பாத யாத்திரைக்கு புகழ்பெற்ற கதிர்காமத்தின் மகிமை!

Kathirkamam Murugan Temple
கதிர்காமம் முருகன் கோயில்https://ta.wikipedia.org

முருகப்பெருமான் அருளும் தலங்களுக்கு பாத யாத்திரை செல்வது பக்தர்களின் வழக்கம். நம் தமிழ்நாட்டில் பழநி பாத யாத்திரை பிரபலமாக இருப்பது போன்று இலங்கையில் உள்ள கதிர்காம பாத யாத்திரையும் பிரசித்தி பெற்றது. இலங்கையின் தலைநகரான கொழும்புவிலிருந்து சுமார் 285 கி.மீ. தொலைவில் சிங்களர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் உள்ளது கதிர்காமம் திருத்தலம்.

‘கத்தரகம’ எனும் சிங்களச் சொல்லே கதிர்காமம் ஆயிற்று . ‘கமா’ என்றால் கிராமம், ‘கத்தர’ என்றால் வெப்பம் நிறைந்த என்று பொருள். வெப்பம் நிறைந்த கிராமமான மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் இத்தலம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் அருகில் மாணிக்க கங்கை எனும் ஆறு ஓடுகிறது. முருகப்பெருமானை இங்கு நேரில் தரிசிக்க முடியாது, ஒரு திரையை கண்டுதான் வணங்க வேண்டும். திரைக்குள் இருப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாத பரம ரகசியமாகவே உள்ளது.

இருப்பினும், கதிர்காம முருகன் ஆலயத்தின் கருவறைக்குள்ளே புகழ் பெற்ற சித்தரான போகரால் உருவாக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த சடாட்சர யந்திரம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தக் கருவறையில் மந்திர பூசனை எதுவும் நிகழ்வதில்லை. ‘கப்புறாளை’ எனப்படும் சிங்கள இனத்தை சேர்ந்த பூசாரிதான் வாய்க்கட்டி பூஜை நிகழ்த்துகிறார். கப்புறாளைகளைத் தவிர, வேறு எவரும் அந்தக் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது மரபாக உள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களிடம் முருகப்பெருமானுக்கு எப்போதும் முதன்மை இடமுண்டு. குறிப்பாக, இலங்கையில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒற்றுமையுடன் ஒரே வரிசையில் நின்று இறைவனை நெஞ்சாரப் பிரார்த்தித்து வரும் ஒரே ஆன்மிகத் தலமாக விளங்குவது கதிர்காமத்தின் சிறப்பு. ஆதி காலத்திலிருந்தே இந்த இரு சமூகங்களுக்கும் கதிர்காமத்தில் வீற்றிருக்கின்ற முருகக் கடவுளுக்கும் இடையில் அற்புதமான பந்தம் நிலவி வருவதாகக் கூறுகிறது வரலாறு.

ஒரு காலத்தில், வட இலங்கையை ஆண்டு வந்த எல்லாளனுடன் போருக்குச் செல்லும் முன்பு  சிங்கள மன்னன் துட்டகைமுனு கதிர்காமத்திற்கு வந்து முருகனை வணங்கி, அதன் பிறகே அந்தப் போரில் வெற்றி அடைந்தான் என சரித்திரக் கதைகள் கூறுகின்றன. அதன் பின் துட்டகைமுனு மன்னனால் இந்தக் கோயிலுக்கு பல மானியங்கள் அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இன்றைய கதிர்காமம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நாகரிக மக்கள் வசம் வந்ததெனவும் அதற்கு முன்பு வேடர்களாலேயே அது பரிபாலிக்கப்பட்டு வந்தது எனவும் கூறப்படுகின்றது.

தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக இருப்பது வேல் வழிபாடு. முருகனின் ஆயுதமான வேலை முருகனின் அம்சமாகவே கண்டு தொழுதலே, வேல் வழிபாடாகும். இக்கோயிலில் ஆடி மாதம் ‘ஆடி வேல் விழா' என்ற பெயரில் பிரசித்தி பெற்ற திருவிழா நடைபெறும். அச்சமயம் ஆலயத்தில் இருந்து ஒரு தெய்வீகப் பேழை எடுத்துவரப் பெற்று அது யானை மீது பவனி வரும். ஆனால், அது யாரும் காணாத வகையில் கம்பளியால் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அல்சரை குணப்படுத்தும் 6 அற்புத உணவுகள்! 
Kathirkamam Murugan Temple

திருவிழா காலத்தில் வெகு தூரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளம், மேடு, கற்கள் தாண்டி பாத யாத்திரையாக வந்த வண்ணமே இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை உள்பட ஏழு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வருவதால்  இலங்கையின் மிகப் பெரிய பாத யாத்திரை நிகழ்வாக கதிர்காம யாத்திரை கருதப்படுகின்றது.

மேலும், இங்கு மாணிக்க விநாயகர், கண்ணகி, வள்ளிநாயகி சன்னிதி, தெய்வானை சன்னிதி, சிவபெருமான் முத்தலிங்க சுவாமி சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் பெரிய அரசமரம் ஒன்று உள்ளது. அதற்கு பக்தர்கள் பாலூற்றி வணங்குகின்றனர். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் மாணிக்க கங்கை எனும் ஆற்றில் உள்ள மீன்களின் செவுளில் காது குத்தி சிறு வளையம் அணிவிப்பர்.

‘வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ்ச்சி கதிர்காமம் உடையோனே’ என்று அருணகிரிநாதர் பாடியது போல பல சிறப்புகள் மிக்க கதிர்காமத்தோனை  வணங்கினால் தீராப்பிணிகள் தீரும். வாழ்வில் சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும் என்று மக்கள் நம்புகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com