நவராத்திரியில் அம்மனுக்கு நவ வித அலங்காரங்கள்!

நவராத்திரி நவ கட்டுரைகள் - 4
Navarathri Amman Alangaram
Navarathri Amman Alangaram
Published on

ந்தியாவில் மிகவும் விமரிசையாக ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி என்னும் அம்பிகை வழிபாட்டு பண்டிகையாகும். முக்கியமாக, தமிழ்நாட்டில் இந்த நவராத்திரி பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பொம்மை கொலு அழகாக  ஒற்றைப்படை வரிசையில் படி கட்டி வைப்பார்கள். பண்டிகையின் முதல் நாளான மகாளய அமாவாசையை அடுத்த பிரதமை தினத்தன்று ஒரு கலசத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்து அதையும் கொலுவில் வைத்து தினசரி இரண்டு வேளை விமரிசையாக பூஜை செய்வார்கள்.

காலையில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா திரிசதி, அபிராமி அந்தாதி போன்ற அம்பிகைக்கு உரிய ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபாடு நடத்தி ஒரு பாயசத்தை பிரசாதமாக வைத்து நைவேத்தியம் செய்வார்கள். மாலையில் ஒரு சுண்டல் பிரசாதம் வைத்து கற்பூரம் காட்டி விட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பார்கள். எங்கெங்கோ வசிக்கும் உறவுமுறைகளையும் இந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பார்கள். இந்த நிகழ்வின்போது பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள். பெண் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு புதுத்துணி வாங்கிக் கொடுக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. நவராத்திரியை மூன்றாகப் பிரித்து முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்யப்படுகிறது.

முதல் நாள்: மது, கைடபர் என்னும் அசுரர்களை வதம் செய்த அம்பிகையின் அம்சமாக மகேஸ்வரி என்னும் ரூபத்தில் அலங்காரம். ஒவ்வொரு நாளும் கன்னி பூஜை உண்டு. முதல் நாள் இரண்டு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து புத்தாடை உடுக்கக் கொடுத்து. உணவளித்து சிறப்பிக்கப்படுகிறது. இன்று அரிசி மாக்கோலம் போடுவார்கள். மல்லிகை, செவ்வரளி மற்றும் வில்வத்தால் மாலை தொடுத்து அம்பாளுக்கு அணிவிப்பார்கள். இன்றைய வழிபாட்டின் பலன் செல்வ வளம் பெருகுதல், ஆயுள் பெருகி தீர்க்காயுசாக விளங்குதல்.

இரண்டாம் நாள்: மகிஷாசுரனை வதம் செய்வது போல ராஜராஜேஸ்வரி அலங்காரம். இன்றைய கன்னி பூஜையில் மூன்று வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து வணங்கி  வழிபடுவது வழக்கம்.  இன்று கோதுமை மாவில் கோலம் போட வேண்டும். முல்லை, துளசி, சாமந்தி மற்றும் சம்பங்கியால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும்.  இன்றைய வழிபாட்டின் பலன் நோய் தீரும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள்: வாராஹி (பன்றி முகம் கொண்ட அம்சமாக) வழிபட வேண்டும். இன்று கன்னி பூஜையில் நான்கு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்க வேண்டும். இன்றைய விசேஷமான கோலம் மலர்க் கோலம். இன்று வாசமிகு செண்பக மலரால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும். இன்றைய வழிபாட்டின் பலன் குறையில்லாத வாழ்வு அமையும்.

நான்காம் நாள்: மகாலட்சுமி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம். இன்றைய கன்னி பூஜையில் ஐந்து வயது சிறுமியை மகாலட்சுமியாக பாவித்து வணங்க வேண்டும்.  இன்றைய விசேஷமான கோலத்தை அட்சதையால் போட வேண்டும். செந்தாமரை மற்றும் ரோஜா மலர் மாலை தொடுத்து அம்பாளுக்கு அணிவிக்க வேண்டும்.  இன்றைய வழிபாட்டின் பலன் கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள்: மோகினி அலங்காரம். இன்றைய கன்னி பூஜையில் ஆறு வயது சிறுமியை வைஷ்ணவி தேவியாக பாவித்து பூஜித்து வணங்க வேண்டும். இன்று கடலை மாவால் கோலம் போட வேண்டும். இன்றைய தினத்தில் கதம்ப மாலை, மரிக்கொழுந்து என்று மணமுள்ள மாலைகளை அம்பாளுக்கு அணிவிக்க வேண்டும்.  இன்றைய வழிபாட்டின் பலனாக வேண்டும் விருப்பங்கள் நிறைவேறும்.

