையில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள் திருப்பதி பெருமாளின் அமைப்பில் காட்சி தருவது மிகவும் விசேஷம். முன் மண்டபத்தில் கிருஷ்ணருக்கு சன்னிதி உள்ளது. இவர் நடன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் ஆதியில் வழிபடப்பட்ட மூர்த்தி என்பதால் முதல் பூஜை இந்த கிருஷ்ணருக்கே செய்யப்படுகிறது. நவநீத கிருஷ்ணர் உத்ஸவராக அருள்கிறார். ஒவ்வொரு ரோஹிணி நட்சத்திரத்தன்றும் இவர் தொட்டிலில் புறப்பாடாவது விசேஷம்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல், பாயசம், சுக்கு, வெண்ணெய் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்தியம் செய்கின்றனர். அறிவாற்றல் மிக்க குழந்தை பிறக்க துளசி மாலை அணிவித்து அவல் பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். கிருஷ்ண ஜயந்தி அன்று மாலையில் கிருஷ்ணர் பிறக்கும் வைபவத்தை இத்தலத்தில் பாவனையாக நடத்துகின்றனர். மறுநாள் சுவாமி தங்கத் தொட்டிலில் புறப்பாடாகி உறியடி உத்ஸவமும் நடைபெறுகிறது.

மாற்றுத்திருக்கோல சேவை: ஆடிப்பூரத்தன்று சுவாமி ஆண்டாள் வேடத்திலும், ஆண்டாள் சுவாமி வேடத்திலும் பூப்பல்லத்தில் பவனி வருவது இக்கோயிலின் சிறப்பாகும். இதனை மாற்றுத்திருக்கோல சேவை என்று அழைக்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மாசி பௌர்ணமியில் கஜேந்திர மோட்சம் வைபவம், பெருமாள் வைகை எழுந்தருளல் மிகச் சிறப்பாக நடைபெறும். அன்றிரவு தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதேபோல் பங்குனி உத்திரத்தன்றும் சுவாமி வைகைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார்.

நவநீத கிருஷ்ணர் கோயில் கோபுரம்
நவநீத கிருஷ்ணர் கோயில் கோபுரம்

இக்கோயில் நுழைவு வாயிலில் மேற்கு நோக்கி விநாயகர் காட்சி தருகிறார். வியாசர் மகாபாரதத்தை கூற, விநாயகர் தனது ஒரு தந்தத்தை உடைத்து அதை எழுதினார். இதன் அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் விநாயகர் ஒரு தந்தம் ஒடிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இந்தக் கோவில் விநாயகரோ ஒடியாத இரண்டு தந்தங்களுடன் காட்சி தருகிறார். எனவே இவர் மகாபாரத காலத்திற்கும் முந்தைய மூர்த்தியாகக் கருதப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
பூனை ஆற்றல் கொண்ட மனிதர்களின் 9 தனித்துவமான பண்புகள்!
ஸ்ரீ நவநீத கிருஷ்ணர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெருமாள் பக்தர் ஒருவர் கிருஷ்ணருக்கு சிலை வடித்து பூஜித்து வந்தார். குழந்தையாக கிருஷ்ணனை வணங்கி வந்தவர், சுவாமியை பெரிய மூர்த்தியாக தரிசிக்க ஆவல் கொண்டு கிருஷ்ணரிடம் வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர் வைகை ஆற்றில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு பெரிய மூர்த்தியாக தாம் இருப்பதாகக் கூறினார். பக்தரும் அந்தச் சிலையை கண்டெடுத்து அவரை பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த பெரிய மூர்த்தியே மூலவராகி விட்டார். ஆனால், முதல் பூஜை, வழிபாடு இந்த கிருஷ்ணருக்கே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com