சமீப காலமாக, தாகம் எடுக்கும்போது தண்ணீரை டம்ளரில் எடுத்து. 'மடக் மடக்'கென குடித்தது போய், தண்ணீரில் துளசி இலை, புதினா, இஞ்சித் துண்டு, பட்டை, எலுமிச்சை துண்டு போன்றவற்றை போட்டு நான்கைந்து மணி நேரம் அவை ஊறிய பின் அந்த மூலிகை இன்ஃபியூஸ்ட் (Infused) வாட்டரை குடிப்பது ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அதனால் உடலுக்கும் நற்பயன்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, பெருஞ்சீரக நீர் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், பட்டை சேர்த்த நீர் பெண்களின் PCOD நோயை குணமாக்கவும் உதவும். தற்போது இரண்டு வகை ஸ்பைஸஸ் சேர்த்த இன்ஃபியூஸ்ட் வாட்டர் உடலுக்கு மேலும் என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகள், இஞ்ஜியுடன் மஞ்சள் தூள், பட்டையுடன் பெருஞ்சீரகம் சேர்ப்பது போன்ற காம்பினேஷன்கள் ஆரோக்கியமான ஜீரணத்திற்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். உடலில் பித்த தோஷ அளவுகளில் ஏற்றத்தாழ்வு இருப்பின் அதை நீக்க உதவும். மெட்டபாலிசம் சரிவர நடைபெறச் செய்யும். வீக்கங்களைக் குறைக்கும். இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். மேலும், சளியைக் கரைக்கவும் உதவும்.
சுக்கு, கருப்பு மிளகு மற்றும் பிப்லி (Long pepper) சேர்ந்த காம்பினேஷன் தோஷ நிவர்த்திக்கும், வயிறு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானம் சிறக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், நோய் தாக்குதலின்றி உடல் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.
ஒரே குணம் கொண்ட இரண்டு ஸ்பைஸஸ் சேர்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; பெருஞ்சீரகத்துடன் சர்க்கரை சேர்ப்பது ஜீரணத்துக்கு ஊறு விளைவிக்கும்; காரத்தன்மையுடைய பூண்டும் வெங்காயமும் சேர்வது ஆரோக்கியமாகாது என ஆயுர்வேதம் கூறுகிறது.
மேற்கூறிய அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதரின் உடலுக்குள்ளும் வெவ்வேறு வகையான தாக்கத்தை உண்டுபண்ணக் கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னே முடிவெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.