ஆறாம் நாள்: சண்டிகா தேவி அலங்காரம் (சர்ப்ப ஆசனத்தில் வீற்றிருப்பது போல்)  இன்றைய கன்னி பூஜையில் ஏழு வயது சிறுமியை காளிகாம்பாளாக வணங்கி வழிபட வேண்டும்.  இன்றும் கடலை மாவில்தான் கோலம்.  மரிக்கொழுந்து, செம்பருத்தி, சம்பங்கி மலர்களால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும்.  இன்றைய வழிபாட்டின் பலனாக கவலைகள் தீரும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஏழாம் நாள்: சாம்பவி (பீடத்தில் அமர்ந்திருப்பது போல) அலங்காரம். இன்றைய கன்னி பூஜையில் எட்டு வயது சிறுமியை பிராம்ஹியாக பாவித்து வழிபடவேண்டும்.  இன்று மலர்க்கோலம் போட வேண்டும். மல்லிகை, முல்லை மலர்களால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும். இன்றைய வழிபாட்டின் பலனாக ஒருவருக்கு விரும்பிய வரம் கிடைக்கும்.

எட்டாம் நாள்: நரசிம்ம தாரிணி என்று அம்பிகையை சிங்க முகத்துடன் அலங்கரித்தல். இன்றைய கன்னி பூஜையில் ஒன்பது வயது சிறுமியை கௌரி தேவியாக பாவித்து வணங்கி வழிபடுதல் வேண்டும். இன்றைய கோலம் தாமரைக் கோலம். வெண்தாமரை, சம்பங்கியால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும்.  இன்றைய வழிபாட்டின் பலனாக பிள்ளைகள் நற்பண்புகளுடன் வளர்வார்கள்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி ஏன் பெண்களுக்கு உகந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?
Navarathri Amman Alangaram

ஒன்பதாம் நாள்: அம்பிகையை பரமேஸ்வரியாக திரிசூலம் ஏந்தியது போல அலங்கரிக்க வேண்டும். கன்னி பூஜையில் பத்து வயது சிறுமியை சாமுண்டியின் அம்சமாக பாவித்து வணங்கி வழிபட வேண்டும். வாசனைப் பொடியால் கோலமிட வேண்டும். துளசி, மல்லிகை, தாமரை, பிச்சி, மரிக்கொழுந்து ஆகிய மலர் மாலைகளை அணிவிக்க வேண்டும். இன்றைய வழிபாட்டின் பலனாக குடும்பம் மட்டுமல்ல,  நாடும் நலம் பெறும்.

பத்தாம் நாள் விஜயதசமி: நவராத்திரி பூர்த்தியாகும் நாள். இன்று அம்பிகையை பார்வதியின் வடிவாக அலங்கரிக்க வேண்டும். மலர்க்கோலம் போட வேண்டும்.  பல விதமான மலர் மாலைகளால் அலங்கரிக்கலாம். இந்த வழிபாட்டின் பலனாக சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.

நவராத்திரி தினங்களில் சிவன் கோயில், அம்மன் கோயில்களுக்குச் சென்றால் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் இவ்வாறு நவ விதமாக அம்பாளை அலங்கரிப்பதை தரிசிக்கலாம். நவராத்திரி பண்டிகை அக்கம் பக்கத்திலுள்ளவர்களை பழக்கப்படுத்திக் கொள்ளவும், உறவுகளைப் பேணவும் உதவும் ஒரு சிறந்த கலாசார நிகழ்வாக நவராத்திரி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com