அசோகவன சீதையை தரிசிப்போம் வாங்க!

ஆதிசக்தி சீதையம்மன் கோயில் இலங்கையில் மத்திய மாகாணத்தில் `நுவரெலியா’ என்னுமிடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
Nuwara Eliya to Seetha Eliya Temple
Nuwara Eliya Seetha Eliya Templeimg credit - Wikipedia
Published on

இராமனைப் பிரிந்த சீதை தவக்கோலத்தில் வாழ்ந்த இடம் அசோக வனம் எனக் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த இன்னல் யாருக்கும் வாழ்வில் நிகழக் கூடாது என்பதற்காக, அன்னை சீதை, அசோகவனத்தில் தெய்வமாக அருள்புரிகிறாள். அந்தத் தலம், 'ஆதிசக்தி சீதையம்மன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் இலங்கையில் மத்திய மாகாணத்தில் `நுவரெலியா’ என்னுமிடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இலங்கையில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் அசோக வனம் முழுக்க அசோக மரம் நிறைந்து காணப்படுகிறது. இங்குதான் இராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உள்ளூரில் இந்தக் கோயிலை `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்றும், ‘நுவரெலியா சீதாஎலியா’ என்றும் அழைக்கிறார்கள். `நுவரெலியா சீதாஎலியா’ என்பது சிங்களப் பெயர்.

தண்டகாரண்ய வனத்தில் இலட்சுமணனுடனும் சீதாதேவியுடனும் இராமபிரான் வனவாசம் மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது, இராவணன் தனது மந்திர தந்திரத்தின் மூலம் சீதையைப் புஷ்பக விமானத்தில் தூக்கிக்கொண்டு வந்து இலங்கையில் சீதா தேவியை அசோகவனத்தில் சிறை படுத்தி வைத்தான்.

அசோக வனத்தில், அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சீதா தேவிக்கென்றே பிரத்தியேகமாகக் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இங்கு அனுமனுக்கு தனிச் சந்நிதி உண்டு. சீதா தேவி ராம லட்சுமணர்களுடன் அருள்பாலிக்கிறார் என்ற போதும், இங்குப் பிரதான வழிபாடு அன்னை சீதா மாதாவுக்கே.

கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையெங்கும் சிவப்பு நிறப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெண்மையாக இருந்த மலர்கள் அனுமனின் கைப்பட்ட காரணத்தால் சிவப்பு நிறத்துக்கு மாறின என்று உள்ளூர் வாசிகள் சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 
Nuwara Eliya to Seetha Eliya Temple

கோயிலுக்கு வெளியே சிறு அனுமன் சந்நிதி ஒன்று காணப்படுகிறது. அனுமன் சந்நிதிக்குப் பின்னால் ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவி ஆகியோரின் விஸ்வரூப மூர்த்திகள் காணப்படுகின்றன. மூவரையும் வணங்கும் கோலத்தில் அனுமன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.

கோயிலுக்குள் நுழைகையில், `ஸ்ரீராமஜெயம்’ எனப் பெயர் பொறிக்கப்பட்ட ராஜகோபுர நுழைவாயில் அமைந்துள்ளது. அந்த ராஜகோபுரத்தின் இரண்டு தூண்களிலும் துவார பாலகர்களைப் போன்று கதையுடன் அனுமனே நிற்கிறார்.

நுழைவாயிலிலிருந்து, கீழிறங்கும் படிக்கட்டு வழியே கோயிலுக்குள் நுழையும்போது ராவண அருவி மலையிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கோயிலுக்குப் பின்பு விழும் `சீதா அருவி’ ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது. அசோகவனத்தில் சீதை இருந்த போது இந்த அருவியில் தினமும் நீராடி, கரையில் காணப்படும் பாறையில் கூந்தலை உலர்த்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆற்று நீர் எந்தவித சுவையும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு, சிறைவைக்கப்பட்ட சீதையின் கண்ணீர் மற்றும் அவளது சாபமே காரணம் என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சீதா தேவி வீற்றிருக்கும் அயோத்தி கனக் பவன் பற்றி தெரியுமா?
Nuwara Eliya to Seetha Eliya Temple

கோயில் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவர்களைத் தரிசித்துவிட்டு கீழே ஆற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டு வழியே சென்றால், ஆற்றங்கரையில் அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. அவை, அனுமனின் பாதத் தடங்களாகக் கூறப்படுகின்றன. சீதா தேவியைக் காண அனுமன் வானத்திலிருந்து குதித்தவேளையில் பாறையில் உருவான பள்ளங்களே இவை என்றும் மக்கள் கூறுகிறார்கள். அதற்கு அருகில் பாறைகளில் காணப்படும் பள்ளங்கள் சீதாதேவியின் கண்ணீர் தேங்கியவை என்றும் கூறப்படுகிறது.

சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே சீதையை வணங்கினால் அனைத்து குறைகளும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா போன்ற பல்வேறு வெளிநாட்டவரும் சீதை அம்மனை வணங்கி அவளது அருள் பெற்றுச் செல்கிறார்கள்.

இராமாயணத்தை முதன்முதலில் வால்மீகி எழுதியதும் அதற்கு `சீதாயணம்’ என்றே பெயரிட விரும்பினாராம். ஆனால், அன்னை சீதையே வால்மீகியிடம் வேண்டிக்கொண்டு அதை `இராமாயணம்’ என்று பெயரிட்டு வழங்குமாறு கூறினார் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குத் தாய் சீதை ராமாயணக் காவியத்தில் முக்கியத்துவம் பெறுகிறாள்.

இலங்கைக்குச் செல்பவர்கள் புராணத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சீதையம்மன் கோயிலைத் தரிசித்து சீதை அம்மனின் அருளைப் பெற்றுத் திரும்புவது தனி அனுபவமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
புராண கதை: சீதா தேவி அனுமனுக்குக் கூறிய கரடி கதை தெரியுமா?
Nuwara Eliya to Seetha Eliya Temple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com