நார்த்தாமலை சோழர் கால கற்றளிக் கோவில் விஜயாலய சோழீஸ்வரம்!

விஜயாலய சோழீஸ்வரம்
விஜயாலய சோழீஸ்வரம்
Published on

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் 9 வகையான மலை குன்றுகளால் சூழப்பட்ட கிராமம் நார்த்தாமலை. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன்மலைை ஆளுருட்டி மலை, பொம்மாடிமலை, மண்மலை மற்றும் பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலை குன்றுகள் உள்ளன. 

இங்கு வரலாற்று சிறப்புமிக்க பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் சோழர் காலத்து கற்கோவிலான விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடைவரை, பழியிலி ஈஸ்வரம் குடைவரை கோவில் ஆகியவற்றை கண்டு களிக்கலாம்.

கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து முத்தரையர்கள் ஆட்சி செய்தபோது அவர்களின் நேரடி கட்டுப்பாட்டிலும் பிறகு சோழர்கள், பாண்டியர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்த பகுதி இது. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வாழ்ந்த பகுதி இது. "நகரத்தார் மலை" என்பது மருவி நார்த்தாமலை என்றானது.

மேலமலை எனும் குன்றில் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் ஏறிச் செல்ல முதலில் பிள்ளையார் கோவிலும் அதற்கு பின்புறம் தலையருவி சிங்கம் என்னும் ஒரு சுனையும் உள்ளது. இந்த சுனையில் 20 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட குடவரை கோயில் ஒன்று நீருக்குள் உள்ளது. இதற்கு அருகில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் 1871 ஆம் ஆண்டு தொண்டைமான் ராணியால் சுனைநீர் இறைக்கப்பட்டு சிவலிங்கத்தை தரிசித்ததாக செய்தி உள்ளது.

இதற்கு மேல் ஏறிச் செல்ல விஜயாலய சோழீஸ்வரம் எனும் ஆலயத்தை தரிசிக்கலாம்.

இந்த ஆலயம் முற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது. நந்தியம் பெருமானுடன் அழகாக வீற்றிருக்கும் ஈசனும், துவாரபாலர்களும், கோவில் மண்டபத்தில் காணப்படும் அழகான வண்ண ஓவியங்களும் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

கருவறை விமானம் வேசரக் கலைப்பாணியில் வட்ட வடிவிலும், விமானத்தில் அழகான சிற்பங்களும் காணப்படுகின்றன. 

இக்கோவிலை இளங்கோவதி முத்தரையன் என்னும் மன்னர் கட்டினார். பின்பு மழை இடியினால் சில பகுதிகள் சிதைந்து விட மல்லன் விடுமன் என்னும் மன்னனால் விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.

விஜயாலய சோழீஸ்வரம்...
விஜயாலய சோழீஸ்வரம்...

விஜயாலய சோழீஸ்வரம் முழுவதும் கற்றளியாகும். அர்த்தமண்டபம், கோவிலைச் சுற்றிலும் 8 பரிவார சன்னதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கருவறையின் முன்புறம் உள்ள அர்த்தமண்டபத்தில் பிற்கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.

கோவிலில் இருந்த அழகிய வீணாதரர், சப்த மாதர் சிற்பங்கள் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன.

இங்கு நந்திக்குப் பின்புறத்தில் மேலும் இரண்டு குடைவரைக் கோவில்கள் காணப்படுகின்றன. "பதிணென் பூமி விண்ணகரம்" என்னும் திருமால் குடைவரை கோவிலும் ,"பழியிலி ஈஸ்வரம்" என்னும் சிறிய குடைவரைக் கோவிலும் காணப்படுகிறது.

பதிணென்பூமி விண்ணகரம் என்னும் விஷ்ணுவின் குடைவரைக் கோவில் முதலில் சமணர்களின் குடைவரையாக வெட்டப்பட்டு பிறகு திருமால் கோவிலாக மாற்றப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கோவிலின் கருவறையில் சிலைகள் எதுவும் காணப்படவில்லை. இக்குடைவரையின் மண்டபத்தை யானை, சிங்கம், யாளி போன்றவை தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சுட்டிப் பெண்ணின் அழகு ஓவியங்கள்! (ஓர் நேர்காணல்)
விஜயாலய சோழீஸ்வரம்

அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர திருமால் சிற்பங்கள் கையில் சங்கு சக்கரம் ஏந்தி நின்ற நிலையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. 

பழியிலி ஈஸ்வரம் என்னும் குடைவரைக் கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சாத்தன் பழியிலி என்பவரால் கட்டப்பட்டது.

பல்வேறு சிறப்பு மிக்க சிற்பங்களையும், கல்வெட்டு களையும், அற்புதமான கோவிலையும் பார்த்து ரசித்து வியக்க வேண்டிய கோவில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com