

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் “எங்க ஊர் சாமி எனும் தலைப்பில் உங்க ஊர் சாமியின் மகிமையை சொல்லுங்க’’ன்னு கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் நான்காவது கட்டுரை இதோ…
பிட்டாபுரத்தி அம்மன் ஆலயத்தின் தோற்றமும் பிட்டு படைக்கும் தனித்துவமான வழிபாடும்:
எங்க ஊரு சாமி நெல்லையப்பர் கோவிலுக்கு வட மேற்கு மூலையில் உள்ள கோவில் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப் படுத்துவதுதான் இந்த அம்மன் சிறப்பு அம்சமே. இந்த அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கையில் உடுக்கையும் சூலமும் இடது கைகளில் பாசமும் கபாலமும் கொண்டு அருள்பாலிக்கிறாள். அன்னையின் திருவடியில் கீழ் அரக்கன் விழுந்து கிடக்க அழகிய எழிலுடன் அருள்பாலிக்கிறாள்.
இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது தனி சிறப்பாகும். பிட்டு படைப்பதால் இந்த அம்மன் பிட்டாபுரத்து அம்மன் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் கோவிலிலேயே பிட்டு தயார் செய்வார்கள்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அரிசி வெல்லம் கொடுத்துவிட்டு பிட்டு தயார் செய்ய சொல்லி விடுவார்கள். அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்பு ஒப்பனையில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். தீபாராதனை முடிந்த பின்பு அம்மனுக்கு மாலைகளும் பூக்களோ அணிவிக்கமாட்டார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்கள் சீர் தட்டுதல் போன்றவற்றிற்கு பூசாரி கைகளில் வேர்கட்டி நெற்றியில் கறுப்பு மையிட்டு விடுவார்.
இந்துக்கள் மட்டும் இல்லாமல் எல்லா மதத்தினரும் வந்து சீர் தட்டி வேர் கட்டி வழிப்பட்டு செல்வார்கள். குழந்தை பிறந்தால் தீட்டு என்று பதினாறு நாட்கள் கோவிலுக்கு போகமாட்டார்கள்.
குழந்தைகளின் 64 வகை நோய்களை நொடியில் குணமாக்கும் பிட்டாபுரத்தி அம்மன்;
இந்த அம்மனுக்கு பிறந்த குழந்தையை கூட தூக்கி வந்து வேர்கட்டி செல்வார்கள் காலை மாலை இருவேளை களிலும் தீபாராதனை முடிந்த பிறகு அம்மனின் மந்திரம் நிறைந்த புனித நீரை சங்கு வைத்து முகத்தில் பூசாரி தெளிப்பார் உடலில் நோய் நீங்கி பீடை நீங்கி திருஷ்டி விலகும்.
வீட்டில் வர முடியாதவர்களுக்கு பாட்டிலில் நீரை வாங்கி சென்று தெளித்துகொள்வார்கள். சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு இங்கு உள்ள அகோர விநாயகமூர்த்தி முன் உணவு ஊட்டி மீதி உணவை நாய்களுக்கு கொடுப்பார்கள். பிறகு குழந்தை நன்றாக சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். இங்குள்ள அகோர விநாயகர் மூன்றடி உயரத்தில் இரண்டடி அகலத்தில் குறுகிய கால்களுடன் துதிக்கை இரு கைகள் செவிகள் சிதைத்து போய் அருள்பாலிக்கிறார்.
அவர் முன்பு அமர்ந்துதான் பூசாரி நோயுற்ற குழந்தைகள் பெரியவர்களுக்கு திருநீறு இட்டு கைகளில் கயிறு கட்டி மையிட்டு வேர்க்கட்டியும் செய்வார் நோய்கள் நீங்கிவிடும். கண் திருஷ்டி போய்விடும். குழந்தைகள் வளர்க்கும் அம்மன் என்ற பெயர் பெற்ற பிட்டா புரத்தி அம்மன். குழந்தைகளுக்கு நோய் ஏதாவது வந்துவிட்டால் இந்த பிட்டாபுரத்தியம்மனிடம்தான் வீடுகளில் வேண்டிக்கொள்வார்கள்.
பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இந்த பிட்டாபுரத்தி அம்மனிடம் அரளி மாலை சாத்தி தங்களது வேண்டுதல்களை அம்மனின் முன்பு வைத்து நிறைவேற்றிக் கொள்வார்கள்.
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் குழந்தைகளும் பெரியவர்களுமாக கூட்டம் நிரம்பி வழியும். திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் குழந்தைகளுக்கு நோய் ஒன்று என்றால் வேர் கட்டிக்கொண்டு குழந்தைகளின் நோயை தீர்த்து வைக்கும் இந்த பிட்டாபுரத்தி அம்மனை தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள்.
எங்க ஊரு சாமி பிட்டாபுரத்தி அம்மனை குழந்தையுடன் வந்து தரிசிக்காதவர்களே இருக்க முடியாது. இங்குள்ள குழந்தை மருத்துவர்களே தாங்கள் கொடுக்கும் மருத்துவத்தோடு இந்த கோவில் போய் சீர் தட்டி, வேர் கட்டி வாருங்கள் என்பார்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் ஆலயத்தின் முழுமையான வழிபாட்டு முறைகளையும், அங்கு வழங்கப்படும் வேர்கட்டுதல் மற்றும் சங்கு தீர்த்தத்தின் மருத்துவப் பலன்களையும் மிகத் துல்லியமாக அறிந்துகொண்டு, உங்கள் குடும்பத்தினருக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் பிணிகளை முற்றிலும் நீக்கிப் பேரானந்தம் பெறலாம்.