நேர்த்திக்கடனாக உருவ பொம்மை செலுத்தும் அதிசயக் கோயில்!

அழகுமுத்தையனார் கோயில்
அழகுமுத்தையனார் கோயில்
Published on

டலூரை அடுத்து தென்னம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அழகுமுத்தையனார் கோயில். வேண்டிய வரங்களை அருளும் அழகுமுத்தையனாரை திங்கள்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். கம்பீரமான கலைநயமிக்க கோபுரங்களுக்கு மாறாக இந்தக் கோயிலில் பல வண்ணங்களால் ஆன சிலைகள் பக்தர்களைக் கைகூப்பி வரவேற்பது தனிச் சிறப்பு.

366 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் என்னும் குழந்தையை ஒரு முனிவர் வளர்த்து வந்தார். சிவபெருமானும் மகாவிஷ்ணுவும்தான் முனிவரிடம் அய்யனாரை வளர்ப்பதற்காக ஒப்படைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த அய்யனார் குழந்தை பருவத்தில் அழகர் என்று அழைக்கப்பட்டார். ஐயனார் வளர்ந்த பகுதிதான் தென்னம்பாக்கம். முனிவரும் அய்யனாரை திறம்பட மாவீரனாக வளர்த்து வந்தார். முனிவருக்கு பூரணி, புஷ்கலை என்னும் இரண்டு மகள்கள் இருந்தனர். அப்போது ஒரு மந்திரவாதி மந்திரக்கட்டு என்னும் வித்தை மூலம் அந்தப் பகுதியின் சுற்றுப்புறத்தில் இருந்து சில சிற்றரசர்களை சிறைப் பிடித்து வசப்படுத்தி வைத்திருந்தான்.

அவனது மந்திரவித்தை மக்களுக்கு துன்பத்தை அளித்து வந்தது. இதனால் மக்கள் முனிவரிடம் முறையிட்டனர். அவர் ஐயனாரை அழைத்து, ‘மந்திரவாதியை அடக்கி மக்களைக் காப்பாற்று’ என்றார். இதையடுத்து அய்யனார் அந்த மந்திரவாதியை அழித்து சிறையில் இருந்த சித்தர்களை மீட்டார். அதன் பிறகு ஊர் மக்களுக்கு பயம் நீங்கியது. அய்யனாரின் வீரத்தைப் பார்த்து  வியந்த முனிவர் அவரிடம், ‘உனக்கு என்ன பரிசு வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு, ‘பூரணி, புஷ்கலை ஆகியோரை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும், என்னை விட பலசாலியான வயதில் பெரியவரான ஒருவரை எனக்கு காவலாளியாக நியமிக்க வேண்டும்’ என்று அய்யனார் கேட்டுக்கொண்டர். இதற்கு சம்மதம் தெரிவித்த முனிவர், அய்யனாரிடம் ‘என் மகள்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் வரக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். இதை அய்யனாரும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அய்யனாருக்கு முனிவர் தனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து வைத்து வீரபத்திரரை காவலாளியாக நியமித்தார்.

பின்னாளில் ஒரு சமயம் முனிவரின் ஒரு மகள் தலை முடியை விரித்து உலர வைத்துக் கொண்டிருந்தாள். இதனை தொலைவில் இருந்து முனிவர் பார்த்தபோது தனது மகள் அழுவது போலத் தெரிந்தது. தனது மகள் அழுவதால் கோபம் கொண்ட முனிவர், அய்யனாருக்கு அடுத்த பிறவியில் பிரம்மச்சாரியமாக பிறக்க சாபம் பெற்றார். அதன்படி, அவர் அடுத்த பிறவியில் மணிகண்டனாகப் பிறந்தார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு கூறுகிறது.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் பெரிய அளவில் யானை, குதிரை சிலைகள் உள்ளன. இதைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் பூரணி அம்மாள், புஷ்கலை அம்பாள் சமேத அழகுமுத்து அய்யனார் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். மேலும், அய்யனாரின் வலப்புறம் வீரபத்திரர் காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஐயனாருக்கு சிலை வைத்து நேர்த்தி க்கடன் செய்வது மரபாக இருந்து வருகிறது. அப்படி வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதும் அந்த வேண்டுதலுக்கு ஏற்ப சிலைகளை செய்து கோயிலில் வைத்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

இங்குள்ள சிலைகளே இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கு சான்றாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றன. அழகுமுத்து அய்யனார் சன்னிதிக்கு பின்புறம் அழகர் சித்தரின் தனிச் சன்னிதி உள்ளது. இந்தக் கோயிலின் பின்புறம் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர்  இங்குள்ள கிணற்றுக்குள் ஜீவ சமாதி அடைந்தார். அந்தக் கிணற்றை மூடி ஜீவசமாதியாக பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலின் பின்பக்கம் உள்ள அந்த ஜீவசமாதியை தரிசித்து வேண்டினால் முத்தையனாரின் அருளோடு அழகர் சித்தரும் அருள்புரிவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து முத்தையனாரின் கையில் உள்ள அரிவாளில் கட்டி வழிபாடு செய்வது வழக்கம். அதிலுள்ள கோரிக்கைகளை முத்தையனார் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்பைஸஸ் இன்ஃபியூஸ்ட் வாட்டர்  நன்மை தருமா?
அழகுமுத்தையனார் கோயில்

ஒவ்வொரு கோயில் கோபுரத்திலும் கலை நயமிக்க சிலைகளும் கோயில் சுவர்களில் பல ஓவியங்களும் புராணக் கதைகளை விளக்கும். ஆனால், அழகு முத்தையனார் கோயிலில் சுமார் 5000க்கும் மேற்பட்ட சிமெண்ட் சிலைகள் உள்ளன. தற்போது இந்தக் கோயிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன.

குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து மூன்று முறை வந்து சித்தரை வேண்டினால் 28வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேற இவர்கள் குழந்தை பொம்மை செய்து கோயில் முன்பாக வைக்கிறார்கள். இதேபோல், கை கால் பிரச்னை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்துகொண்டு அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாக வேண்டிக்கொள்பவர்கள் அது நிறைவேறியதும் மணமக்கள் போல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும் புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும் வில்லியனூர் வழியாகவும் தென்னம்பாக்கம் அழகு முத்தையனார் கோயிலுக்குச் செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com