நெய்யால் மெழுகி கோலமிட்டு வழிபட குழந்தைப் பேறு தரும் அம்பிகை!

முல்லைவனநாதர்-கர்ப்பரட்சாம்பிகை
முல்லைவனநாதர்-கர்ப்பரட்சாம்பிகை

த்தனை செல்வம் இருந்தாலும் மழலை செல்வம் இருந்தால்தான் சந்ததிகள் விருத்தியாகி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது உண்மை. குழந்தைப் பேறு என்பது தற்காலத்தில் மாறிவரும் கலாசாரம் மற்றும் உணவு முறைகளால்  பிரச்னைக்குரிய ஒன்றாகிவிட்டது. குழந்தைப் பேறு வேண்டியும் கர்ப்பமடைந்த பெண்கள் சுகப்பிரசவம் நிகழ வேண்டியும்  தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மனிடம் வேண்டினால்  நிச்சயம் குழந்தைப் போறு கிடைப்பதுடன், சுகப்பிரசவமும் நிகழ்கிறது என்பது பக்தர்களிடையே நீண்ட நாள் நம்பிக்கையாக உள்ளது.

இத்தலம், கரு+கா+ஊர்  அதாவது கரு-தாயின் வயிற்றில் உள்ள கருவை, கா-காத்த, ஊர்-கருகாவூர் எனப் பெயரினை பெற்று  அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன், இறைவியை வழிபடுபவருக்கு குறை பிரசவம், கர்ப்ப வேதனை மற்றும் கருவுடன் மரணமும் ஏற்படுவதில்லை. காரணம், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள அம்பாள் கருவைத் தருவதும், கருவை காப்பதும் என அனுகிரகம் புரிகிறார். மேலும், இத்தலத்தில் ஊர்த்துவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவைக் காத்து குழந்தை பிறப்பினையும் ஏற்படுத்தியதாக புராண வரலாறு குறிப்பிடுகிறது . இத்தல நாயகன் கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர் எனவும் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை, கருக்காத்த நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

திருக்கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. வலப்பகுதியில் சர்வ சித்தி விநாயகர் தரிசனம், எதிரில் பாற்குளம்  மற்றும் வெளிப்பகுதியில் நந்தவனப் பகுதியுடன் உள்ள திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முல்லைவனநாதர் சுயம்பு மூர்த்தமாகும். மேற்புறம் லிங்கம் பிரித்வி பாகம், புற்றுமண்ணாலானது. இவர் புனுகு சட்டம் சாத்தப்பட்டு காட்சி அளிக்கிறார். ஆவுடையாருக்கே அபிஷேகம் ஆகிறது.

இங்கு எழுந்தருளியுள்ள சுவாமிக்கு முல்லைக்கொடி சுற்றிய வடு காணப்படுகிறது. இங்குள்ள  நந்தி ஒளிபடாத விடங்க முகூர்த்தமாக உள்ளது. அம்பாள் சன்னிதி  இடது பக்கத்தில் உள்ளது. இத்தலம் தீர்த்த சிறப்பு பெற்று விளங்குகிறது. இத்தீர்த்தலம், நீராடுபவர்களுக்கு உடற்பிணி, பிறவிப் பிணிகளை நீக்குகின்றது. இக்கோயிலில் பாற்குளம் என்று கருதப்படும் சீரகுண்டம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்கப்பட்டது சிறப்பு. திருக்கோயிலில் பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளது. இத்தலத்தின்  விருட்சம் முல்லை என்பதால் இறைவன் முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். முல்லைக்கொடி உட்பிராகாரத்தில் சண்டேஸ்வரருக்கும் திருமஞ்சன கிணற்றுக்கும் இடையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயை சமநிலைப்படுத்தும் 6 மசாலா பொருட்கள் தெரியுமா?
முல்லைவனநாதர்-கர்ப்பரட்சாம்பிகை

கர்ப்பரட்சாம்பிகையின் திருவடியில் சுத்தமான நெய்யால் அபிஷேகம் செய்து அந்த நெய்யை உண்டால் குழந்தை பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எந்த ஊரில் இருந்தாலும் தபால் மூலம் அல்லது கொரியர் மூலம் அந்த நெய்யை பெற்று பக்தர்கள் நலம் பெறுகின்றனர். மேலும், கருவுற்ற பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ கர்ப்பரட்சாம்பிகையின் திருவடியில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணையை கொரியரில் பெற்று பிரசவ வலி ஏற்படும் காலத்தில் வயிற்றில் தடவி வர சுகப்பிரசவம் ஏற்படுகிறது என்பது நம்பிக்கை.

குழந்தை இல்லாத பெண்கள் அம்பிகையின் சன்னிதி படியை சிறிது நெய்யால் மெழுகி  கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட, குழந்தை பேறு நிச்சயம் கிட்டும். அதன்படி குழந்தைப் பேறு பெற்றவர்களும் மீண்டும் இங்கு வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர். கரு காக்கும் நாயகியை நாமும் வணங்கி வழிபடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com