சுட்டிப் பெண்ணின் அழகு ஓவியங்கள்! (ஓர் நேர்காணல்)
மனிதனின் உள்ள உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான் கலை. ஆயக்கலைகள் 64 ல் சித்திரத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. சித்திரம் என்பதற்கு முதற் புள்ளியே கோலம்தான். அதை அழகாக போடக் கற்றுக் கொண்டால் அதிலிருந்து பல்வேறு விதமான ஓவியங்கள் வரையலாம். மண்டாலா ஓவியத்தை அழகாக வரைந்திருக்கும் ஒரு சிறுமியின் நேர்காணலை இதில் காண்போம்.
உங்கள் பெயர், ஊர், நீங்கள் படிக்கும் பள்ளி, பெற்றோர்கள் பற்றி கூறுங்கள்?
என் பெயர் எஸ்.ராக சஞ்சனா. நான் ஆதம்பாக்கத்தில் இருக்கும் டி.ஏ.வி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என் அம்மா சுகன்யா செந்தில்குமார். Fls Midth- இல் பணிபுரிகிறார். அப்பா செந்தில்குமார் ரெனால்ட் (Renault Nissan) Car கம்பெனியில் பணிபுரிகிறார்.
நீங்கள் வரையும் ஓவியத்தின் பெயர் என்ன? இதை வரையும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
நான் வரையும் ஓவியத்தின் பெயர் மண்டாலா ஓவியம். என் அம்மாவின் அம்மா அழகாக கோலம், ரங்கோலி போன்றவற்றை போடுவார். அவர் மங்கையர் மலரிலும் கோலப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கியிருக்கிறார். இப்பொழுதும் பல்வேறு விதமான கோலப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கிக் கொண்டு இருக்கிறார். பாட்டில் ஆர்ட் அதிகம் செய்வார். அவற்றைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அது போல் ஓவியம் வரைய ஆசை வந்தது. தினசரி வரைய ஆரம்பித்தேன். அதுவே இப்பொழுது பழக்கமாக ஆகிவிட்டது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மாதத்தில் ஒரு ஓவியம் என்று வரைவேன்.
இந்த ஓவியம் வரைவதற்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்னென்ன?
இதற்கென்று பிரத்தியேகமான பொருட்கள் ஒன்றும் அதிகம் இல்லை. முதலில் சாதாரண பென்சிலால் மெல்லிய கோடுகளை வரைவேன். பிறகு மண்டல ஓவியம் வரைவதற்கு என்று ஒரு பேனா வகை உள்ளது. அதுவும் கருப்பு மை உள்ளதுதான். அதனால் வரைந்து அழகு படுத்துவேன்.
இது போன்ற படங்களை வரைந்து போட்டிகளில் கலந்து பரிசு பெற்றிருக்கிறீர்களா? உங்கள் படங்களை பார்த்து உங்களை யாராவது உற்சாகப்படுத்தி இருக்கிறார்களா?
இது போன்ற ஓவியங்களுக்கு என்று இதுவரையில் எந்த போட்டியும் அறிவித்ததில்லை. ஆதலால் எனக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பும், இதை வெளியில் கொண்டு செல்லும் சந்தர்ப்பமும் இதுவரையில் கிட்டவில்லை. ஆனால் நான் வரையும் ஓவியங்களைப் பார்த்துப் பாராட்டி எங்கள் பள்ளியின் பிரின்சிபல் மேடம் அவர்களின் அலுவலக அறையில் இந்த ஓவியங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். மேலும் எங்கள் பள்ளியின் நோட்டீஸ் போர்டில் இதைப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் எனக்கு இன்னும் நிறைய படங்கள் வரைய வேண்டும் என்ற உற்சாகத்தை இது கொடுக்கிறது.
வருங்காலத்தில் ஓவியத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆசை?
Silhouette Art வரைந்து அதில் நிறைய கலர் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இன்னும் தஞ்சாவூர் ஓவியங்களை கற்றுக்கொண்டு அழகுற வரைய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.
உங்கள் எண்ணம் ஈடேற ,இன்னும் நிறைய படைப்புகளைத் தர உங்களுக்கு வாழ்த்துக்கள்! கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி சஞ்சனா.