குரோம்பேட்டை பச்சைமலை சிவன் கோவில்18 சித்தர்கள் வாழ்ந்த ஒரு குகை கோவிலாகும்.
தாம்பரம் சானடோரியம் பேட்டையில் உள்ள இந்த கோவிலுக்கு ஜனவரி 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் அத்திரி ஈஸ்வரர், அனுசுயா ஈஸ்வரி. கிழக்கு நோக்கிய நுழைவாயிலுடன் கூடிய கோவில் இது. அம்பாள் ஸ்ரீ அனுசுயா ஈஸ்வரி தனி சன்னிதியில் தெற்கு நோக்கி அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். கஜப்ருஷ்ட விமானம்.
இந்த மலையில் குறும்பர் இன மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். கற்கால கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மலையில் மூலிகைகள் இருப்பதால் ஆங்கிலேயர்கள் உலகத்திலேயே முதல் காசநோய் மருத்துவமனையை இங்கு அமைத்தனர். தூய்மையான பகுதி என்பதால் சானடோரியம் என்ற பெயரை வைத்தனர் சானடோரியம் என்றால் தூய்மையான பகுதி என்று பொருள்.
குரோம்பேட்டில் குமரன் குன்றத்தில் முருகன் வீற்றிருக்க, திருநீர் மலையில் விஷ்ணுவுக்கு கோவில் இருக்க, நடுவில் குரோம்பேட்டை சிக்னலுக்கு அருகில் உள்ள பச்சை மலையில் மிகவும் பழமையான சித்தர்கள் வழிபட்ட சிவன் கோயில் உள்ளது.
பல சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய இடம் இது. சஞ்சீவி உள்ளிட்ட அபூர்வமான மூலிகைகள் நிறைந்த மலை இது. பச்சை மலை அடிவாரத்தில் காச நோய்க்கான சித்த மருத்துவமனை ஒன்று 1928 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
சிவன் சன்னதிக்கு எதிர்ப்புறம் சிறிய பள்ளம் போன்ற இடத்தில் குகை போன்ற அமைப்பும் அதில் பாலாம்பிகை அம்மன் சன்னதியும் உள்ளது. வலம் வரும்போது விநாயகருக்கும், வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இங்கு பச்சைமலை குறத்தி அம்மன் என்ற பெயரில் சிறிய ஆலயம் ஒன்றுள்ளது. மேலே 108 படிக்கட்டுகள் அமைந்த மலைப்பகுதியில் ஏறிச் சென்றால் அழகிய சிவன் கோவில் ஒன்றுள்ளது. சித்தர்கள் இந்த இடத்தில் நவபாஷாணத்தால் சிவலிங்கத்தை செய்து வைத்து பூஜை செய்ததாகவும் பிற்காலத்தில் சிலர் அதை திருடிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
மலை உச்சியில் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் வள்ளலார், சிவ வாக்கியர், ஆஞ்சநேயர், அத்திரி மகரிஷி, அகஸ்தியர், நாகர்கள் சந்நிதி, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஆகியவை வானத்தை நோக்கி திறந்த வெளியில் காணப்படுகின்றன. இங்கு பதஞ்சலி முனிவர் பெயரில் தியான மண்டபம் ஒன்றுள்ளது.
நாகங்கள் பூஜை செய்யும் பாதாள அம்மன் சிலை ஒன்றுள்ளது. சுயம்புவாக தோன்றி துர்கையின் உருவம் உருவான அதிசயம் நிறைந்தது இந்த பச்சை மலை சிவன் கோவில்.
கோவில் காலை நேரங்களில் 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
எப்படி அடைவது?
கோவில் தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையின் பின்புறத்தில் பச்சை மலை என்ற சிறிய மலையில் உள்ளது. குரோம்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.